"இதழாய் ஒரு எழுத்தியக்கம்" என்ற முழக்கத்துடன் மீண்டும் வெளிவந்து கொண்டிருக்கும் "கவிதாசரண்" இதழின் பெயரையே அதன் ஆசிரியராகக் கொண்டு வருகிறது. மார்க்சிய அரசியல் வீழ்ச்சியடைந்த பிறகு தீவிர இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்திவரும் துறையான தலித் அரசியல், பண்பாடு ஆகியவற்றில் புதிய விவாதங்களையும், கருத்துகளையும் கிளம்பி வரும் கவிதாசரண், பெரியார் ஒரு தலித் விரோதி போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தொடர்ந்து தனது எதிர்வினையை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இதழிலிருந்து, "தமிழ் இலக்கியவாதிகள்-2" என்று அ.மார்க்ஸ் எழுதியுள்ள "கட்டுரை" ஒன்றை வெப்உலகம் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.)
தமிழ் இலக்கியவாதிகள் - 2
அ. மார்க்ஸ்
சென்ற மார்ச் மத்தியில் "உலகமயமும் தலித்களும்" என்றொரு கருத்தரங்கை தோழர் ரஜினி மதுரையில் ஏற்பாடு செய்திருந்தார். அதில் பங்கு பெறச் சென்றிருந்த நானும் சுகனும் (பாரீஸ்) நண்பர் பழனிச்சாமி புதிதாய் வாங்கியிருந்த காரில் கன்னியாகுமரி வரை சும்மா "ஜாலி"யாகக் கிளம்பினோம். சுகனுக்கு இரண்டு ஆசைகள். கிடைத்தால் கொஞ்சம் "கள்" அருந்திப் பார்ப்பது; கவிஞர் என்.டி.ராஜ்குமாரைச் சந்திப்பது. எங்களின் முதலாவது ஆசை நிறைவேறவில்லை (வேறு வகையில் அதை ஈடுகட்டினோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். சுகன்தான் பாவம். அவர், கள் தவிர வேறு கதையும் அருந்துவதில்லை என்றார்) ராஜ்குமாருடன் பொழுது இனிதாய்ப் போனது. அவர் சொன்ன ஒரு தகவல் எங்களுக்கு அதிர்ச்சியாக இந்தது. சில நாட்களுக்கு முன் (மார்ச் 9) நாகர்கோவிலில் நடைபெற்ற ஒரு இலக்கிய விழாவில் எழுத்தாளர் லட்சுமி மணிவண்ணனை தமிழினி வசந்தகுமாரும் ஜெயமோகனும் அடித்துவிட்டார்கள் என்பதுதான். குடித்துவிட்டுத் தொந்தரவு செய்ததால் அப்படி அவர்கள் நடந்துகொள்ள நேர்ந்தது என்கிற ரீதியில் ராஜ்குமார் குறிப்பிட்டார்.
மணிவண்ணனை அறிந்த எங்களுக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது. காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இருந்தவர். தனது நூலைச் சுந்தர ராமசாமிக்கு அர்ப்பணித்திருந்தார். எனினும் காலச்சுவடிலிருந்து விலக்கப்பட்டவர் அல்லது விலகியவர். எந்த நிறுவனத்திற்குள்ளும் தன்னை நிறுத்திக் கொள்ளும் சாதுரியமற்றவர். குடிப்பவர். மனைவி குழந்தையுடன் சிரமப்படுபவர். தனக்கென ஒரு மொழியும் கற்பனைத் திறனும் உள்ள எழுத்தாளர்... இப்படியாகத்தான் மணிவண்ணன் எனக்கு அறிமுகம். மூன்று அல்லது நான்கு முறை அவரை நான் சந்தித்திருப்பேன்.
நாங்கள் சென்னையில் நடத்திய கூட்டங்களிலும் இப்படியான "கலாட்டாக்களை" அவர் நடத்தியுள்ளார். "அடையாளம்" நூல்கள் வெளியீட்டு விழாவில் நல்ல போதையுடன் வந்திருந்த அவர் பேசிக் கொண்டிருந்தபோது மேடைக்கு வந்தார். "போரடிக்குது; சீக்கிரம் கூட்டத்தை முடியுங்கள்" என்றார். நண்பர்கள் அவரை அழைத்துக் கொண்டு போனார்கள். மீண்டும் வந்து குடிப்பதற்குக் காசு கேட்டார். இப்படியாக அன்றைய கூட்டம் கழிந்தது.எப்படி இருந்தாலும் கூட்டத்தில் அவர் பலர் முன்னிலையில் அடிபட நேர்ந்தது என்பது எங்களைப் புண்படுத்தியது. ராஜ்குமார் வழிகாட்டலில் மணிவண்ணனின் வீட்டிற்குச் சென்றோம். என்ன நடந்தது என ராஜ்குமார் முன்னிலையிலேயே கேட்டேன். அவர் சொன்னதிலிருந்து :
வழக்கம் போல அன்றைக்கும் குடித்திருக்கிறார். காலச்சுவடு கம்பெனியைச் சேர்ந்த "எம்.எஸ்." என்பவரின் நூல்கள் வெளியீட்டுக் கூட்டம் அது. "தமிழினி" சார்பாக நடைபெற்ற அந்த விழாவை ஜெயமோகன் ஏற்பாடு செய்துள்ளார். எம்.எஸ். ஏற்புரை வழங்கிக் கொண்டிருக்கிறார். "எனது பேராண்டிகள் இந்தக் கூட்டத்தை நடத்துகிறார்கள்" என அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது, "நானும் உங்க பேராண்டிதான் அண்ணாச்சி" என்று சொல்லிக் கொண்டு மேடையில் ஏறி தனது "சிலேட்" இதழ் ஒன்றை அவருக்குப் பரிசளித்துள்ளார் மணிவண்ணன். உடனடியாக அவரைப் பிடித்துத் தள்ளி வெளியே இழுத்துச் சென்றுள்ளனர். கூட்டம் முடிந்தவுடன் வசந்தகுமார் தொடங்கி வைக்க ஜெயமோகன் மணிவண்ணனை நாலு சாத்து சாத்தியிருக்கிறார்.
கனத்த நெஞ்சோடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது ராஜ்குமாரிடம் கேட்டேன்: "இதுதான் நடந்ததா, இல்லை கூடுதலாக
மணிவண்ணன் ஏதாவது செய்தாரா?" அதற்குமேல் ஒன்றும் நடக்கவில்லை என்றார் ராஜ்குமார். இதற்கு இப்படி அடித்திருக்க வேண்டியதில்லையே என்று நான் சொன்னதற்கு அவர் பதில் சொல்லவில்லை.சென்னை திரும்பியவுடன் கவிஞர் விக்ரமாதித்தன் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார். இதைக் கண்டிக்க வேண்டும் என்றார். கண்டிப்பது அவசியம்தான் என்பதை நானும் ஏற்றுக்கொண்டேன். அடுத்த நாள் காஞ்சிபுரத்தில் ஒரு கூட்டம். கூத்தரம்பாக்கம் கிராமத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து நடைபெற்ற அக்கூட்டத்திற்குத் தோழர்களோடு நானும் சென்றிருந்தேன். உள்ளூர் தலித் தலைவர்கள் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது இரு தோழர்கள், நடுத்தர வயதைத் தாண்டியவர்கள் நல்ல போதையுடன் மேடையில் தடுமாறி ஏறினர்.
பேசிக் கொண்டிருக்கும் தலைவரின் கையைப் பிடித்து வாழ்த்துச் சொன்னார்கள். மேடையில் காலியாக இருந்த நாற்காலியில் அவர்களில் ஒருவர் அமர்ந்து கொண்டார். பேசி முடித்த தலைவருக்கு உட்கார இடமில்லை. மற்றவர்கள் நமது தோழரை எழுப்பினர். அவர் உடனே எழுந்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு மேடையிலேயே கீழே உட்கார்ந்து கொண்டார். யாரும் அவரை ஒன்றும் சொல்லவில்லை.
அரசியல்வாதிகள், இயக்கத் தலைவர்கள் சகித்துக் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வை நமது பிரசுர முதலாளிகள், எழுத்தாள தாதாக்களினால் சகித்துக் கொள்ள இயலாது போனதேன்? தமது வணிக நோக்கம், அதிகாரமமதை ஆகியவற்றுக்கான ஒரு சிறு தொந்தரவையும் கூடத் தாங்க இயலாது இவர்கள் இறுகிப் போனதெப்படி? மீண்டும் விக்கிரமாதித்தன் அவர்கள் தொடர்பு கொண்டு இது குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என அழைத்த போது நானும் போனேன். இது தொடர்பாக தொலைபேசியில் ஜெயமோகன், சுந்தர ராமசாமி, மனுஷ்ய புத்திரன் ஆகியோருடன் இவர்கள் பேசியபோது, அவர்கள் சொன்னதை விக்கிரமாதித்தன் குறிப்பிட்டார். (பேச்சைப் பதிவு செய்து உள்ளனர்).
குடும்பத்தைக் காப்பற்ற வக்கற்றவன், ஒரு நிறுவனத்தில் வேலை செய்து சம்பாதிக்கத் திராணியற்றவன், குடிகாரன், உதிரி, இவன்களுக்கெல்லாம் எழுதுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. கூட்டத்தில் கலாட்டா செய்வதற்கென்றே அவன் ஒரு சிலரால் அனுப்பப்பட்டான். கூட்டத்தில் கலாட்டா செய்தால் இப்படித்தான் உதைப்போம். அவனைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே உதைக்காமல் போனதுதான் தப்பு - இப்படியாக ஜெயமோகன் சொன்னாராம். கூட்டத்தில் கலாட்டா செய்தால் இப்படி உதைக்க வேண்டியதுதான் என்கிற கருத்தை வெளிப்படையாகவே சொன்னாராம் எழுத்தாளரிலிருந்து பிரசுர, முதலாளியாக உயர்ந்துள்ள மனுஷ்ய புத்ரர். இதையே நாசூக்காக நவின்றிருக்கிறார் சுந்தர ராமசாமி. "என்னை யாராவது பேசக் கூடாது என்று சொன்னால் வீட்டில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பேன். படிக்கவும் கூடாது என்று சொன்னால் சும்மா உட்கார்ந்திருப்பேன்" என்று நசுக்கிநசுக்கிப் பேசியுள்ளார்.
சூப்பர்! இல்லையா? நமது எழுத்தாளர் கம் முதலாளிகளின் வரையறைகளைக் கவனியுங்கள். ஒருத்தன் எழுத வேண்டுமானால் அவன் நல்ல நில்பன்தனாக இருக்க வேண்டும். விசுவாசமான ஊழியனாக இருக்க வேண்டும். அல்லது ஜவுளிக்கடை, கந்து வட்டி, புத்தக வியாபாரம் முதலியவற்றில் வெற்றி பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது பட்டுப்புடவை கட்டிய மாமிகளாவது வரவேண்டும். அல்லது ஆர்.எஸ்.எஸ். புத்தக் கடையில் வைத்து விற்கத்தக்க அளவிற்கு நூல் எழுதிய கன்னியவானாக இருக்க வேண்டும். கமலஹாசன், சுஜாதா போன்றவர்களின் திருப்பாதங்கள் படக்கூடிய இடமாக உங்கள் விழா மேடைகள் அமைய வேண்டும். இத்தகைய கண்ணியவான்களாக இல்லாத பட்சத்தில் உங்களை எழுத்தாளர்களாக ஏற்க முடியாது. குடித்து விட்டு வந்தீர்களானால் உங்களை உள்ளேயே விட முடியாது. ஏதாவது இடையில் பேசினால், மேடைப் பக்கம் தள்ளாடினால் நாலு சாத்து சாத்துவோம், உதைப்போம், அவமானப்படுத்துவோம். எங்கள் கூட்டங்களுக்கு வருகிற எந்த பிராணியும் இப்படி நாங்கள் சாத்துவதைக் கண்டு கொள்ளாது. இவர்களின் கணக்குப்படி பாரதி முதற்கொண்டு நஸ்ருல் இஸ்லாம், மயாகேசாவ்ஸ்கி, ஜெனே இவர்களெல்லாம் எழுத்தாளர்களே அல்ல. தரும அடிகளுக்குத் தகுதியானவர்கள். ஏதோ ஒரு வகையில் இதற்கு ஒரு எதிர்ப்பு தெரிவிப்பது என்கிற வகையில் ஒரு சிறு பிரசுரம் வெளியிடுவதாக முடிவு செய்தோம் ("எழுத்தாளர்கள் மீதான இலக்கிய பாசிஸ்டுகளின் வன்முறை" என்னும் இப் பிரசுரமும் இதழில் வெளியாகியுள்ளது.)
எழுத்தாளர்களின் மீதான இலக்கிய அதிகார மய்யங்களின் வன்முறைத் தாக்குதலுகு எதிரான இன்னொரு சிறிய முயற்சி சில இளம்
எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
சென்ற மாதம் "இந்தியா டுடே" இதழில தொடர்ந்து இரு வாரங்கள் எழுத்தாளர்களை இழிவு செய்யும் கட்டுரைகள் வந்தன. சாரு நிவேதிதாவின் பேட்டியாக ஒன்று. அடுத்த இதழிலேயே தமிழ் இலக்கியச் சூழல் பற்றி இன்னொரு கட்டுரை. இரு மாதங்களுக்கு முன்பு ஒரு "பாரில்" நடைபெற்ற இலக்கியக் கூட்டத்தை முழுமையாகக் கொண்டு இவ்விரு கட்டுரைகளும் எழுதப்பட்டிருந்தன. அந்த இலக்கியக் கூட்டம் நன்றாகவே நடைபெற்றிருக்கிறது. வெளி ரங்கராஜன், வளர்மதி முதலியோர் உருப்படியான கட்டுரைகள் வாசித்துள்ளனர். கூட்டம் முடிந்து மறுபடி இவர்களில் சிலர் குடித்துக் கொண்டிருந்த போது சாரு நிவேதிதாவுக்கும் வளர்மதிக்கும் நடந்த மோதலில் சாரு நிவேதிதாவிற்குச் சில பற்கள் காலி. இது குறித்து ஒரு பிரபல இதழ் கட்டுரை எழுதுவதென்றால் இரண்டு தரப்பையும் சந்தித்து, நடுநிலையாளர்களையும் கேட்டுத்தானே எழுத வேண்டும். முழுக்க முழுக்கச் சாருவின் தரப்பை மட்டும் கேட்டு முதல் வாரம் ஒரு பேட்டி. வளர்மதி தரப்பில் கருத்துச்சொல்ல முற்றிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இரண்டாவது வாரம் மீண்டும்
வளர்மதியையும் குறிப்பான சில எழுத்தாளர்களையும் சரியாகச் சொல்வதானால் காலச்சுவடு குமபலால் கண்ணியமானவர்களாகக் கருதப்படாத எழுத்தாளர்கள் சிலரை இழிவு செய்வதாகவும் அக்கட்டுரை அமைந்தது. என்னைப் போன்றவர்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்கள் சிதைத்து ஒரு சிறு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. காலச்சுவடு கண்ணன் வழக்கம் போல தடித்தனமாகப் பேசியது அப்படியே பிரசுரமாகி இருந்தது.
இந்த இடத்தில் "இந்தியா டுடே"யின் இன்றைய பொறுப்பாசிரியர் ஆனந்த நடராசனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். இந்த நபர் இத்தகைய ஒரு பொறுப்பிற்கு எந்தத் தகுதியும் அற்றவர் என்பதற்கு "இந்தியா டுடே" இதழில் இவர் எழுதுகிற அசட்டு அரசியல் கட்டுரைகளே சாட்சி. இன்னொரு சாட்சி வேண்டுமென்றால் கடைசியாக வந்த "இந்தியா டுடே" இலக்கிய மலரில் அவர் எழுதிய கி.வா.ஜ. பாணி பயணக்கட்டுரை. இவரது இந்தத் தகுதியின்மையை நமது "செல்போன்" "பார்ட்டி"கள் நன்றாகவே பயன்படுத்திக் கொள்கின்றனர். மணிக்கணக்கில் "செல்போன்" மூலம் வழிந்து, மிரட்டி, கரியம் சாதித்துக் கொள்ளும் தமிழ் இலக்கியவாதிகள் பற்றி அறிந்திருப்பீர்கள். இவர்களது ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் ஒரு நபராக நடராஜன் செயல்படுவதின் விளைவுதான் மேற்படி இரு கட்டுரைகளும். தமக்குப் பிடிக்காத "இந்தியா டுடே" ஊழியர்கள் மீதும் இந்த "செல்போன்" பார்ட்டிகள் புகார்கள் சொல்லி மிரட்டுவதாகவும் அறிகிறோம். இப்படி ஒரு ஊழியர் பற்றி அவதூறாகச் சில மாதங்களுக்கு முன் "காலச்சுவட்டில்" ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமக்குப் பிடிக்காத பத்திரிகையாளர்களை இவ்வாறு மிரட்டுகிற வேலையைக் காலச்சுவடு தொடர்ந்து செய்துவருகிறது. இதன் விளைவாக ஒரு சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிலரை நீக்குவதற்கான முயற்சிகளையும் காலச்சுவடு கும்பல் தொடர்ந்து செய்து வருகிறது.
சாரு நிவேதிதா பேட்டியில் சம்பந்தமில்லாமல் என்னைப் பற்றி ஒரு கேள்வி. சென்னையில் "தமிழினி" விழாவில் நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியைப் பூதாகாரப்படுத்தி சாருவிடம் கேட்டு அதையே தலைப்பாகவும் வெளியிட்டு என்னை இழிவு செய்ய முயன்றிருந்தார் ஆனந்த நடராசன். இதனுடைய பின்புலமும் நான் சற்று முன் குறிப்பிட்டதே. (சாரு கூறியிருந்த விசயங்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக அலசுவோம் கடைசி பீர் பாட்டிலை யார் வாங்கித் தருவார்களோ அவர்களின் கருத்துதான் சாருவின் கருத்தாக இருக்கும் என்பதை நான் மீண்டும் வற்புறுத்துகிறேன். சாருவின் எழுத்துகள் வேறு. சாரு என்கிற மனிதன் வேறு, சாரு என்கிற மனிதனைக் குறைந்தபட்சம் ஒரு நண்பனாகக் கூட நீண்ட நாட்கள் யாரும் சகித்துக் கொண்டதாக வரலாறு இல்லை. எனினும் "இந்தியா டுடே"யின் இந்தச் சமீபத்திய தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்டது வளர்மதி. வளர்ந்து வருகிற ஒரு தீவிரமான எழுத்தாளனை முளையிலேயே நசுக்கி விடும் முயற்சியைக் "காலச்சுவடு"வைத் தொடர்ந்து "இந்தியா டுடே" இப்போது மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தக் கண்டனத்தை வெளிப்படுத்தும நோக்கில் ஒரு சில எழுத்தாள நண்பர்கள் கையெழுத்திட்ட கண்டனக் கடிதம் ஒன்று "இந்தியா டுடே" இதழுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட்டுள்ள எழுத்தாளர்கள் இனி "இந்தியா டுடே"யில் எழுதுவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். "இந்தியா டுடே"யில் இந்தப் போக்கு தொடருமானால் அதன் அலுவலகம் முன்பு எழுத்தாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதுதான் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்க முடியும்.
வெளித் தொடர்புகளின் ஆணையைச் சிரமேற்கொண்டு பத்திரிகையாளர்கள் மீது நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கும் போக்குகள் குறித்து பத்திரிகையாளர்கள் கரிசனம் கொள்வது அவசியம். இல்லாவிட்டால் நாளை உங்களுக்கும் இந்தக் கதிதான்.
ஒரு பின்குறிப்பு : நம்ம "மனுஷ்ய புத்ரர்" என்ன செய்கிறார்? எழுத்தாளர்களின் தார்மீக நெறி கதைத்துக் கெண்டிருந்தவர். "சுந்தர ராமசாமியே நமஹ" என ஓதிக் கொண்டிருந்தவர் இப்போது "சுஜாதா கி ஜே" என்கிறார். மசாலா சினிமாவுக்கு திரைக்கதை வசனம் எழுதுவது பற்றி சுஜாதாவை எழுதச் சொல்லிப் புத்தகம் வெளியிடுகிறார். கமலஹாஸனை வைத்துக் கூட்டம் திரட்டுகிறார். ஒரு நாளில் எழுநூறு புத்தகங்கள் விற்றுவிட்டன எனப் பல்லிளிக்கிறார். போட்டிக் கடை விரித்ததற்காக காலச்சுவடிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டதற்காக நெருங்கிய நண்பர்களிடம் கண்ணீர் சொரிகிறார். ஆனாலும் மணிவண்ணனை ரெண்டு போடு போட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார். "கருணாநிதி மகாத்மியம்" என்றொரு அரசியல் காவியம் எழுதிக் கொண்டிருப்பதாகவும் அதை சரத்குமாரை வைத்து வெளியிடப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.