கருப்புப் பணம் என்றால் என்ன? முறைகேடான தொழில்களில் சேர்த்த பணம் கருப்பு பணம். அது ஒரு வகை. முறையாகத் தொழில் செய்பவர்களும் வரி ஏய்ப்பு செய்கிறார்கள். அந்த வரி ஏய்ப்பு செய்த பணமும் கருப்புப் பணம்.
முறைகேடு என்று எடுத்துக்கொண்டால் இலஞ்சம் வாங்குவது. அதிகாரிகள் இலஞ்சம் வாங்கி கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கின்றனர். அதுபோல அரசியல்வாதிகளிடமும் கோடிக்கணக்கில் பணம் இருக்கின்றது. அவர்களெல்லாம் வைத்திருக்கும் கருப்புப் பணத்தில் 30% வருமான வரி கட்டிவிட்டால் அது வெள்ளையாகிவிடுமாம்.
கிட்டத்தட்ட 65,000 கோடிக்கும் மேல் கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறோம் என்று மோடி அரசு அறிவித்திருக்கிறது. 65,000 கோடி அரசாங்கத்தின் கைக்கு வந்துவிட்டதாக பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் சில நூறு பேர் தாங்கள் வைத்திருந்த 65,000 கோடிக்கு வரியையும் அபராதத்தையும் கட்டியிருக்கிறார்கள். அரசுக்கு 28,000 கோடி வரி வந்திருக்கிறது. அவ்வளவுதான்.
“எப்படி சம்பாதித்தீர்கள் என்று கேட்க மாட்டோம். வரியை மட்டும் கட்டி விடுங்கள்” என்று கருப்புப் பண பேர்வழிகளின், அவர்கள் காலில் விழாத குறையாகக் கெஞ்சித்தான் இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 65000 கோடி என்பது கஞ்சா விற்ற காசா, இலஞ்சம் வாங்கிய காசா என்பதை ஐ.டி. டிபார்ட்மென்ட் விசாரிக்கவில்லை.
ஆனால் பாமர மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? கருப்பு பண பேர்வழிகள் 500, 1000 த்தை வங்கியில் கொடுத்தால் சிக்கிக் கொண்டுவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல, வரி கொடுத்தால் எல்லாக் குற்றங்களும் மன்னிக்கப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை.
ஜெயலலிதா வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்கப்பட்டது. “அந்தப் பணத்திற்கு நான் வரி கட்டிவிட்டேன்” என்பதுதான் நீதிமன்றத்தில் அம்மா சொன்ன விளக்கம்.
ஆனால், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போட்டால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஒருவர் அந்த வருமானம் எப்படி வந்தது என்பதை சொல்லியாக வேண்டும். அதனால்தான் ஜெயாவின் வாதம் எடுபடவில்லை.
இந்த விதி மற்ற கருப்புப் பண முதலைகளுக்குப் பொருந்தாது. கருப்பை வெள்ளையாக்கும் மோடி அரசு உள்ளிட்ட எல்லா அரசுகளும் எனக்கு வரியை மட்டும் கொடுத்துவிடு. உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று சொல்லித்தான் கருப்பை வெள்ளையாக்குகின்றனர்.
500, 1000 ரூபாய் செல்லாது என்று இரவு 8:30 மணிக்கு மோடி அறிவித்த பிறகு விடிய விடிய சென்னை உள்ளிட்ட அனைத்து இந்திய நகரங்களிலும் நகைக் கடைகள் திறந்திருந்தன. இன்னொரு பக்கம் ஏ.டி.எம்-ல் மக்கள் கூட்டம். நாளைக்கு சோற்றுச் செலவுக்கு 400 ரூபாய் கிடைக்குமா என்று.
ஒரே இரவில் கிராமுக்கு ரூ.1500, ரூ.2000 என தங்கம் விலை ஏறுகிறது. கருப்புப் பணத்தை பிடிப்பது தான் இந்த அரசாங்கத்தின் நோக்கமென்றால் நகைக் கடைக்கு வந்தவனையெல்லாம் அப்படியே வளைத்துப் பிடிக்க வேண்டியது தானே.
கருப்புப் பணத்தை காகிதப் பணமாக வைத்துக் கொள்ளாதீர்கள். தங்கமாக வாங்கி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்; சொத்தாகவோ, ரியல் எஸ்டேட்டாகவோ ஷேராகவோ வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் காகிதப்பணமாக மட்டும் வேண்டாம் என்கிறது மோடி அரசு.
மோடி தன் உரையிலேயே சொல்கிறார். பணப்பொருளாதாரத்தை ஒழித்து அனைவரையும் வங்கிப் பொருளாதாரத்துக்குள் கொண்டுவரப் போகிறேன் என்கிறார். கருப்புப் பணம் தொடர்பான ஆய்வுகள் என்ன சொல்லுகின்றன.
வங்கிப் பொருளாதாரத்தை தங்களுடைய பொருளாதார நடவடிக்கைக்கு அடிப்படையாக வைத்திருக்கும் மிகப்பெரிய தரகு முதலாளிகள் பன்னாட்டு நிறுவனங்கள்தான் கருப்புப் பணத்தினுடைய மிக முக்கியமான இருப்பிடம் என்று சொல்கின்றன.
இதே பாஜகவினர் முன்னர் சொன்னார்களே, அந்த 70 இலட்சம் கோடி கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பது யார்? உள்ளூர் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், இலஞ்ச ஊழல் பேர்வழிகளுமா? சிலர் அப்படி இருப்பார்கள்.
ஆனால், மிகப்பெரும்பான்மையாக இந்த கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் இந்த நாட்டினுடைய மிகப்பெரிய தரகு முதலாளிகள் டாடா, அதானி, அம்பானி.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்தில் உருவாகிறது. அதை உருவாக்குபவர்கள் இவர்கள் தான். எனவே வங்கிகளின் மூலம் உருவாகும் கருப்புப் பணம் என்பதுதான் முதன்மையானது.
ரூ.500, ரூ.1000 – ஆக மாற்றி தேர்தல் நேரத்திலே விநியோகிப்பது, அல்லது மற்ற செலவுகளுக்குக் கருப்புப் பணமாகப் பயன்படுத்துவது என்பதெல்லாம் ஒரு கொசுறு.
கருப்புப் பணத்தை, இந்த நடவடிக்கையால் ஒழிக்க முடியும் என்று சொல்பவர்கள் அல்லது நம்புபவர்கள் அது எப்படி என்பதை விளக்க வேண்டும். இது ஏன் கருப்புப் பணத்தை ஒழிக்காது என்பதை விளக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மோடி எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையைப் போலத் தெரிகிறது. ஆனால் உண்மையில் அதுவல்ல.
இது தோற்றுப்போன மோடி அரசு எடுத்திருக்கும் அரசியல் நடவடிக்கை. 2014 தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மோடி அளித்த வாக்குறுதிகள் பல.
நான் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தைக் கைப்பற்றி ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 இலட்சம் போடுவேன் என்று மோசடியாக வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என்று கேட்டபோது ”அது எலெக்சனுக்காக சொன்னது” என்று பதிலளித்தார் அமித் ஷா. அந்த அளவிற்கு நேர்மையோ நாணயமோ இல்லாத அரசு இது.
மோடி பல நம்பிக்கைகளை உருவாக்கினார். வேலை வாய்ப்பை உருவாக்கப் போகிறேன். விலைவாசியை குறைக்கப் போகிறேன் என்று அளந்து விட்டார். வளர்ச்சி தான் என்னுடைய ஒரே கொள்கை என்று பேசினார். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, சிட் டவுன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்வச் பாரத் என்று ’பஞ்ச டயலாக்’ திட்டங்களை அறிவித்தார்.
அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றினார். வானொலியில் ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசினார். ஆனால் இரண்டாண்டுகள் தாண்டிய பிறகும் இன்னதை சாதித்தேன் என்று சொல்லிக்கொள்ளும்படியாக மோடியால் எதையும் கூறமுடியவில்லை. மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள்தான் மிச்சம்.
இந்த சூழ்நிலையில் தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பது தான் மோடி அரசின் முன்னாள் இருக்கின்ற கேள்வி. மோடி அரசு இதற்காகத் தொடர்ந்து இரண்டு முறைகளைக் கையாள்கிறது.
பொதுமக்களுடைய கருத்தை இரண்டு துருவங்களாகப் பிரித்து மோத விடுவது. ஒரு எதிரியை உருவாக்கி அவன்தான் நாட்டு மக்களின் எதிரி என்று காட்டுவது. அவர் எதிரியா இல்லையா என்பது பற்றி நாட்டு மக்களிடம் விவாதம் நடக்கும். இதுதான் தேசம் சந்திக்கும் முதன்மையான பிரச்சினை என்று ஒரு பிரச்சினையை அவர்கள் எழுப்புவார்கள். அதுகுறித்து ஆம் இல்லை என்று விவாதம் நடக்கும். பாஜக என்ற கட்சியே அப்படித்தான் ஆட்சிக்கு வந்தது.
தோழர் மருதையன்
நன்றி: வினவு