நடிகர் அஜித் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட போது விபத்தில் சிக்கியதாகவும், இருப்பினும் அவர் காயம் இன்றி நூலிழையில் உயிர்தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், நடிப்பு மட்டுமின்றி மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார் பந்தயங்களிலும் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் என்பது தெரிந்ததே.
சமீபத்தில் துபாயில் நடந்த கார் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து, இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்ததோடு, மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டிருக்கிறார். அந்தப் பந்தயத்தின் போது, அவரது கார் திடீரென விபத்துக்குள்ளானது.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அஜித் எந்தவித காயமும் இன்றி உயிர்தப்பினார் என்றும், அவர் நலமாக இருப்பதாகவும் அவரது அணியின் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.