20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்ட்ரேலியா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
மேற்கிந்திய தீவில் நடந்த மூன்றாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் 12 அணிகள் பங்கேற்றது. இந்த போட்டியில் ஆஸ்ட்ரேலியாவும், இங்கிலாந்தும் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி பார்படாசில் நேற்றிரவு நடந்தது. இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணி தலைவர் காலிங்வுட் முதலில் ஆஸ்ட்ரேலிய அணியை பேட் செய்ய அழைத்தார்.
இதன்படி வாட்சனும், வார்னரும் ஆஸ்ட்ரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். சைடுபாட்டம் வீசிய முதல் ஓவரிலேயே வாட்சன் (2) ஸ்வானிடம் கேட்ச் ஆனார். இதனால் ஆஸ்ட்ரேலியாவுக்கு துவக்கமே சோகமாக அமைந்தது. அடுத்த ஓவரில் வார்னர் (2) தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார்.
3வது ஓவரில் பிராட் ஹேடின் (1) சைடு பாட்டம் பந்துக்கு இரையானார். 8 ரன்னுக்குள் 3 பேர் வெளியேற்றப்பட்டதால் ஆஸ்ட்ரேலியா திணறி போனது. இங்கிலாந்து பவுலர்கள் அவ்வப்போது ஷார்ட் பிட்ச், பவுன்சராக வீசி ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.
பவர் பிளையான முதல் 6 ஓவர்களில் ஆஸ்ட்ரேலியா 24 ரன்களே எடுத்திருந்தது. இந்த உலக கோப்பையில் பவர் பிளையில் ஆஸ்ட்ரேலியா எடுத்த குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதன் பின்னர் அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் 27 ரன்களில் ஆட்டம் இழந்தார். முதல் 10 ஓவர்களில் ஆஸ்ட்ரேலியா 4 விக்கெட்டுக்கு 47 ரன்களுடன் பரிதாப நிலையில் காணப்பட்டது. அதுவும் முதல் பாதியில் வெறும் 2 பவுண்டரி மட்டும் அடிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் பிற்பகுதியில் டேவிட் ஹஸ்ஸியும், கேமரூன் ஒயிட்டும் ஜோடி சேர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மைக்கேல் யார்டி வீசிய 13வது ஓவரில் மட்டும் 2 சிக்சர், 2 பவுண்டரி என்று மொத்தம் 21 ரன்கள் குவித்தார். இதனால் ஆஸ்ட்ரேலியா கவுரவமான ஸ்கோரை நோக்கி முன்னேறியது. ஸ்கோர் 95 ரன்களை எட்டிய போது, கேமரூன் ஒயிட் 30 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதை தொடர்ந்து டேவிட் ஹஸ்ஸியுடன், அவரது சகோதரர் மைக் ஹஸ்ஸி கைகோர்த்தார். இருவரும் முடிந்தவரை அதிரடியாக ஆடினர். தனது 3வது அரைசதத்தை நிறைவு செய்த டேவிட் ஹஸ்ஸி 59 ரன்களில் ரன்-அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் ஆஸ்ட்ரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது. இதில் கடைசி 4 ஓவர்களில் மட்டும் 50 ரன்கள் விளாசப்பட்டது. மைக் ஹஸ்ஸி 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டேவிட் ஹஸ்ஸிக்கு 25 ரன்களில் ஒரு கேட்ச் தவற விடப்பட்டது. இதே போல் சில ரன்-அவுட் வாய்ப்புகளையும் இங்கிலாந்து பீல்டர்கள் கோட்டை விட்டனர். இல்லாவிட்டால் ஆஸ்ட்ரேலியாவை இன்னும் குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தி இருக்கலாம். இங்கிலாந்து தரப்பில் சைடுபாட்டம் 2 விக்கெட்டுகளும், ஸ்வான், லுக் ரைட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து 148 ரன்கள் எடுத்தால் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் லம்ப் (2) ஏமாற்றினாலும், 2வது விக்கெட்டுக்கு இணைந்த கீஸ்வெட்டரும், கெவின் பீட்டர்சனும் ஆஸ்ட்ரேலிய நம்பிக்கையை சிதைக்கும் வகையில், அவர்களது பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.
இந்த ஜோடியின் நேர்த்தியான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் வெற்றிப்பாதை எளிதானது. ஸ்கோர் 100 ரன்களை கடந்த பிறகு பீட்டர்சன் 47 ரன்னிலும், கீஸ்வெட்டர் 63 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். என்றாலும் இங்கிலாந்தின் வெற்றியை ஆஸ்ட்ரேலியாவால் தடுக்க முடியவில்லை.
இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாம்பியன் மகுடத்தை சூடியது. இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்ட பீட்டர்சனும், கீஸ்வெட்டரும் தென் ஆப்ரிக்காவில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 50 ஓவர் உலக கோப்பையை கூட வென்றதில்லை. எனவே அவர்களுக்கு இந்த நாள் சரித்திர சாதனை நாளாக அமைந்தது.
இந்த உலக கோப்பையில் எந்த ஒரு தோல்வியையும் சந்திக்காமல் தொடர்ந்து 6 வெற்றிகள் பெற்றிருந்த ஆஸ்ட்ரேலிய அணி கடைசியில் கோப்பையை கோட்டை விட்டது. 20 ஓவர் உலக கோப்பை மட்டும் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது.