அவர் வீட்டில் எதுவும் ஒழுங்கில்லை. புத்தகங்கள் வாரி இறைத்தபடி இருக்கும். பத்திரிகைகள் அங்குமிங்கும் சிதறிக்கிடக்கும். எல்லாவற்றையும் ஒழுங்கு செய்ய அவருக்கு நேரமிருக்காது. அவர் வருவார். எதாவது சில புத்தகங்களை எடுத்துச் செல்வார். அவர் ஒரு பதிப்பாளர். பத்திரிகையாளர். பதிப்பகம் அப்பா பெயரில் தான் நடைபெறுகிறது. அவர் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பதால், பதிப்பகத்தை அப்பா பெயரில்தான் நடத்த முடியும். இலக்கியப் பத்திரிகைகளையும், புத்தகங்களையும் யாரும் மதிப்பதில்லை. ஆனாலும் ஒரு வித ஆவேசத்துடன் புத்தகங்களும், பத்திர்கைகளும் வந்து கொண்டுதான் இருக்கும். அவர் அப்பா தன் வருமானத்தில் சேகரித்த வீட்டில்தான் எல்லாம் இருக்கும். கிட்டத்தட்ட இரண்டு போர்ஷன்கள் வாடகைக்குப் போக மீதி ஒரு போர்ஷன் முழுவதும், பத்திரிகைகளும்/புத்தகங்களும் இருக்கும். அவருடைய இன்னொரு
webdunia photo
WD
கெட்ட குணம், பிளாட்பாரத்திலிருந்து புத்தகங்களை பொறுக்கி எடுப்பது. அவர் திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, பீச் ரயில்வே ஸ்டேஷன் பாதாள அறை என்று ஒவ்வொரு இடத்திற்கும் சென்று புத்தகங்களை வாரி எடுத்துக்கொண்டு வருவார். புத்தகங்கள் பழைய புத்தகங்கள். விலை குறைவாக இருக்கும். அவர் அப்பாவுக்கு இதுவும் பிடிக்காது. வையனிடம் எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. ஆனால் புத்தகங்களைக் கட்டிக்கொண்டு அழறானே என்ற கோபமிருக்கும்.
ஒருநாள் அவர் அப்பா அவரிடம் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தார். “எப்போ நீ இதெல்லாம் படிக்கப் போறே?” அப்பா இதைக் கேட்டவுடன் அவர் திகைத்துவிட்டார். அப்பாவுக்கு 83 வயது. அவருக்கு 50 வயது. உண்மையில் எப்போது இதெல்லாம் படிக்க முடியும். நியாயமான கேள்விதான்.
ஆனால் அவர் சாமாளித்துக்கொண்டு பதில் சொன்னார். ஒரு புத்தகத்தில் எல்லாப் பக்கங்களும் படிக்க வேண்டுமென்பதில்லை என்று.
அந்தப் பதிலை அவர் அப்பா ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம். மழை, எலி அந்த வீடு பழைய வீடாக இருந்ததால், மழை பெய்தால் ஒழுகும். உண்மையில் புத்தகங்களுக்குத்தான் அந்த வீடு. உண்மையில் அவர் அப்பா அவர் குடும்பத்துடன் வேறு ஒரு வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறார்.
புத்தகங்கள் வைத்த இடத்தை மழையிலிருந்தும், எலிகளிடமிருந்தும் காப்பாற்ற முடியவில்லை என்ற குறை அவருக்குண்டு. அவர் அப்பாவிற்கு அந்த அக்கறையில்லை.
மழை பெய்தால் பரணியில் வைத்திருக்கும் புத்தகங்கள் வழியாக நீர் கசிந்து புத்தகங்களை நனைத்து விடும். அதனால் புத்தகங்கள் வீணாகிவிடும். அதனால் நீர் கசியும் பக்கமாகப் புத்தகக் கட்டுக்களை வைக்காமல் தள்ளி வைக்கவேண்டும். அதேபோல் எலிகள் லூட்டியும் தாங்க முடியவில்லை. பல புத்தகங்களை அவை கடித்துக் குதறிக் கொண்டிருக்கும். மழையிலிருந்து புத்தகங்களைத் தப்ப வைக்கலாம். ஆனால் எலியின் கோரப் பற்களிலிருந்து எப்படிப் புத்தகத்தைக் காப்பாற்றுவது என்பது அவருக்கு தெரியவில்லை. அதனால் எலி வராமல் தடுக்க எலி பாஷாணம் வைத்தார் ஒருநாள்.
எப்போதும் புத்தகம் வைத்திருக்கும் வீட்டில் அப்பா மதியம் சாப்பிட்ட உடன் படுத்துக்கொள்ள சென்று விடுவார். இது வழக்கம். எலி பாஷாணத்தைச் சாப்பிட்ட எலிகள் இறந்து கிடந்தன. இதனால் நாற்றம் தாங்க முடியவில்லை. அப்பாவும் கத்த ஆரம்பித்தார். “என்ன உள்ளேயே நுழைய முடியலையே?”
பிறகு செத்த எலிகளை அப்புறப்படுத்தி இடத்தை சுத்தம் செய்தார் அவர், அப்பாவிடமிருந்து திட்டுக்களை வாங்கிக்கொண்டு, அதன்பிறகு, அப்பா அங்கு பாச்சை உருண்டைகளைக் கூடப் போடுவதற்கு அனுமதிக்கவில்லை.
தவறி எதாவது அங்கு கொண்டு வந்து போட்டால், கேட்டார்: “எலியைக் கொல்வதற்கா, என்னைக் கொல்வதற்கா? அதெல்லாம் போடாதே.” எலிகள், மழை புண்ணியத்தால் சில புத்தகங்கள் மட்டும் இன்னும் இருக்கின்றன.
இப்போதெல்லாம் அவர் புத்தகங்கள் வாங்குவதைக் குறைத்துக்கொண்டு விட்டார். அப்பாவிடமிருந்து தப்பிப்பதற்காக அல்லது எலி, மழைக்குப் பயந்தா?