ஆந்திராவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா தன்னைப் போலிஸ் கஸ்டடியில் வைத்துள்ளதாக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் என்.டி.ஆர் என்ற முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ரிலிஸானது. ஆனால் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதையடுத்து அதே என்.டி.ஆர்-ன் வாழ்க்கை வரலாற்றை லஷ்மி என்.டி.ஆர் எனும் பெயரில் ராம்கோபால் வர்மா படமாக எடுத்துள்ளார்.
இது என்.டி.ஆருக்கும் அவரது கடைசி மனைவியான லஷ்மிக்கும் இடையில் உள்ள உறவைப் பேசுவதாக அமைந்துள்ள படம் எனத் தெரிகிறது. அதனால் என்.டி.ஆர். குடும்பத்தில் உள்ளவர்கள் அவரது தொண்டர்கள் ராம்கோபால் வர்மா மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த படம் நாளை மறுதினமான மே 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதற்காக ஹைதராபத்தில் நடக்க இருந்த பிரஸ்மீட்டிற்கு செல்ல இருந்த ராம் கோபால் வர்மாவை போலிஸார் ஹைதராபாத் எல்லையிலேயே கஸ்டடியில் எடுத்து மீண்டும் விஜயவாடாவிற்கே திரும்ப சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இது குறித்து டிவிட்டரில் பதிவு செய்துள்ள வர்மா ’ ஆந்திராவில் ஜனநாயகம் இல்லை. உண்மையை சொல்ல முயற்சித்த என்னை போலீஸ் கஸ்டடியில் எடுத்து சமூக வலைத்தள பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன. அதனால் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆந்திராவில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.