1. அதிரசம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
வெல்லம் - 2 கப்
பொடித்த ஏலக்காயம் - கால் டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொறிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
அரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி (சற்று ஈரப்பதம் இருக்குமாறு) பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பாகு எடுக்க:
பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் போல (கால் டம்ளர்) தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடிகட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.
சரி பாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறியலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை விட்டு, அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம். சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காயையும் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும். தேவைப்பட்டால் சிறுது சுக்கு தூள் சேர்த்து கொள்ளலாம்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும். சாப்பிட்டுப் பாருங்க, அதிரசம் சுவையாகவும், மிருதுவாகவும் அருமையாக இருக்கும்.
2. மைசூர் பாகு
தேவையான பொருள்கள்:
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
செய்முறை:
கடலை மாவை நன்றாக சலித்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கடலை மாவை போட்டு 3 நிமிடம் வரை மிதமாக வாணலியில் வறுத்து தட்டில் கொட்டி வைக்கவும். மிதமான நெருப்பில் நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும். மிதமான சூட்டில் சர்க்கரையில் நீர் சேர்த்து பாகு ஆகாமல் கரைக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்த கடலை மாவுடன், கரைந்த சர்க்கரை நீர் கரைசலை சேர்த்து கட்டியாகாமல் நன்றாக கலக்கவும். கடலைமாவு சர்க்கரை கரைசலுடன் கொதிக்க தொடங்கியதும், உருக்கி வைத்த நெய்யை நான்கைந்து முறைகளாக சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
இறுதியாக எல்லா நெய்யும் சேர்த்த பின் மாவு நன்கு கெட்டியாக கடாயில் ஒட்டாமல் வரும்போது, அதை இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டவும். சீராகப் பரப்பி ஓரங்களை அழுத்தி விட்டு மேல் பாகத்தை தடவி வழவழப்பாக்கவும். இது நன்கு ஆறிய பின் நமக்கு தேவையான வடிவத்தில் வெட்டி பரிமாறலாம். மைசூர்பாக் ரெடி.