பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், வைகறை தொடங்கி அந்தி சாயும் மட்டும் ஒரு சிறுத்தை மரப்பலகைகளை, இரும்புக் கம்பிகளை, அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களை, சுவரை, சமயங்களில் உலர்ந்த இலைகளால் நிரம்பி வழியும் ஓடையை பார்த்துக் கொண்டே இருந்தது.
அதற்கு தெரியாது; தெரிய வாய்ப்பில்லை, அது அன்புக்கும் குரோதத்திற்கும் ஏங்கிற்று என்று. அத்தோடு, பொருட்களை துண்டாகக் கிழிப்பதிலுள்ள சந்தோஷம் ஆர்வம்; காற்றில் மானின் வாசனை. இருப்பினும் ஏதோவொன்று அதை மூச்சுத் திணறடித்தது. ஏதோவொன்று அதனுள் திணறியது. கடவுள் சிறுத்தையோடு கனவில் பேசினார்: னீ இந்தச் சிறையில் வாழ்ந்து மடியப் போகிறாய். இதன் பயனாக எனக்குத் தெரிந்த ஒரு மனிதன் குறிப்பிட்ட சில தடவைகள் உன்னைக் காண்பான். பின் உன்னை மறக்க மாட்டான். உன் வடிவத்தை ஒரு குறியீடாக ஒரு கவிதையில் வார்ப்பான். அது இந்தப் பிரபஞ்சத்தில் நிரந்தர இடம் வகிக்கும். சிறைப் பிடிக்கப்பட்டதன் துன்பத்தை நீ அனுபவித்து விட்டாய். ஆனால் கவிதைக்கு ஒரு வார்த்தை கொடுத்திருக்கிறாய்' கனவில் அம்மிருகத்ஹின் துயரத்தை கதவுள் நீக்க, காரணங்களைப் புரிந்து கொண்ட அது தன் விதியையும் ஏற்றுக் கொண்டது. ஆனால் அது விழித்தெழுந்தபோது அதற்கு இனம்புரியாத ஒரு விலகலும், மடத்தைரியமும் உண்டாயிற்று. அந்த எளிய மிருகத்திற்கு இந்த உலகின் சூட்சுமம் புரிந்து கொள்ள முடியாத புதிராக எஞ்சியது.
வருடங்களுக்குப் பிறகு, பிற எல்லா மனிதர்களையும் போல் ஆதரவுக்கு எவருமின்றி தனியே ரவின்னாவில் தாந்தே இறந்து கொண்டிருந்தபோது, கடவுள் அவருடைய கனவில் தோன்றி, அவருடைய வாழ்வின், படைப்பின் ரகசிய நோக்கத்தை அவருக்கு தெரியப் படுத்தினார். அப்போது வாழ்வில் விழைந்த கசப்பு ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாகத் தோன்றியது. மரபு தொடர்ந்தது. விழித்து எழுந்தபோது விசேஷமான ஒன்றை, தான் பெற்றதாகவும் அதை தொலைத்து விட்டதாகவும் அவர் உணர்ந்தார். அவரால் ஒரு போதும் அதையோ அல்லது அதன் கண நேரத் தோர்றத்தையோ மீட்டெடுக்க முடியவில்லை. அந்த எளிய மனிதருக்கும் இந்த உலகின் சூட்சுமம் புரிந்து கொள்ள முடியாத, சிரமமான, சிக்கலானதொரு புதிராகவே எஞ்சியது.
நன்றி : பிரம்மராட்சஸ்