Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெக்பெத்தின் தனிமை -அகிரா குரசேவா

மெக்பெத்தின் தனிமை -அகிரா குரசேவா

Webdunia

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் நூற்றாண்டு காலமாக உலகமெங்கும் மேடை யேற்றப்பட்டிருக்கின்றன. அதிலும் மெக்பெத், ஹாம்லெட், லியர் அரசன், ஒத்தலோ நான்கும் துன்பவியலின் உன்னத வெளிப்பாடுகளாகும். இவை திரைப்படமாக வந்திருக்கின்றன. லாரன்ஸ் ஒலிவர் ஷேக்ஸ்பியரின் நிஜகதாநாயகன் போலவே படங்களில் நடித்து சிறப்பாக ஷேக்ஸ்பியரின் கவித்துவத்தை வெளிப்படுத்தினார். மெக்பெத் மத்தியகால ஸ்காட்லாந்திய கதாபாத்திரமாக நாடகத்தில் இடம்பெற்றபோதும் அவனது பிரச்சனைகள் மற்றும் அவனது மனோநிலை நவீன மனிதனின் மனோநிலையாகும். அகிரா குரசேவா ஷேக்ஸ்பியரின் மெக்பெத், லியர் அரசன் இரண்டு நாடகங்களை படமாக்கியிருக்கிறார். இவரது படத்தின் வழியாக ஒரே நேரத்தில் ஷேக்ஸ்பியரின் மேதைமையும் ஜப்பானிய மத்திய கால வாழ்வின் துயரமும் ஒருங்கே படமாக்கப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற படமாக ரோஷோமான் திரைப்படத்தை இயக்கிய பின்பு குரசேவா 1957-ஆம் வருடம் ஷேக்ஸ்பியரின் மெக்பெத்தை திரைப்படமாக்க முயற்சித்தார். இது அவரது முந்தைய படங்களைப் போலவே ஒரு தளத்தில் சரித்திரத்தையும் மற்றொரு தளத்தில் மன எழுச்சிகள், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாகவும் அமையவிரும்பினார். மெக்பெத் ஒரு நவீன மனிதனின் கதை. அவனது ஆசையும் அதை அடைய மேற்கொண்ட முயற்சிகளும் மனிதன் திரும்ப திரும்ப பலகாலமாக நடத்தி வரும் ஒரு தொடர் நாடகம். இந்த படத்தை துவக்கியபோது குரசேவாவிடம் இதை எப்படி ஜப்பானிய கதைகளத்தில் சொல்லப்போகிறீர்கள் எனகேட்டதற்கு, அவர் ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் இது அதிகாரத்திற்கான வேட்கையும் தனிமையும் பற்றிய படமாக அமையுமென்றார்.

குரசேவாவிற்கு மெக்பெத்தை பிடித்ததிற்கு முக்கிய காரணம் அவனது தீராத வேட்கையல்ல, அவன் தன்னை முழுமையாக உணராமல் போனதுதான். தனது ஆசையை நிறைவேற்ற அவன் ஒரு கொலை செய்கிறான். அது இரண்டாவது கொலைக்கு காரணமாகிறது. அதிகாரத்தை நெருங்க நெருங்க உறக்கம் அவனை விட்டு போகிறது. அவனது மனைவி இரவில் தனது கைகளில் குருதி கறை படிந்திருப்பதாக கழுவிக் கொண்டே இருக்கிறாள். ஆசையற்றவன் மனிதனாக இருக்க லாயக்கற்றவன் என உரத்துப் பேசுகிறாள். அதிகாரம் வந்ததும் தன்னைப் பற்றியே மெக்பெத் சரியாக புரிந்து கொள்ள முடியாத குழப்பநிலை உண்டாகிறது. மெக்பெத்திற்கான திரைக்கதையமைப்பில் மைய நிகழ்வுகளை அப்படியே வைத்துக் கொண்டு அதில் ஜப்பானிய காலச்சார ஊடு இழைகளை பின்னுகிறார். குறிப்பாக மூன்று மாயக்காரிகள் தோன்றி மெக்பெத்திற்கு எதிர்காலம் பற்றிய குறிப்புகளை சொல்வதை முழுமையானதொரு ஜப்பானிய ஆவியுலக சடங்கின் தோற்றத்திலே மேற்கொண்டார். இத்தோடு நோ நாடகத்தின் பாவனைகளை நடிகர்களின் உடல் மொழியை படத்திற்கான வெளிப்பாட்டு முறையாக கைக் கொண்டார். ஷேக்ஸ்பியரின் மெக்பெத்தை போல குரசோவாவின் மெக்பெத் வலிமையானவனல்ல. பதிலாக தனது பலவீனங்களை மறைத்துக்கொண்டு மனப்போராட்டத்தில் இருப்பவன்.

மெக்பெத்தின் தனிமை
-அகிரா குரசேவ

மெக்பெத்தை திரைவடிவமாக்கியபோது அதன் தலைப்பை மெக்பெத்திலிருந்து விலக்கி Throne of Blood என மாற்றியதால் கதையின் மைய நிகழ்வாக ரத்தவேகம் அமைகிறது. மாயக்காரிகளில் ஒருத்தி குரசேவாவின் படத்தில் சொல்கிறாள். மனிதர்கள் மிக பலவீனர்கள். தங்கள் ஆசைகளை கூட வெளிப்படுத்த பயப்படுகிறார்கள்.

இந்த குரலை மீறி தனது ஆசையின் பாதையில் செல்லும் மெக்பெத் ரத்தத்தின் துளிர்ப்பையே காண்கிறான். பனிப்புகையும் வனமும் அதில் அலையும் இருபடைத்தளபதியுமாக குரசேவாவின் படம் துவங்குகிறது. பின்னணியில் ஒரு கோரஸ் ஒலிக்கிறது. திரும்ப திரும்ப பனி இரவில் வழி தவறி அலைகிறார்கள். மாயக்காரிகள் மூவர் எதிரில் தோன்றி தங்களது குரலால் மெக்பெத்தை வாழ்த்திப் பாடுகிறார்கள். நம்பமறுக்கிறான் மெக்பெத். பிறகு தனது எதிர்காலத்தின் தேவதைகள் எதிரே வந்து நிற்பதாக நினைக்கிறான். குரசேவா ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் இருந்து மெக்பெத்தின் மனைவி கதாபாத்திரத்தை தனது இயல்புபடி மாற்றி மிக வன்மையான பெண்ணாக உருமாற்றி இருக்கிறார். அவளது செய்கைகளும் முகவெளிப்பாடும் துர் ஆவிபீடிக்கப்பட்ட ஒரு நோநாடக நடிகரின் பாவத்தையே வெளிப்படுத்துகின்றன.

படத்தில் காட்சிபடுத்துவதில் முக்கியமாக நாடகம் போலவே நடிகர்கள் மனவெளியில் தங்களது நினைவுகளை கூட்டுவதும் விலகுவதுமாகவே இருக்கிறார்கள். மெக்பெத்தின் கடைசியுத்தத்தின் முன்பாக மரங்கள் வனத்தை விட்டு நகர்ந்து வரும் காட்சி குரசேவாவின் படத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றிருக்கிறது. தூக்கமற்ற இரவில் நினைவில் குதிரைகள் சுற்றியலைவதும் இரண்டாவது முறையாக மாயக்காரிகளை காணச்செல்லும் போது ஏற்படும் சடங்கும் தொன்மையாக ஒரு காட்சிப்பதிவை நினைவுபடுத்துகின்றன. ஒரு பிரதியை இன்னொரு கலாச்சார சூழல் உள்வாங்கிக் கொண்டு தனது சொந்த வெளிப்பாட்டின் வழியே மூலப் பிரதியை மீட்டு எடுப்பதற்கான சரியான வழிமுறையை உருவாக்கியிருக்கிறார் குரசேவா. இப்படத்தின் வழியே செவ்வியல் பிரதிகளின் வழியே நவீன பிரதிகளை உருவாக்க முடியும் என்பதை குரசேவர் தனது திரைப்படத்தின் வழியே நிரூபித்திருக்கிறார்.

லியர் அரசனின் வாழ்வை முன்வைத்து ரான் என்ற படத்தை குரசேவா இயக்கியபோது லியரின் மூன்று மகள்களுக்கும் பதிலாக மூன்று மகன்களை கதாபாத்திரமாக்கினார். இப்படத்தில் துயருற்று துரத்தப்பட்டு அலையும் லியரின் காட்சிகள் ஆழ்ந்த துக்கத்தினை வெளிப்படுத்துவன.

இருபடங்களிலும் ஷேக்ஸ்பியருமிருக்கிறார் குரசேவாவுமிருக்கிறார். இருவரில் எவர் மெக்பெத்தை, லியரை எழுதியது என்ற சிறிய மயக்கத்தை ஏற்படுத்துகிறார். இதுவே நவீனப் பார்வையின் வெற்றியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil