இந்தியா முழுதும் ஏற்படும் பன்றிக் காய்ச்சல் மரணங்களுக்கு மத்திய-மாநில அரசுகளின் மெத்தனப் போக்கே காரணம் என்று தமிழ்நாடு அறிவியல் பேரவை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் பேரவை மாநில அமைப்பாளர் டாக்டர் ஜி.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி வருமாறு:
பன்றிக் காய்ச்சல் எனப்படும் ஏ-எச்1என்1 இன்ஃபுளுயென்சா வைரஸ் காய்ச்சலால் உலகம் முழுதும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகள், மற்றும் இளம் வயதினரே இந்நோய்க்கு அதிகம் பலியாகியுள்ளனர். இருமல், தும்மல், சளி மூலமாக எளிதில் பிறருக்குப் பரவக்கூடிய இந்நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடந்த ஆண்டு இறுதிவாக்கிலேயே அமெரிக்கா, சீனா, அய்ரோப்பிய யூனியனைச் சேர்ந்த பல்வேரு நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து தங்களது மக்களுக்கு வழங்கியுள்ளன.
ஆனால் இந்திய அரசு இதில் அலட்சியம் காட்டி வருகிறது. இந்த ஆண்டு மே மாதத்திற்குள் தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் இதுவரை மருத்துவத்துறை ஊழியர்களுக்குக் கூட தடுப்பூசி வழங்கப்படவில்லை. மாநில அரசும் மெத்தனப்போக்கையே கடை பிடிக்கிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய மத்திய மாநில அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு அரசு மருத்துவ மனைகளையும், ஆரம்பச் சுகாதார நிலயங்களையும் தனியார் மயமாக்கி வருகின்றன, வியாபாரமாக்கி வருகின்றன.
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை புறந்தள்ளி விட்டு ஆரம்ப சுகாதார நிலையங்களை வெறும் பிரசவம் மட்டும் பார்க்கும் நிலையங்களாக மாற்றி வருகின்றன. இதன் விளைவாக காலரா, பேதி, டைஃபாய்டு, எலிக்காய்ச்சல், மலேரிய, டெங்கு, போன்றவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. நாய்க் கடியால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. உரிய நேரத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியை வழங்கியிருந்தால் தற்போது ஏற்படும் மரணங்களை தடுத்திருக்க முடியும்.
மத்திய மாநில அரசுகளின் மெத்தனப்போக்கே இம்மரணங்களுக்கு காரணம் என்பதால், பன்றிக் காய்ச்சலால் இறந்தோரின் குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும். பன்றிக்காய்ச்சல் மரணங்களை மூடி மறைக்கும் போக்கைக் கைவிட வேண்டும்.
பன்றிக் காய்ச்சல் குறித்து பீதிகொள்ளவேண்டாமென, அன்றாடம் அறிக்கைகள் விருவதையும், பயப்படவேண்டாமென கிளி ஜோசியம்-ஆக்டோபஸ் ஜோசியம் சொலவதையும் மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும். உடனடியாக தடுப்பூசியை வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் பேரவை கேட்டுக் கொள்கிறது.
என்று அந்த இதழ்ச் செய்தியில் டாக்டர். ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியுள்ளார்.