Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புழு -‌ ‌சிறுகதை

Advertiesment
புழு -‌ ‌சிறுகதை
, வெள்ளி, 23 அக்டோபர் 2009 (15:33 IST)
அரசாங்கம் அறி‌வித்திருந்த சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது தான் இந்த ராமசாமி கவுண்டர் பிணங் கிடங்கு. இதன் உரிமையாளர் குணசேகரன் என்கிற 29 வய்து வேதியியில பட்டதாரி. இவனுடைய நண்பர்களில் சிலர் சோப்பு கம்பெனி, ஷாம்பு கம்பெனி எனத்தொடங்கி கையைச் சுட்டுக்கொண்ட போது இவனுக்கு மட்டும் இந்த யோசனை எப்படி வந்ததென்று ஆச்சரியப்பட்டவர்கள் பலர்.

ராமசாமி கவுண்டர் - பாதர் அஃப் சிவபெருமான் - பிணக்கிடங்கின் வெற்றியைப் பார்த்து நகரத்தில் இன்னும் இரண்டு மூன்று கிடங்குகள் முளைத்திருந்தாலும் இதன் வளர்ச்சியில் ஒன்றும் பங்கம் வந்துவிடவில்லை. கிடங்குக்கான வாடகை, மின்சாரச்செலவு, டெலிபோன் பில், இராசயனப் பொருட்கள் வாங்குவதற்கான செலவு, உதவியாளன் பாதுகாவலன் இவர்களுக்கான சம்பளம், வங்கிக்குக் கொடுக்க வேண்டிய பாக்கி, இன்னும் உபரி செலவுகள் போக கைக்கு வந்த லாபம் ஒரு பெரிய அரசாங்க நிறுவனத்தில் உத்தியோகம் பாத்திருந்தால் கிடைத்திருக்ககூடியதைவிட அதிகமாகத்தான் இருந்திருக்கும்.
வெளிநாட்டு விருந்தினர்களுக்காக காத்திருப்பவை, சுடுகாட்டில் இடம் கிடைக்காதவை, இறந்து போன அபூர்வ விஞ்ஞானிகள், மாபெரும் தலைவர்கள், விசாரணைக்குரியவை எனப் பலதரப்பட்ட பிணங்கள் இங்கே வந்து நாள், வார, மாத, வருஷ வாடகைக்கு - சௌகரியமாக - தங்கிச் சென்றன

முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்புயென முறையே 4, 10,25 படுக்கைகள் கொண்ட மூன்று பிரிவுகள் இங்கே உண்டு, மூன்றாம் வகுப்புக்கு வெறும் ஸ்டீல் கட்டில்கள், இரண்டாம் வகுப்புக்கு குஷன் வசதி, முதல் வகுப்புக்கு குஷன் வசதியுடன் குளு குளு வசதியும் உண்டு. முதல் வகுப்பில் வசதிமிக்க தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற வி.ஐ.பி களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அபூர்வமாக சில பெண் சடலங்களும் வந்து தங்குவதுண்டு. இவைகளுக்கென்று தனிப்பகுதி எதுவுமில்லை.

பிணக்கிடங்கு என்றவுடன் ஏதோ சகித்துக்கொள்ள முடியாத நாற்றம் வீசுகின்ற இடமாக நீங்கள் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். மிதமான மருந்து வாசனையைத் தவிர வேறு எந்த துர்நாற்றத்தையும் நீங்கள் நுகரமுடியாது. அதிலும் அந்த மருந்துகள் எல்லாமே வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டவை.

முதல் மற்றும் இரண்டாம் வகுப்பை ஒட்டியே குணசேகரனின் அலுவல் அறை. மூன்றாம் வகுப்பு மட்டும் எதிர்புறத்தில் இருந்தது. இரண்டு பகுதிகளையும் பிரிக்கும் வராண்டா நீண்டு சென்று கேட்டருகில் முடிகிறது. அந்த முனையில் தான் வாட்ச்மேன் கண்ணன் ஒரு ஸ்டூலில் உட்கார்ந்திருப்பான். அவனுக்கு கட்டிடத்தை பாதுகாப்பது மட்டுமே வேலையல்ல. மணி என்கிற மணிவண்ணனுடன் கிடங்குக்கு வரும் பிரேதங்களை எடுத்துச் சென்று படுக்கையில் கிடத்தி தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். பிரேதங்கள் டிஸ்சார்ஜ் ஆகும்போது உரிமையாளர்களுக்கு ஒத்துழைப்பதால் தனியாக சன்மானமும் வாங்கிக்கொள்வான். பிணங்கள் புழங்கும் இடம்தானே பிரச்சனை என்ன இருந்துவிடப் போகிறது என்று நீங்கள் நினைக்க கூடும். அசம்பாவிதங்களும் சிலபொழுது நடந்துவிடுவதுண்டு. ஏசுபெருமான் கூட மூன்றாம் நாள் தான் உயிர்த்தெழுந்தார் என்று சொல்கிறார்கள்; ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தோழரோ அன்று சாய்ந்திரமே எழுந்து உட்காந்துகொண்டு தோழர்களே இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி சவம்போல உறங்கிக் கொண்டிருப்பீர்கள்! விழித்தெழுங்கள்! என்று பேச ஆரம்பித்துவிட்டார். ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது ஆவேசமான தனது கோஷத்துடன் பிராணனையும் சேர்த்து வெளியேற்றிவிட்டதாக சொன்னார்கள். ஒரு கம்யூனிஸ்ட்டிற்கு இப்படிப்பட்ட ஒரு வீரமரணம் வருவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பது கட்சி வட்டாரங்களில் சிலருடைய அபிப்பிராயம். சீனாவுக்கு சுற்றுப்பயணம் போயிருந்த ஒரு மாநில கமிட்டி பிரமுகரின் மரியாதையும் அத்தோழரின் பிரேதத்திற்கு தேவையிருந்தது. அதுவரை பிரேதத்தை பாதுகாக்கும் பொறுப்பு ராமசாமி கவுண்டர் பிணக்கிடங்குக்கு கொடுப்பதென்று கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தோழர் உயிர்த்தெழுந்த தகவலை உடனே தெரிவிக்க முடியாமல், மறுநாள் வரை பொறுத்திருக்க வேண்டி வந்தது. குணசேகரன் அன்கோ அதுவரை பட்ட கஷ்டம் சொல்லிமாளாது.

மருந்து சரியில்லை, ஜன்னலில் காற்று வரவில்லை, அறையில் விளக்குகள் எரியவில்லையென சதா புகார் புலம்பல்தான். குணசேகரனை ஏகாதிபத்தியத்தின் கையாள் என்று குற்றம் சாட்டினார் தோழர். மருந்துக்களை எல்லாம் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கிறானாம் என்ன துரோகம் ! வேதியியலில் மட்டுமே அறைகுறை அறிவுபெற்றிருந்த அவனுக்கு இந்த குற்றச்சாட்டுகளுக்கான அர்த்தம் எதுவும் விளங்கவில்லை. இருந்தாலும் தன்னை ஒரு துரோகி என்று மட்டும் அடையாளம் காட்ட முயற்சிக்கிறார் என்பதை அறிந்து கலக்கமடைந்தான். சரியாகச் சொல்வதென்றால் இந்த பிணக்கிடங்கையே வர்க்கப் போராட்டக் களமாக ஆக்கிவிட்டார். முதல் வகுப்பு முதலாளி வர்க்கம், இரண்டாம் வகுப்பு நடுத்தர வர்க்கம், மூன்றாம் வகுப்பு பாட்டாளி வர்க்கம்!.

ஒரு மனுஷன் செத்தானா பிழைத்தானா என்றுகூட பார்க்காமல் என்னய்யா அப்படி அவசரம் என்று கேட்பவராக நீங்கள் இருந்தால், இந்த நகரத்திற்கே லாயக்கில்லாத சுத்த கிராமத்தான் அல்லது மனிதாபிமானம் பிடித்த ஆளாகத்தான் நீங்கள் இருக்க வேண்டும்.

எப்படியோ வெற்றிகரமாகவே ஓடிக்கொண்டிருந்த பிணக்கிடங்குக்கு வேறு வடிவத்தில் புதுப்பிரச்சனை ஒன்று முளைத்தது. வெளிநாட்டிலிருந்து மருந்துக்களை வாங்கி சப்ளை செய்யும் டீலர் ஏமாற்ற ஆரம்பித்தான். ‘இன்னும் உனக்கு வரவேண்டிய மருந்துகள் வந்து சேரவில்லை’ என்று பொய்சொல்லிவிட்டு, அந்த மருந்துகளை அதிக கமிஷன் வாங்கிக்கொண்டு வேறு கிடங்குக்காரர்களுக்கு கொடுத்துவிட்டான். இதோ வந்துவிட்டது அதோ வந்துவிட்டது. பொறுத்துக்கொள்ளுங்கள் என்று கேட்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான். குணசேகரன் அதுவரை காத்திருக்கலாம்; பிணங்கள்?


உள்நாட்டிலேயே அந்த மருந்தைததயாரிக்கும் - வெளிநாட்டுக் கம்பெனி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுதானாம் - கம்பெனியின் பிரதிநிதி ஒருவன் இரண்டு மாதங்களுக்கு முன்னால் வந்து மாதிரி பாட்டில்கள் சிலவற்றை கொடுத்துவிட்டுப் போயிருந்தான். அதை பரிட்சித்துப் பார்க்க குணசேகரன் இதுநாள்வரைத் துணியவில்லை. புதிதாக வந்து சேர்ந்திருந்த ஒரு பிணத்திற்கு மட்டும் அதை உபயோகப்படுத்திப் பார்ப்பதென்று இப்போது தைரியத்துடன் முடிவு செய்தான். பரிசோதனையில் சாதகமான பலனே கிடைத்தது. விலையும் குறைச்சல் அவனுடைய மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்.

ஆர்டர் கொடுத்த உடனே மருந்துகள் வந்து சேர்ந்தன. இனிமேலும் அந்த டீலரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிரு‌க்க தேவையில்லை. லாபமும் அதிகம்.

குணசேகரனின் மகிழ்ச்சி இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை. விபரீதம் தலைகாட்டத் தொடங்கியது. மருந்து வாசனையுடன் பிணம் அழுகும் வாசனையும் கலந்து வர ஆரம்பித்தது. குணசேகரன் பதறிப்போய்விட்டான். அவசர அவசரமாக அந்த கம்பெனிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான். கம்பெனியும் தாமதிக்காமல் தனது பிரதிநிதி ஒருவனை அனுப்பி வைத்தது. சோதனை செய்து பார்த்த அவன், தவறு எங்களுடைய மருந்தில் இல்லை என்றும், முன்பு உபயோகித்துக் கொண்டிருந்த மருந்துடன் இந்த மருந்தும் கலந்து ஒரு புது மருந்தை உற்பத்தி செய்து விட்டதாகவும், அது பிரேதங்களில் வேகத்துடன் ஊடுருவி அழுகச் செய்கிறது என்றும் சொல்லிவிட்டான். அவன் சொன்ன உண்மைக்கு ஒரே உறுதியான சாட்சி, ஆரம்பத்தில் இந்த மருந்தை மட்டுமே உபயோகித்துப் பார்த்த பிணம் கெடாமல் இருப்பதுதான்.

நடந்துபோய்விட்ட தவறைத்திருத்துவதற்கு வேறு வழியெதுவும் இல்லையா?என்று கேட்டான் குணசேகரன். கம்பெனியின் ஆராய்ச்சி பிரிவில் கேட்டுச் சொல்வதாகச் சொல்லிவிட்டுப் போன அவன், மறுநாள்’ இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. அழுகி புழுவைப்பதுதான் இன்னும் பாக்கியிருக்கிறது’ என்பது போன்ற ஒரு தகவலைச் சொன்னான்.

குணசேகரன் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போய் உட்கார்ந்துவிட்டான். எல்லாமே பாழ். கிடங்குக்கு இனி எதிர்காலமென்று ஒன்றுமில்லை. ஏதாவது அதிசயம் நடந்து எல்லாப் பிரேதங்களையும் சொந்தக்காரர்கள் இப்போதே வாங்கிக்கொண்டு போய்விட்டால் போதும்; இதைவிட அதிகம் ஒன்றும் நடக்க வேண்டாம். விஷயம் வெளித்தெரியாமல் போய்விடும் மோசமான ஒரு அனுபவத்துடன் கிடங்கை தொடர்ந்து நடத்த ஒரு வாய்ப்பு. இது நடக்கக்கூடிய காரியமா?

அன்று இரவு முழுக்க தூக்கம் வராமல் தன் அறைக்குள்ளாகவே நடமாடிக் கொண்டிருந்தான். கிராமத்திலிருந்து இங்கே வந்து சேர்ந்தபோது இப்படிப்பட்ட ஒரு முன்னேற்றம் ஏற்படுமென்று எப்படி அவன் யோசித்ததில்லையோ அதுபோலவே இந்த சரிவையும் அவன் ஒரு முறைகூட எதிர்பார்த்ததில்லை.

இன்னும் இரண்டே நாள் போதும், எல்லா பிரேதங்களும் புழு நெளிவதற்கு உரிமைக்காரர்களுக்கு என்ன பதில்சொல்வது! திரும்ப எடுத்து போக வருவார்களேயானால் புழுக்களையா வாரிக்கொடுக்க முடியும்! படுக்கை முழுவதும் புழுக்கல் நெளிவது போல இருந்தது. அவனுக்கு அருவருப்பும், புழுவின் நெளிவு இயக்கமும் நரம்பு முழுவதும் பரவுவது போல உணர்ந்தான்.

மறுநாள் பேய் பிடித்தவன் மாதிரி லெட்ஜரை எடுத்து மணியிடம் வீசி எல்லா புழுக்களின் விசாலங்களையும் குறித்துக் கொள்ளச் சொன்னான். டெலிபோன் நெம்பர் உள்ள புழுக்களிடம் பேசி… மற்ற புழுக்களுக்கு நேரடியாகப் போய் தகவல் சொல்லிவிட்டு வண்டிச்சாவியைப் புழுவிடம் கொடுத்து… புழுவை விரித்துப்படுத்து புழுபோல நெளிந்து அழுதான்.
‘புழு அழுமா?”
யார் கேட்பது?
யார் பதில் சொல்வது?


புழு அழும் புழு சிரிக்கும் புழு பாடும் புழு நடனமிடும் புழு எழுதும் புழு படிக்கும் புழு எழுதும் புழுக்கவிதை புழு புணரும் குழு புணர்ச்சி வழி வந்து சேரும் புழுப் புலம்பல் புழு உழும் நிலம் நெகிழும் புழு ஒலிந்து கொள்ளும் புழு ஆளும் புழு அகங்காரம் கொள்ளும் புழுவுக்குள் புழு நெளியும் அண்டப்புழு ஆகாசப்புழு…..

புழு மடையன் - ரெப்ரசண்டேடிவ் - திரும்பவும் வந்தான் அவனுடைய கழுத்தில் டைக்கு பதிலாக ஒரு மருந்து பாட்டில் குணசேகரன் தன் அறைக்குள் ஓடி கதவைச் சாத்துவதற்குள் அவன் உள்ளே வந்து விடுகிறான்.

‘திரும்பவும் உன்ன யார் வரச் சொன்னது?’
‘இந்த பாட்டில்…’
‘புழுச்சமாச்சாரம் எனக்கு வேண்டாம், ஓடிப்போயிடு’
‘இல்லே நீ வாங்கித்தான் ஆவனும்’
‘டேய்மணி! இன்னும் கொண்டு வந்திருக்கானாம், அந்தப்புழுவ எடுத்து இவன்கிட்ட காட்டு’

மணி தனது மேல் ஜோப்புக்குள்ளிருந்து ஒரு புழுவை எடுத்து அவன் முகத்தில் வீசியெறிந்தான். அது அவனுடைய மூக்கை பற்றிக் கொள்கிறது. குணசேகரன் ஓடி கைகள் இரண்டையும் முதுகுக்குப் பின்னால் வளைத்துப் பிடித்துக்கொள்ள அவன் அலறித்துடிக்கிறான். புழு அவனுடைய மூக்கை கொறித்து தின்னத் தொடங்குகிறது. அதனுடைய உடல் சிறிது சிறிதாக பருத்து வளர வளர ரெப்ரசண்டேடிவ்வின் உடல்துரிதமாக கலைந்து காணாமல் போகிறது. பன்றி அளவுக்கு பெருத்திருந்த புழுவின் கண்கள் குணசேகரனை பார்க்கின்றன.
அவன் மகிழ்ச்சியுடன் சிரிக்கிறான்.

புழுவும் சிரிக்கிறது.

ஒரு கயிற்றால் அதைக் கட்டி வெளியே கூட்டிக்கொண்டு போகிறான். அதுவும் நெளிந்து நெளிந்து அவனுடன் நகர்கிறது. வராண்டவில் ஊர்ந்து கொண்டிருந்த புழுக்களை ஒருகூடையில் வாரிப்போட்டுக் கொண்டிருக்கிறான் மணி.

குணசேகரனை நிமிர்ந்து பார்த்துச் சொல்கிறான்;
‘அந்த ஆள உள்ள விட்டதே தப்பு சார்’
‘இப்ப மட்டும் என்ன குடிமுழுகிப்போச்சி’
‘இந்த பொண்மெல்லாம் இப்படி புழுவா…’
‘மனசன் ஒடம்புலெயிருந்து வேற என்ன கொட்டுமுன்னு எதிர்பார்த்த! விபூதியும் சந்தனமுமா?’ சிரித்துக்கொண்டே சொல்கிறான்.

‘இந்த புழுவையெல்லம் வீட்டுக்கு கொண்டுபோயிபத்திரமா சமைச்சி சாப்பிடு; மனுசன் தசையில செய்ஞ்ச புழுன்னா அதுக்கு தனிருசிதான். வீட்டுல ஃப்ரிட்ஜ் இருந்தா அதல வச்சி சாப்பிடு, தேவையானப்ப எடுத்துக்க; வாட்ச்மேன் எங்க?’

உள்ளதான் இருக்கான். புழுவெல்லாத்தியும் தனித்தனிக் கூடையல வாரி அட்ரஸ் எழுதி ஒட்டச் சொல்லியிருக்கேன்’

குணசேகரனுக்கு பக்கத்திலிருந்த புழு நாக்கை விலாசுகிறது; அதற்கு பசி!
‘கொஞ்சம் பொறுத்துக்க, அதுகுள்ள என்ன அவசரம்?’

முன்றாம் வகுப்பின் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போகிறான். காலில் நசுங்கிய புழுக்கள் பசையாகி தரையோடு ஓட்டிப் பிசுபிசுக்கின்றன. வாட்ச்மேன் தனது சோகம் கம்மிய முகத்துடன் புழுக்களை கூடையில் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தவன் குணசேகரனை நிமிர்ந்து பார்த்து திடுக்கிடுகிறான்.

‘சார் உங்க காதுலயிருந்து ஒரு புழு வெளிவந்து தொங்கிக்கிட்டிருக்கு’

‘என் காதுலியா?’


சாவகாசமாக தேடி எடுத்துப் போட்டுவிட்டு, ‘இதுக்கு ஏய்யா இப்படி பதர்ற? புழுதானே?’ சப்தமாக சிரிக்கிறான். புழு கயிற்றை இழுத்துக் கொண்டு இன்னும் கெடாமலிருந்த பிணத்தை நோக்கி நகர்கிறது. குணசேகரன் வாட்ச்மேனிடம் சொல்கிறான். ‘அதுக்கு ரொம்ப பசி; புழுவுக்கு மனுசனோட ருசி தெரியுது: மனுசனுக்குத்தான் இன்னும் புழுவோட ருசி தெரியல. தெரிஞ்சிட்டா அசிங்கமே பாக்கமாட்டான். புழுவுக்குள் மனுசன், மனுசனுக்குள்ள புழு…’

திரும்பவும் சப்தமாக சிரிக்கிறான்.

மிச்சமிருந்த ஒரு பிணத்தையும் தின்று தீர்த்துவிட்டு ஒரு மாடு அளவுக்கு பருத்து திரும்பி வருகிறது. உடம்பைப்போலவே அதன் பசியும் அதிகமாகியிருக்கவேண்டும். வாட்ச்மேன் நெருங்கி அவனுடைய காலை பற்றிப் பிடித்ததும் அவன் அலறித் துடிக்கிறான். தப்பித்து ஓடிவிடவேண்டும் என்ற எந்த எத்தனமும் பயனளிக்காமல் அவனும் பலியாகிக்கொண்டிருக்க ‘இப்ப என்ன ஆகிப்போச்சி?புழுதானே துன்னுது; துன்னுட்டுப் போகட்டுமே: செத்தாலும் நீ புழுவாத்தானே ஆகப்போறே’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறான் குணசேகரன். மணி உள்ளே வந்தவன் இந்த விபரீதத்தைப் பார்த்துவிட்டு ‘சார்’ என்று கத்திக்கொண்டே எங்கோ ஓடுகிறான்.

‘ஓடு, நீ மட்டும் எங்க போயிடுவே’
கேலியுடன் சிரிக்கிறான் வாட்ச்மேனின் மெலிந்த உடம்பை தின்பதற்கு புழுவுக்கு அதிக நேரமொன்றும் ஆகவில்லை. அது இன்னும் இரண்டு மடங்காக பருத்திருக்கிறது.

தன்னையும் அது விட்டு வைக்கப் போவதில்லை என்பதை அறிந்து கொண்டிருந்த குணசேகரன் ஒரு காதலியின் அணைப்புக்காக ஏங்கிக் காத்திருப்பவன் போல நின்று கொண்டிருந்தான். எதிர்ப்பெதையும் அவன் வெளிக்காட்டவில்லை. ஒரு வேர்கடலையை எடுத்து போடுவது போல அவனையும் விழுங்கி ஏப்பம் விட்டது.
பல்கிப் பெருகிய அதன் பசிக்கு இன்னும் தீனி வேண்டுமே! கதவின் வழியாக அதனால் வெளியேறவும் முடியவில்லை. இணைந்து கிடந்த புழுக்களையெல்லாம் நக்கித்தின்கிறது. அதன் பெரும் பசிக்கு உயிர்களென்ன ஜடங்களென்ன? கட்டில்கள், ஜன்னல்கள் எனத்தொடங்கி கூரைச்சட்டங்களையும் இழுத்து விழுங்கிய பிறகு, சரிந்து விழுந்த கூரைத்தகடுகள், சுவர்,சுற்றுச்சுவர் என்று காலி செய்து வெளிவந்து வானத்தை அண்ணாந்து பார்க்கிறது. தனது பசியின் எல்லை அப்போதுதான் அதற்கு தெரிந்திருக்க வேண்டும்.

அடுத்த கட்டிடம், அதற்கடுத்தது எனத்தின்று பலூன் போல உப்பிப் பெருத்ததும் ஜனங்கள் பயத்தில் அங்குமிங்குமாக சிதறி ஓடத்துவங்குகிறார்கள்.

எங்கு ஓடி தப்பிக்க முடியும் அவர்களால்?

அதன் பசிகொண்ட பெரும் வயிற்றுக்குள் நகரங்கள், நாடுகள் எல்லாம் சென்று மறைந்து, கடல் நீர் உறிஞ்சப்பட்டு, மிச்சமிருந்த பூமியையும் புழு விழுங்கி, அடுத்த கிரகங்கள், சூரியன், நட்சத்திர மண்டலங்கள் என தின்று தீர்த்து, ஒரே ஒரு புழுவாக மிஞ்சி நின்றது.

இனி பிரபஞ்சத்தின் சரித்திரத்தை எழுத நினைப்பவர்கள் ‘ ஆதியிலே ஒரு புழு இருந்தது’ என்று தொடங்கி இறுதியிலே ஒரு புழு இருந்தது’ என்று முடிக்க வேண்டியிருக்கும்.

ந‌ன்‌றி : உ‌ன்னத‌ம் 2
ஏ‌ப்ர‌ல் 1994

Share this Story:

Follow Webdunia tamil