எழுத்தாளர் : ஜூலியோ கொர்த்தஸார்
(1914-1984)
அர்ஜென்டினிய நாவலாசிரியரும், சிறுகதை எழுத்தாளருமான ஜூலியோ கொர்த்தஸார், 1950ல் பிரான்சில் குடியேறியவர். பின் நவீனத்துவ படைப்பாளியான கொர்த்தஸார் நடை வடிவத்தை இடையறாது ஆராய்பவர். அவருடைய எதிர்வினைகள் மற்றும் சிறிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு அரெளண்ட் தி டே இன் எய்ட்டி வோர்ட்ஸ் (1986). எழுத்தைப் பற்றிய கொர்த்தஸாரின் அணுகுமுறை மிக வித்தியாசமானது.
அலனாவும் ஓசிரிஸும் என்னைப் பார்க்கும்போது, அப்பார்வையில் ஏதாவது கொஞ்சம் பாசாங்கோ, கொஞ்சம் வஞ்சனையோ கலந்திருந்தது என்று என்னால் புகார் சொல்ல முடியவில்லை. அலனா அவளுடைய நீலவிழிச்சுடரோடும் ஓசிரிஸ் அதனுடைய பசுமை ஒளிரும் விழிக்கதிரோடும் என்னை நேர்கொண்டு நோக்கினார்கள். மேலும், அவர்கள் தம்மில் ஒருவரையொருவர் பார்க்கும்போது இந்த முறையில்தான் பார்த்துக் கொண்டார்கள். பால் கிண்ணத்திலிருந்து திருப்தியுடன் மியாவியபடி ஓசிரிஸ் தன் வாயை உயர்த்தும்போது, அலனா அதன் கருத்த முதுகைத் தடவிவிடுவாள். எனக்குப் புலப்படாத வெளிகளில், என் கொஞ்சல்கள் எட்ட முடியாத தூரத்தில் நின்று, ஒருவரையொருவர் புரிந்து கொண்டுள்ளனர் - இந்தப் பெண்ணும் பூனையும். இதை அறிந்த பிறகு சில காலம், நான் ஓசிரிஸ் மேலிருந்த என் அதிகாரத்தைத் துறந்துவிட்டேன். பாலமிட்டு இணைக்க முடியாத தூரத்தில் இருந்து கொண்டு, நாங்கள் நல்ல சினேகிதர்களாக இப்போது இருக்கிறோம். ஆனால், அலனா - என் மனைவி. எங்களுக்கிடையில் இருக்கும் தூரம், மாறுபட்ட ஒன்று. இந்த விஷயத்தை அவள் உணர்ந்திருக்கவில்லை என்று எனக்குத் தெரிந்தாலும், அலனா என்னைப் பார்க்கும்போது, என் சந்தோஷத்தை இது தடுத்து நிறுத்திவிடுகிறது. சரியாக ஓசிரிஸைப் போலவே அவள் என்னை நேர்கொண்டு நோக்கும்போதும், என்னைப் பார்த்துப் புன்னகை செய்தோ அல்லது என்னைப் பார்த்துப் பேசியபடியோ, எல்லாவிதச் சமிக்ஞைகளிலும் எல்லாவித விஷயங்களிலும் கொஞ்சம் கூட மிச்சம் வைக்க நினைக்காமல், தன்னை அவள் சமர்ப்பிக்கும்போதும், காதலுறவின்போதும் தன்னை அவள் கொடுப்பது போல், அவளுடைய ஒட்டுமொத்த சரீரமும் அவள் கண்களைப் போலவே விளங்கியது. பூரணமான அர்ப்பணிப்பு, குறுக்கீடில்லாத பரிமாறல்.
இது விநோதமானதுதான். ஓசிரிஸின் உலகத்தினுள் புகுவதற்கு நான் மறுதலிக்கப்பட்டபோதும் கூட, அலனாவின் மேல் எனக்குள்ள காதலை, சுலபமான முழுமையான விஷயமாக, எளிமையானதாக, தம்பதிகளுக்கேயுரிய ரகசியங்களற்ற வாழ்க்கையாக என்றும் என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அந்த நீலவிழிகளுக்குப் பின்புறத்தில், வார்த்தைகளை - முணுமுணுப்புகள் - மெளனங்களின் ஆழத்தில், இன்னும் அகன்ற மற்றொரு பிரதேசம் விரிகிறது. இன்னொரு அலனா அங்கே உயிர்க்கிறாள். ஆனால் இதை இப்படி நான் அவளிடம் சொன்னதில்லை. நிறைய தினங்களும் நிறைய வருஷங்களுமாக நழுவிக் கொண்டு விலகிய இந்த சந்தோஷத்தின் மேல்மட்டத்தைச் சிதைக்க முடியாதபடி நான் அவளை மிகவும் அதிகமாகக் காதலிக்கிறேன். அனால், எனக்கே உரித்தான முறையில் புரிந்து கொள்ளவும், கண்டுபிடிக்கவும் பிடிவாதமாக முயன்று வந்தேன். வேவு பார்க்காமல் அவளைக் கண்காணித்தேன். சந்தேகிக்காமல் அவளைத் தொடர்ந்து கவனித்தேன். அங்ககீனப்பட்டும் கூட அற்புதமாக உள்ள ஒரு சிலையை, முடிவுறாத ஒரு கைப்பிரதியை, வாழ்க்கை ஜன்னலில் செதுக்கப்பட்ட ஒரு துண்டு வானத்தை நான் காதலித்தேன்.
ஒரு தருணத்தில், சங்கீதமானது, அவளிடம் என்னைச் சரியாகக் கொண்டு போய்ச் சேர்க்கும் பாதையை அமைக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றியுள்ளது. எங்கள் வசமிருந்த பர்டோக், டியூக் எல்லிங்டன், கால் காஸ்டா - இசைத்தட்டுக்களை அவள் கேட்கும்போது கவனித்திருக்கிறேன். படிப்படியான ஊடுருவல், அவளுள் என்னை அமிழ்த்தியது. இசை, ஒரு மாறுபட்ட விதத்தில் அவளை நிர்வாணமாக்கியது. அதிகமாக இன்னும் அதிகமாக, அலனாவாக அவளை மாற்றியது. ஏனெனில், என்னிடமிருந்து எதையும் மறைக்காத, என்னை எப்போதும் நேர்கொண்டு பார்க்கக் கூடிய பெண்ணாக மட்டும் அப்போது அலனா தோன்றவிலல. அவளை இன்னும் நன்றாகக் காதலிக்கும் வகைமைக்காக, அலனாவுக்கு எதிரிலும் அலனாவுக்கு மேலாகவும் நின்று, அவளை நோக்கி அப்போது நகர்ந்தேன் - முதலில், இசையானது இன்னொரு அலனாவை எனக்கு க்ஷணத் தோற்றமாகக் காட்டி வந்தாலும், ஒரு நாள் ரெம்ப்ரெண்டின் படப்பிரதியொன்றில் முகங் கொண்டிருந்தபோது, அவள் இன்னும் அதிகமாக மாறியிருந்ததைக் காணும்படி எனக்கு வாய்த்தது. ஒரு நிலக்காட்சியில் தோன்றும் வெளிச்சங்களையும் நிழல்களையும், வானிலிருந்து ஒரு மேகக் கூட்டம் சட்டென்று மாற்றியமைத்ததைப் போலிருந்தது அது. அலனாவிலிருந்த அலனாவின் க்ஷணத்தோற்றத்தை, மீண்டும் திரும்ப நிகழவே நிகழாத உடனடி உருமாற்றத்தை அளவிட்டுக் கொண்டிருக்கும் ஒற்றைப் பார்வையாளராக அந்த ஓவியம், அவளை அவளையும் மீறி எங்கோ தூக்கிச் சென்றுவிட்டது என்று நான் உணர்ந்தேன். கீத் ஜெர்ரெட், பீதோவன், அனிபல் ட்ரோலியே போன்ற மத்தியஸ்தர்கள், அருகில் நெருங்க அனிச்சையாக உதவினார்கள். ஆனால் ஒரு ஓவியத்தையோ படப்பிரதியையோ கவனித்திருக்கும்போது, தான் எதுவாக இருக்கிறோம் என்று அவள் நினைத்திருக்கிறாளோ, அதுவும் கூட தொலைந்துபோய் நின்றாள் அலனா. ஒரு கற்பனை லோகத்துக்குள் அவள் ஒரு கணம் சென்றிருக்கலாம். எனவே, அதை அறியாமல் தன்னைவிட்டே அவள் விலகி வந்திருக்கலாம் - ஒரு ஓவியத்திலிருந்து இன்னொன்று நகர்ந்து கொண்டு, அவை பற்றிய அபிப்ராயங்களை உதிர்த்துக் கொண்டோ அல்லது மெளனித்தோ இருந்து வருவதை, அவளுக்குக் கொஞ்சம் பின்னாக இருக்கையில் அல்லது அவளைக் கைபிடித்து வழிநடத்திச் செல்கையில் பார்க்கிறேன். ஒரு சீட்டுக் கட்டினுள் அதன் ஒவ்வொரு புதிய அலட்சியமான உதறலின் போதும் ஒளிந்துகொண்டும் ஜாக்ரதையாகவும் உள்ள ஒரு சீட்டைப் போன்று இருக்கிறாள், ஒன்றுக்குப் பின் ஒன்றாக குயின்களும், ஏஸ்களும் ஸ்பேடுகளும் கிளப்களுமாக வருகிறாள் அலனா.
இந்த ஓசிரிஸுடன் கூடிக்குலவுவதற்கு என்ன இருக்கிறது? அதற்கு அதன் பாலைக் கொடுத்ததும், திருப்தியடைந்ததைப் போல், சந்தோஷத்தில் மியாவிடும் கரும்பந்தாக, தனியே விலகிப்போய்விடுகிறது அது. ஆனால் நேற்றுப் போலவே, இன்னும் அந்த ஓவிய காலரிக்கு அலனாவை அழைத்துச் செல்கிறேன். கண்ணாடிகளாலும் இருள் மங்கிய அறைகளாலும் ஆன ஒரு தியேட்டருக்கு மறுபடியும் ஒரு தடவை போகிறோம். கான்வாஸிலுள்ள துல்லியமான பிம்பங்கள். இந்த பிம்பத்துக்கு முகம் காட்ட உல்லாசமாக, நீல ஜீன்ஸ்களுடனும் ஒரு சிவப்பு ரவிக்கையுடனும். நுழைவாசலில் சிகரெட்டை வீசியெறிந்து விட்டுப் பின் படம் படமாய் போய்ப் பார்க்கிறவளாய், சமயா சமயங்களில் விமர்ச்சிக்கவோ தன் அபிப்ராயத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவோ என்னை நோக்கித் திரும்புகிறவளாய் அவள் கவனிக்கிறாள். நான் ஓவியங்களுக்காக அங்கே இருக்கவில்லை என்பதையோ, கொஞ்சம் பின்னாலிருந்தும் பக்கவாட்டிலிருந்தும் நான் பார்க்கும் முறை அவளுடையது போன்றதல்ல என்பதையோ அவள் கண்டுபிடிக்கவேயில்லை. படத்துக்குப் படம் சென்ற பார்க்கும் அவளுடைய மெதுவான பிரதிபலிப்பான நடை, அவளை மாற்றிக் காட்டுகிறது என்பதை, நான் கண்களை இறுக்க மூடிக் கொண்டு என் கரங்களில் அவளை அழுத்தமாகப் பிடித்துக் கசக்குவதற்கும் அவளுடன் ஒரு சித்தப்பிரமைக்குள் செல்வதற்கு எதிராகவும், முன் அனுபவமற்று முழுதாகப் பறக்கத் துடிக்கும் பைத்தியக்காரத்தனம் கொஞ்சம் பிறக்க, நேராகப் பொது ஜனங்களிடைப் புகுந்து வெளியேறத் துடிப்பதற்கு எதிராகவும் போராடிக் கொண்டிருந்ததை அவள் அநேகாக உணரவேயில்லை. ஆசுவாசம் கொண்டவளால், தன் சந்தோஷமும் கண்டுபிடிப்பின் அதிசயமும் கலந்து இயல்போடு, கனமேயில்லாமல், தன்னுடைய தயக்கங்களும் என்னிலிருந்து வேறான ஒரு காலவெளியில் செதுக்கப்பட்டதை உணராமல், என் தாகத்தின் எதிர்பார்ப்பு மிகுந்த உணர்ச்சி வேகத்திலிருந்து அந்நியமானவளாய் அவள் தோன்றினாள்.
சங்கீதத்தைப் பார்க்கும் அலனா, ரொம்ப்ராண்டைப் பார்க்கும் அலனா - இதுவரை எல்லாமே ஒரு நிச்சயமற்ற சகுனாமாகவே இருந்தன. ஆனால், இப்போது என் நம்பிக்கை பொறுக்க முடியாமல் நிறைவு பெற ஆரம்பித்தது. நாங்கள் அங்கே வந்து கபடமின்மையுடன் ஓவியங்களில் தன்னைப் பறிகொடுத்தவர்களாய், ஒரு நிலையிலிருந்து இன்னொன்றுக்காகப் போய்க் கொண்டு, அவளது தோரணைகளைப் பதுங்கியிருந்து வேவுபார்க்கும் பார்வையாளனைப் அறியாதவளாய் அலானா தோன்றினாள். அவளுடைய சிரத்தின் முன் நோக்கிய சாய்வு, அவளுடைய கரங்களின் அல்லது அவளது உதடுகளின் அசைவு, உள்முகமாக அவளுக்குள் உள்ளோடும் அவளை, இன்னொருத்தியாக காட்டும் வரைக்கும் தனக்குள் முழுதாக ஓடியாடுவதான வர்ணவியலைத் தேடி, அந்த அடுத்தவள் எப்போதுமே அலனாவாக இருக்க, தன்னை இன்னொரு அலனாவாகச் சேர்த்தெழுப்ப, சீட்டுக்கட்டு முழுதும் காலியாகும் வரை, சீட்டுக்கள் அணிவகுக்கின்றன. அவளுக்குப் பக்கமாக, காலரியின் சுவரையொட்டி, மெதுவாக நடந்துகொண்டே, தன்னை ஒவ்வொரு ஓவியத்துக்கும் அவள் ஈந்து கொண்டிருப்பதை கவனித்தேன். அவளிடமிருந்து ஓவியத்துக்கும், ஓவித்திலிருந்து என்னிடமும், மீண்டும் திரும்பி அவளிடமும் செல்லும் ஒரு முக்கோண மின்னல் வேக வீச்சில், என் கண்கள் அகண்டு பெருகின. அவளை சுற்றிலுமுள்ள மாறுபட்ட பிரபை, ஒரு கணம் பின்னதுக்கு வாழவிட்டு, ஒரு புதிய ஒளிவட்டம் அமைப்பதையும், சாசுவத நிர்வாண நிலைக்கு, சத்திய நிலை ஒன்றில் அவளைப் பகிரங்கப்படுத்திக் காட்டும் விதத்தில், வர்ண அடர்த்தி பெற்று மாறுவதைத் சிக்கெனப் பிடித்தன என் கண்கள். இந்த பிரித்துக் காட்டும் வர்ணக்கலவை, திரும்ப நிகழ்வது எவ்வளவுதூரம் சாத்தியம் என்பதை முன்னறிவது அசாத்தியமாகியது. எத்தனைப் புதிய பல அலனாக்கள், ஒரு தொகுப்பின் பின்வரும் தீர்மானத்துக்கு என்னை இறுதியில் இட்டுச்செல்லும்? நாங்களிருவரும் திருப்தியடைந்தவர்களாய் வெளிப்படத் தோன்ற, எதையும் அறியாதவளாய், தனக்குக் குடிப்பதற்கு பானம் வாங்கும்படி என்னிடம் சொல்வதற்கு முன், புதிய சிகரெட் நீண்டகாலத் தேடல் கடைசியாக உச்சகட்டத்தை அடைந்து விட்டது என்பதை நான் அறிந்த நிலையில், இதன் பிறகு இதிலிருந்து, என் காதல், புரிந்துகொண்டும் புரியாமலும் கூட உருவெடுக்கும் என்பதை உணர்ந்த நிலையில், மூடிய கதவுகள், தடுக்கப்பட்ட நடைபாதைகள் பற்றிய நிச்சயமின்மை இல்லாமல், அலனாவின் தெரிந்த பார்வை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது.
எதிர்புறத்தில், கருத்த பாறைகளின் பின்னணியில் ஒரு தனித்த படகு. அங்கே அவள் அசைவற்று நெடுநேரம் இருந்ததைக் கவனித்தேன். அவளது கரங்களின் புலனாகாத சிறகடிப்பு, ஆகாயத்தில் நீந்துவதாக, கடலுள் நீந்துவதாக, தொடுவானங்களிலிருந்து பறப்பதாக அவளைத் தோன்ற வைத்தது. ஆச்சரியப்படும் சக்தியை நான் நீண்ட நேரம் தக்கவைத்திருக்க முடியவில்லை. அந்த இன்னொரு படம் - ஈட்டிமுனைக் கம்பிக்கிராதி ஒன்று துண்டித்து விலகிச் சென்று, மரத்தொகுதியின் எல்லையில் நிற்பதான ஓவியம் - ஒரு சரியான நோக்கு நிலையைத் தேடுவதற்கு அவளைப் பின்வாங்க வைத்தது. திடீரென்று விலகி வெறுத்தல், ஒப்புக்கொள்ள முடியாத எல்லைக்கோட்டைப் புறமொதுக்குதல், பறவைகள், கடலின் ராட்சஸ மிருகங்கள், மௌனத்தினுள் ஜன்னல்கள் திறந்துகொள்கின்றன அல்லது மரணம் என்ற போலியான தோற்றத்தை உள் நுழைய விடுகின்றன. ஒவ்வொரு புதிய ஓவியமும் அலனாவை மேன்மேலும் ஈர்த்து இழுத்துச் சென்றது. அவளுடைய முந்திய நிறத்தை ஈர்த்து அவளிடமிருந்து கொள்ளையிட்டுச் சென்றது. அவளிடமிருந்த, சமயத்துக்குத்தக சரி செய்துகொள்ளும் அநுசரணச் சுதந்திரத்தைப் பிடுங்கியெறிந்தது. பறத்தலை, விரியத் திறந்த வெளிகளை, இரவையும் இன்மையையும் எதிர்கொண்டு மறுக்கும் அவளை, சூரியவெளியின் வியாகூலத்தை, ஃபோனிக்ஸ் பறவையாகும் அதிபயங்கர ஆவல் துடிப்பை ஸ்திரப்படுத்தின. அவளுடைய பார்வையைத் தாங்குவது எனக்கு அசாத்தியம் என்பதை அறிந்தவனாய், பின்புறமாக நான் காத்திருந்தேன். தீர்மானத்தில் பிறந்த திகைப்பை என் முகத்தில் அவள் கண்டபோது, கேள்விக்குறியின் எதிர்பாராத வியப்பை அவள் கொண்டாள். ஏனெனில் நானும் கூட அப்படித்தானிருந்தேன். இதுதான் எனது லட்சியப் பயணத்தின் இலக்காக இருக்கும் அலனா. என் அலனாவியம். இதுதான் நான் ஆசைப்பட்டது. நகரத்தின் நிகழ்காலத்தாலும் கஞ்சத்தனத்தாலும் இதுவரை கடிவாளமிடப்பட்டிருந்தது.
இது முதற்கொண்டும், இறுதி வரையிலும். இப்போது அலனா, கடைசியில் அலனாவும் நானும். அவளுடைய நிர்வாணத்தை என் கரங்களுக்குள் பிடித்தணைக்க ஆசைப்படுகிறேன். நான் அவளுடன் காதலுறவு கொள்ள, எல்லா விஷயங்களும் தெளிவுபவிடும். எல்லா விஷயங்களும் எப்போதைக்குமாகப் பேசி முடிக்கப்பட்டிருக்கும் (அவற்றில் பலவற்றை நாங்கள் முன்பே அறிந்திருப்போம்) வாழ்வின் முதல் விடியல் பிறக்கும்.
காலரியின் இறுதியை நாங்கள் அடைந்துவிட்டோம். இன்னும் என் முகத்தை மறைத்தபடி, காற்றும் வீதி விளக்குகளும் என்னைப் பற்றி அலனா அறிந்தவைகளுக்குள் மீண்டும் என்கைக் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் வெளிப்புறக்கதவை நோக்கி நான் சென்றேன். மற்ற பார்வையாளர்கள் என்னிடமிருந்து அவளை மறைக்க, ஒரு ஓவியத்தின் முன்பு - நீண்ட நேரமாக அசைவற்றுப் பார்த்துக் கொண்டு அவள் நிற்பதைக் கண்டேன். கடைசியாக நிகழ்ந்த ஒரு மாற்றம், மற்றவர்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் நேர்த்தியாக பிரிக்கப்பட்டு, மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் சிலையாக அவளைப் படைத்துக் காட்டியது. அந்தப் பூனை, ஓசிரிஸை ஒத்த தோற்றத்திலிருப்பதைக் கவனித்தேன். எங்களது பார்வையைத் தடுக்கும் பக்கச்சுவரின் ஜன்னல் வழியாக, தொலைதூரத்திலிருந்த ஏதோ ஒன்றை அது நோக்குவது போலிருந்தது. தனக்கேயுரிய அலட்சயத்துடன் அசைவற்றதாக அலனாவின் நிரந்தர அசைவின்மையைவிட மாற்றுக்குறைந்த அசைவின்மையில் உள்ளதாக அது தெரிந்தது. ஏதோ ஒரு வகையில், முக்கோணம் சிதறிப் போனதை நான் உணர்ந்தேன். என்னை நோக்கித் தன் தலையை அலனா திருப்பியபோது, அந்த முக்கோணம் அதற்குமேல் உயிர் தரித்திருக்கவில்லை. ஓவியத்துக்குள் அவள் ஆழ்ந்துவிட்டாள். அவள் திரும்பி வரமாட்டாள். இப்போதும் பூனையின் பக்கத்தில்தான் அவள் இருந்தாள். அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்று யாரும் காணமுடியாத, ஜன்னலுக்கு அப்பால் பார்த்துக் கொண்டு, நேர்கொண்டு பார்க்கும் வேளைகளில் மட்டும் என்னைப் பார்த்துக் கொண்டு, அலனாவும் ஓசிரிஸும் நின்றார்கள்.
நன்றி : சங்கேதங்களும் குறியீடுகளும்
மேலைநாட்டுச் சிறுகதைகள்
தமிழில் : கால சுப்பிரமணியம்
வெளியீடு ; குறுத்து