'லட்சுமி... லட்சுமி... லட்சுமியோவ்...'
சத்தம் கேட்டு வேக வேகமாக எந்திருச்சா லட்சுமி.
'என்னம்மா'... கேட்டுட்டே பொடக்காலியில (புறக்கடையில்) பொங்க வைக்க அடுப்பு மூட்டிட்டு இருந்த அம்மாகிட்ட ஓடுனா.
'இக்கட்டால வா'... அடுப்புத் தீக்குப் பக்கத்துல நின்ன லட்சுமியை விரட்டிய அன்னம்மா, இன்னும் ரெண்டு சுள்ளிய எடுத்து அடுப்பில் வெச்சா...
அப்பத்தான் அந்த ஒடைஞ்ச பானை லட்சுமியோட கண்ணுல பட்டுது. 'ஏம்மா... தாத்தா இருந்தா நல்லா இருக்குமில்ல...'
லட்சுமி இதைக் கேட்டதும்... அடுப்பில எரியற சுள்ளியவிட வேகமா எரிஞ்சுது அன்னம்மாவோட மனசு...
'படுபாவிப்பய... போன பொங்கலுக்குத் தண்ணியப் போட்டுட்டு கேட்ட கேள்வி எல்லாம் அந்தக் கருப்பராயனுக்கே அடுக்காது...
அதைக் கேட்டதோட... பானை கை நழுவியதக் கூடப் பாக்காமப் போனவருதான்...
அப்பறமெங்க வாரது. இப்ப அடுத்த பொங்கலும் வந்தாச்சு...'
தன்னோட அப்பாவை நினைச்சதும், அன்னம்மா கண்ணுல வழிஞ்ச தண்ணியப் பார்த்த லட்சுமிக்கு என்னமோ செஞ்சுது... வீட்டுக்குள் ஓடிட்டா...
அன்னைக்கு விடியற் காலையிலேயே அன்னம்மா வீட்டுல விளக்குப் போட்டாச்சு. அன்னம்மாவோட அப்பா சுப்பிரமணி.... பேத்தியை கூட்டிக்கிட்டு காட்டுக்குப் போனாரு...
அங்க அவரு வேப்பந்தலை ஒடைச்ச வேகத்துல மரமெங்க சாஞ்சுடுமோன்னு லட்சுமி ஒரு நிமிஷம் பதறிட்டா.
தாத்தாவோட இருக்கறதுனா லட்சுமிக்குக் கொள்ளைப் பிரியம். மத்த தாத்தா மாதிரி இவருக்குக் கதை சொல்லவெல்லாம் தெரியாது. ஆனா, அவரு பாசத்துக்கு யாரும் கிட்ட நிக்க முடியாது.
ஆனா, அப்படிப்பட்ட தாத்தாவத்தான் அப்பாவுக்கு எப்பவுமே புடிக்க மாட்டேங்குது. எப்பப் பார்த்தாலும் தாத்தாவப் போகச் சொல்லித் திட்டிக்கிட்டே இருக்காரு. என்னமோ அவுரு சாப்புட்டுத்தான் சொத்தெல்லாம் கரையற மாதிரி...
யோசிச்சுக்கிட்டே பின்னாடி வந்த லட்சுமியைப் பார்த்த சுப்பிரமணி, ஏம்மா... கால் வலிக்குதா... ன்னாரு.
இல்லா தாத்தான்னு லட்சுமி ஓடி வரவும்... வீடு வரவும் சரியா இருந்தது.
வாசத் திண்ணையில் பாயப்போட்டுப் படுத்திருந்தான் தனசேகரன்...
மாமனாரைப் பார்த்ததும் என்ன நெனைச்சானோ தெரியலை... விருக்குனு எந்திரிச்சு உள்ள போயிட்டான்...
அன்னம்மா விறுவிறுன்னு ஓடிவந்து... அவரு கெடக்கராரு, சீக்கிரமா வாங்க பொங்க பொங்கப் போகுதுன்னா.
சரி என்னம்மோன்னு நினைச்சுட்டு, சுப்பிரமணியும் பொடக்காலிக்குப் போனாரு...
'அப்பா சீக்கிரம் வாப்பா... நீயே இந்தப் பொங்கப் பானையை எடுத்துப் படைச்சுடு... அப்பத்தான் எங்க எல்லாருக்கும் திருப்தியா இருக்கும்.'
அன்னம்மாவின் பாசத்துல நெக்குறுகிப் போன சுப்பிரமணி, வேட்டியத் தூக்கிக் கட்டிட்டு அடுப்புகிட்ட போயி ஆசையாப் பானைய எடுத்தாரு...
அப்பத்தான், எங்கிருந்து வந்தானோ தெரியலை... மப்பும் மந்தாரமுமா...
”பட்டணத்துல பையனை வெச்சுக்கிட்டு புள்ள வீட்டுல வந்து சாப்பிட வெட்கமா இல்ல”…
அந்தப் பேச்சோட அதிர்ச்சி தாளாமச் சுப்பிரமணி கையிலிருந்த பானை தானா நழுவிக் கீழ விழுந்துருச்சு... பொங்கலும் தெரிச்சுச் செதறீருச்சு...
அப்படியே வெளியில நகந்தாரு.
அவருயார்கிட்டப் போயிச் சொல்லுவாறு...
பெத்தது இரண்டு பசங்க, ஒரு பொண்ணு. தாயில்லாப் புள்ளைகளை யாருக்கும் எந்தக் கொறையும் வைக்காம நல்லாத்தான் பார்த்துக்கிட்டாரு.
மூத்தவன் வாத்தியாருக்கும், இளையவன் எலக்ofரானிக்கும் படிச்சானுக. கொஞ்ச நாளைக்கு ஒழுங்காத்தான் வேலைக்குப் போனானுக... அதுக்கப்பறம் தான் வந்தது வெனையே...
உறவுக்காரன் எவனோ சொன்னானுட்டு வெளிநாட்டுக்குப் போறன்னு திரிய ஆரம்பிச்சுட்டானுக. வீடு, தோட்டம்னு எல்லாத்தையும் வித்துட்டுக் கடனாளியானது தான் மிச்சம்.
வெளிநாட்டுப் போறதுக்காகத் தொலைச்ச பணத்தை திருப்பிட்டு வாரேன்னு இன்னும் பட்டணத்திலேயே தங்கரதுக்கு எடமில்லாமத் திரியரானுக.
ஏதோ, புள்ளையைநல்ல இடத்துல கரை சேத்ததோட அவ கூடவே வந்து தங்கியாச்சுன்னு திருப்தியா இருந்தாரு.
சரி என்ன பண்றது. பசங்களை வைச்சுகிட்டு புள்ளையூட்டுல போயித் தங்குனா எந்த மாப்பிளைக்குத் தான் கோபம் வராது....
நொந்து கொண்டே நடந்தார்... திக்குத் தெரியாமல்...
அந்த நினைப்புத்தான் அன்னம்மாவையும், லட்சுமியையும் இந்தப் பொங்கலிலும் கண்ணீர் சிந்த வைத்தன.