Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

33 பேருக்கு பன்றிக்காய்ச்சல் - தமிழக அரசு தகவல்

33 பேருக்கு பன்றிக்காய்ச்சல் - தமிழக அரசு தகவல்
விழிப்புணர்வு அறிவுரைகள்
"தும்மல் மற்றும் இருமலின்போது மூக்கு மற்றும் வாயினை துணிகளால் மூடும் சுகாதாரமான பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தல்" ,

"அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுதல்",

"பாதிக்கப்பட்ட நபர்கள் நோயின் தாக்கம் குறையும் வரை தனிமைப்படுத்துதல்"
webdunia
தமிழகத்தில் 9ஆ‌ம் தே‌தி வரை, 33 நபர்கள் பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிரு‌ப்பது ஆய்வக பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் 18 பேரும், கோவையில் 11 பேரும், திருப்பூர், கடலூர், திருவள்ளுர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நோய் அறிதல்:
பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகப்படும் நபரின் சுவாச மண்டலத்தில் இருந்து தொண்டை தடவல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு RT - PCR எனும் பரிசோதனை மூலமாக நோய் உறுதிப்படுத்தப்படுகிறது.

கிண்டி அரசு கிங் நிலையம், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக இப்பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் 12 தனியார் ஆய்வகங்களில் இந்த பரிசோதனை செய்ய உரிய கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்த பின்னர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நோய் தடுப்பு மருந்து:
பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறி இருப்பவர்கள் அருகிலுள்ள மருத்துவரை அணுகி ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ஒசால்டாமாவீர் (டாமிப்ளு) மருந்துகளை உட் கொள்வதால் முழுமையாக இந்நோயை குணப்படுத்த முடியும்.

இதன் மூலம் இறப்பினை தவிர்க்கலாம். பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான ஒசால்டாமாவீர் (டாமிப்ளு) மருந்துகள் போதுமான அளவு (4 இலட்சம்) அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான சிரப் ஒசால்டாமாவீர் (டாமிபுளு) மருந்துகள் வாங்கப்பட்டுள்ளது.

அரசு நடவடிக்கைகள்:
தமிழக முதல்வரின் ஆணைப்படி தமிழகத்தில் தொற்று நோய்களின் தாக்கம் குறித்தும் முக்கியமாக பன்றிக் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசின் சுகாதார துறையின் உயர் அதிகாரிகளுடன் 02.04.2012 மற்றும் 7.04.2012 ஆகிய தினங்களில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

பன்றிக்காய்ச்சல் நோய்க்கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளாக ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தனிவார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ நிபுணர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

பொது மக்களின் நலன்கருதி, இலாப நோக்கமின்றி பன்றிக்காய்ச்சல் நோய் கண்டறிய தரமான ஆய்வக பரிசோதனை செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்கள் ரூபாய் 5000 முதல் ரூ.7000 என்று இருந்த கட்டணத்தை குறைத்து ரூ.3000 மட்டுமே மக்களிடம் கட்டணமாக பெறவேண்டும் என அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையம், இரயில் நிலையம், மற்றும் ஒசூர் போன்ற தமிழக எல்லையோரப்பகுதிகளில் நோய் கண்காணிப்பு ஏற்பாடுகள் மற்றும் சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, 25000 டோஸ் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக, இந்நோயினால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு தேவையினடிப்படையில் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

தகவல் பெற...

பன்றிக்காய்ச்சல் குறித்த தகவல்களை பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் நோய் கட்டுப்பாட்டு மையம் (தொலைபேசி எண். 044-24350496) பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை இயக்குநரகத்தில் துவக்கப்பட்டு நோய் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நோய் குறித்த தகவல் கிடைத்தவுடன் நோய் ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கும், தேவைப்படுபவர்களுக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கவும், உடனிருப்பவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்குவதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது உலக அளவில் இந்நோய் தாக்கம் குறைந்து கொண்டு வருவதாலும், தற்போது வெப்பமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுவதாலும், பொது மக்கள் இந்நோய் குறித்த அச்சம் கொள்ள தேவையில்லை.

காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி அதற்குரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


News Summary:
The Tamil Nadu government today said 33 persons have been affected with the A (H1N1) virus or Swine Flu in the state and assured there was no need to panic since it was not pandemic but a seasonal flu.

Share this Story:

Follow Webdunia tamil