பன்றிக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் டாமிபுளு மாத்திரைகளை, மருத்துவர்களின் அறிவுறுத்தல் இல்லாமல், முறையின்றி உட்கொண்டால் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தியா போன்ற நாடுகளில் பன்றிக் காய்ச்சலுக்கான டாமிபுளு மாத்திரைகளை, பொதுமக்கள், மருத்துவர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்துவதாகவும், முறைப்படி ஐந்து நாட்கள் உட்கொள்ளாமல் இடையில் நிறுத்தி விடுவதாகவும் உலக சுகாதார அமைப்புக்கு (டபிள்யூ.எச்.ஓ) புகார்கள் வந்தன.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய் கட்டுப்பாடு மையத்தின் நிபுணர்கள் கூறுகையில், "டாமி புளு மருந்துகளை முறையின்றி பயன்படுத்தினால் மருந்தின் சக்தியை எச்1என்1 வைரஸ் தடுத்து நிறுத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
டாமி புளு தனது சக்தியை இழக்க நேரிடும். எனவே மருத்துவர்கள் பரிந்துரைப்படியே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் யாரும், சாதாரண காய்ச்சலுக்காகவோ, சளிக்காகவோ மருத்துவ பரிசோதனை இன்றி டாமி புளு மாத்திரைகளைப் போட வேண்டாம். உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டால் உரிய மருத்துவரை அணுகி, அவரது பரிந்துரையின் படி சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
மேலும், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள், பயந்தோ, அறியாமையாலோ வீட்டிற்குள் முடங்கி இருக்காமல், தகுந்த மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெற்று குணமடையலாம். பன்றிக் காய்ச்சல் நோய்க்கு உடனடியாக உரிய சிகிச்சை மேற்கொண்டால் நிச்சயமாக பூரண குணமடையலாம்.
ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நாமும் நம்மை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தும்மியப் பிறகோ, இருமியப் பிறகோ நமது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வெளியில் சென்றுவிட்டு வந்ததும் கை, கால்களை நன்கு கழுவி, பின்னர் முகத்தையும் கழுவ வேண்டும்.