Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு - ஒரு பார்வை

Advertiesment
20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு - ஒரு பார்வை
, வெள்ளி, 30 ஏப்ரல் 2010 (15:58 IST)
webdunia photo
FILE
மேற்கிந்திய தீவுகளில் 30ஆம் தேதி துவங்கும் ஐ.சி.சி. 3-வது இருபதுக்கு 20 உலகக் கோப்பை போட்டியில் 12 அணிகள் மோதுகின்றன. பொதுவாக இது போன்ற குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் அன்றைய தினம் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அது வெற்றி பெறும் அல்லது வெற்றி பெற்றுவிடும் என்று நாம் உறுதியாக நினைக்கும் அணி சொதப்பி வெளியேறும் வாய்ப்பும் உள்ளது.

இதில் இந்திய அணி "சி" பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது. நாளை மறு நாள் இந்திய அணி தன் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 2ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

முதலில் ஒன்றைக் கூறிவிடுவது சிறந்தது. இந்த முறை வங்கதேசம், ஜிம்பாப்வே, ஆஃப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய 4 அணிகளில் அயர்லாந்து தவிர மற்ற அணிகள் பலமாகவே உள்ளன.

ஏனெனில் பயிற்சி ஆட்டத்தில் ஜிம்பாப்வே ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அயர்லாந்து அணியை கடைசி 6 ஓவர்களில் 60க்கும் மேல் ரன்களைக் குவித்து வீழ்த்தியது.

எனவே வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் ஏதாவது அதிர்ச்சி வெற்றிகளைப் பெற்றுவிட்டால், இந்த உலகக் கோப்பை போட்டிகள் எவ்வாறு செல்லும் என்பதை கணிப்பது இன்னமும் கடினமான காரியமாகிவிடும்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் அதிகம் விளையாடியுள்ளனர். அதனால் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் அவ்வாறு கூறி விடமுடியாது என்பதற்கு சில சான்றுகளை முன்வைக்கலாம்.

முதலில் ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் விளையாடப்பட்ட மைதானங்களில் எல்லைக்கோடு தரதரவென்று முன்னால் பல அடிகள் நகர்த்தி வரப்பட்டு வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் சிகஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசித் தள்ளினர். மொத்தம் 600 சிக்சர்களும் 1,400க்கும் மேற்பட்ட பவுண்டரிகளும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளாசப்பட்டுள்ளது.

அது முழுக்க முழுக்க வணிகமயமான கிரிக்கெட், அதில் விளையாடியதை வைத்து இந்தியா வெல்லும் என்றெல்லாம் தப்புக் கணக்கு போட முடியாது.

ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சர்வதேச தரம் வாய்ந்த வீச்சாளர்களை எதிர்கொண்ட வகையிலும், சர்வதேச பேட்ச்மென்களுக்கு பந்து வீசிய வகையிலும் ஐ.பி.எல். அனுபவம் கை கொடுக்கும் என்று கூறலாம். ஆனால் இந்த அனுபவங்களை அந்த தனிப்பட்ட வீரர் எவ்வாறு வேறொரு மட்டத்திற்கு உயர்த்தித் தன்னை வளர்த்துக் கொண்டு அணியின் வெற்றிக்கான வீரராக உருமாறுகிறார் என்பதை வைத்துத்தான் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பலாபலன்களை நாம் கணிக்க முடியும்.

கடந்த முறை இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் மீதமுள்ள வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடியவ்ர்கள்தான், இருப்பினும் இந்திய அணி மண்ணைக் கவ்வியது.

எனவே நாம் இந்த ஐ.பி.எல். கதையை விட்டு விடுவோம்.

ஒரு அணியாக இந்திய அணியை அளவிடும்போது பேட்டிங் வரிசையை விட பந்து வீச்சு வரிசை பலமாக உள்ளது போல் தெரிகிறது.

ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், ரவிந்தர் ஜடேஜா, பிரவீண் குமார் என்று நாம் இந்த வரிசையை எதிர்பார்க்கலாம். பேட்டிங்கில், கம்பீர், ரோஹித் துவக்கத்தில் களமிறங்க, ரெய்னா, தோனி, யுவ்ராஜ் சிங், யூசுப் பத்தான், கார்த்திக் அல்லது முரளி விஜய் என்று பேட்டிங் வரிசை அமையும்.

அல்லது கம்பீரும் கார்த்திக்கும் துவக்கத்தில் களமிறங்கினால், கூடுதல் பேட்டிங் என்று முடிவு செய்யப்பட்டால் முரளி விஜயையோ அல்லது கூடுதல் பந்து வீச்சாளர் என்றால் சாவ்லா அல்லது நெஹ்ரா ஆகியோரை சேர்க்கலாம்.

தோனியின் திறமையெல்லாம் எந்த மாதிரியான வெற்றிக் கூட்டணியை அவர் தேர்வு செய்யப் போகிறார் என்பதில் பாதி வெற்றி தீர்மானிக்கப்பட்டுவிடும்.

அந்த கூடுதல் பேட்டிங் அல்லது பந்து வீச்சாளர் இடத்தில் இர்ஃபான் பத்தானோ அல்லது விராட் கோலியோ இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

கடந்த முறை தோனி நிறையத் தவறுகளைச் செய்தார். கள வியூகம், பந்து வீச்சு மாற்றம் என்று அவர் நிறைய குழப்பத்தில் கடந்த முறை இருந்தார். ஆனால் இம்முறை சென்னை சூப்பர் கிங்ச் அணியை அவர் சாம்பியன் பாதைக்கு அழைத்து சென்றது அவரது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மற்ற அணிகளில் ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகியவற்றில் நியூசீலாந்து, ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் உண்மையில் பலம் வாய்ந்ததாக உள்ளன. மேலும் இந்த அணிகள் அதிக சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் ஆஸ்ட்ரேலியா இந்த சீசனில் தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய அணி ஒரு நம்ப முடியாத அணி. நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நியூஸீலாந்து அணிக்கு எதிராக 31 ரன்களில் 9 விக்கெடுகளை இழந்து 124 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் தோல்வியடைந்தது.

ஆனால் மற்றொரு நாளில் அந்த அணி கெய்ல், போலார்டின் அதிரடியில் 200 ரன்களைக் கூட துரத்தலாம். எனவே இது ஒரு கணிக்க முடியாத அணி.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை கணிக்க முடியாத அணியாக இருந்தாலும் இந்தத் தொடரைப் பொறுத்த வரை பந்து வீச்சில் ஆஸ்ட்ரேலியா அணிக்கு இணையாக அது உள்ளது.

மொகமட் ஆமீர், மொகமட் ஆசிப், அஃரீடி, அஜ்மல் என்று ஒரு கலந்த பந்து வீச்சுத் திறமை உள்ளது. அந்த அணி 145 ரன்கள் எடுத்தால் போதுமானது. இந்தப் பந்து வீச்சை வைத்துக் கொண்டு அவர்கள் எந்த அணியையும் மட்டுப்படுத்தி வெற்றி வாகை சூடலாம். அந்த அணியின் பேட்டிங் கம்ரன் அக்மல், அஃப்ரீடி, சல்மான் பட், உமர் அக்மல் ஆகியோர் கையில் உள்ளது. இதில் உமர் அக்மல் அன்றைய தினத்தில் பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினால் எந்த ஸ்கோரையும் அவர்களால் எட்ட முடியும். மேலும் ஆல்ரவுண்டர் இடத்தில் அவர்களுக்கு அஃப்ரீடி, ரசாக் உள்ளனர். இது ஒரு கூடுதல் பலம்.

எனவே ஒரு சம்பலம் கொண்ட அணியாக பாகிஸ்தான் உள்ளது.

இலங்கை அணியிடம் அனைத்தும் உள்ளது. சங்கக்காரா, ஜெயவர்தனே, ஜெயசூரியா, தில்ஷான், மலிங்கா, முரளிதரன், மென்டிஸ், மேத்யூஸ், கபுகேதரா என்று திறமையான வீரர்களும், சங்கக்காராவின் திறைமையான தலைமைப் பொறுப்பும் இருந்தும், அவர்களுக்கு தோல்வி எப்படி ஏற்படுகிறது என்பதை அவர்களால் கணிக்க முடியவில்லை.

ஏதோ ஒரிரண்டு தவறுகள் அந்த அணியை வெற்றியிலிருந்து விலக்கி விடுகிறது. இது என்னவென்று கண்டுபிடித்து அவர்கள் அதில் கவனம் செலுத்தினால் வெற்றி வாய்ப்பு உள்ளது. சமிந்தா வாஸை அணியில் சேர்க்காதது மிகப்பெரிய தவறு.

எந்த அணியையும் இந்த வகை கிரிக்கெட்டில் நாம் சொத்தை என்று கணித்து விட முடியாது.

இருப்பினும் அனைத்து முன்னணி 8 அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்குக் வருமேயானால், ஆஸ்ட்ரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க, மேற்கிந்திய தீவுகள் அரையிறுதியில் நுழையும் என்று எதிர்பார்க்கலாம்.

இதில் ஏதாவது தப்பிதம் நிகழ்ந்தால் இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆனாலும் கிரிக்கெட் ஆட்டம் என்பது கணிப்புகளை மீறிய நிச்சயமின்மைகளை கொண்டுள்ளது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனால் இந்திய அணி இம்முறை அதிக முனைப்புடன் விளையாடும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.

Share this Story:

Follow Webdunia tamil