வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும், அவர்களது உறவினர் மற்றும் அவர்களுடன் இருந்தவர்களுக்கும் என தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வந்தது. இந்த நிலையில், எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக பன்றிக் காய்ச்சல் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சளி பிடித்தாலே பன்றிக் காய்ச்சலோ என்று பயப்படும் அளவிற்கு, எங்கு பார்க்கினும் முகமூடி மனிதர்களாக இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வேளச்சேரியை சேர்ந்த சஞ்சய் (4) என்ற மாணவன் பன்றி காய்ச்சலால் இறந்தான். இந்த இறப்பு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதுடன், தமிழக அரசுக்கு பெரிய அளவில் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியது.
அதனால் பள்ளி மற்றும் முக்கியமான இடங்களில் சுகாதாரத் துறையினர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும், பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக தற்போது பன்றிக் காய்ச்சல் பரவல் பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், ஜூன் முதல் நேற்று வரை 708 பேர் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களில் 387 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 331 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 56 பேர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர் என்று தெரிவித்தார்.
பொது சுகாதார துறை இயக்குனர் இளங்கோ கூறுகையில், தமிழகத்தில் 600 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இப்போது 66 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். 531 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று கூறினார்.