Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தை - டோனல்ட் பார்தெல்மே

Advertiesment
குழந்தை - டோனல்ட் பார்தெல்மே
, சனி, 5 ஏப்ரல் 2008 (18:21 IST)
குழந்தை - டோனல்ட் பார்தெல்மே
நன்றி : சிதைவு (சிற்றிதழ்)
தமிழில் சி.மோகன்

டோனல்ட் பார்தெல்மே ஒரு அமெரிக்க எழுத்தாளர். 1931ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஃபிலடல்பியாவில் பிறந்தார். நான்கு முறை திருமணம் செய்துகொண்ட இவர் 1989 ஆம் ஆண்டு தன் 58ஆவது வயதில் தொண்டை புற்று நோயால் மரணமடைந்தார். இன்று பரவலாக பேசப்படும் பின் நவீனத்துவ புனைவுலகில் முக்கிய படைப்பாளி. சிறுகதை புனைவுலகில் அதிகபட்ச பரிசோதனைகளை செய்து காட்டியவர். இவரது கண்ணாடி வீடு என்ற நாவல் பிரசித்தி பெற்றது. அர்த்தங்களை வலியுறுத்தும் மனோபாவத்திலிருந்து விடு பட நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கருதியவர். 1949 ஆம் ஆண்டு ஹஸ்டன் பல்கலைகழகத்தில் இதழியலை மையப் பாடமாக எடுத்து படித்தபோது 20வது வயதிலேயே பல்கலைகழக இதழ் ஒன்றின் பொறுப்பாசியராக நியமிக்கப்பட்டார். அன்று அது ஒரு சாதனை. பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பே ராணுவ செய்தித்தாளின் செய்தியாளராக பணியாற்றினார். 1962 ஆம் ஆண்டு நியூயார்க் சென்று முழு நேர எழுத்து வாழ்வை மேற்கொண்டார்.]

குழந்தை

குழந்தை செய்யத் தொடங்கிய முதல் தவறு, தன் புத்தகங்களிருந்து பக்கங்களைக் கிழிக்க ஆரம்பித்ததுதான். அதனால், அவள் புத்தகத்திலிருந்து கிழிக்கும் ஒவ்வொரு பக்கத்திற்கும் பக்கத்திற்கு நான்கு மணி நேரமென அவள் தன் அறையில், மூடிய கதவுகளுக்குப் பின்னால் தனியாக இருக்க வேண்டுமென்று நாங்கள் ஒரு விதி செய்தோம். அவள் ஒரு நாளில் ஒரு பக்கம் கிழித்த ஆரம்ப காலக் கட்டத்தில் இவ்விதி - மூடிய அறையிலிருந்து எழும் அழுகையும் கதறலும் பதற்றம் தந்த போதிலும் - நன்றாகவே செயல்பட்டது. உன் தவறுக்கான தண்டனையை அல்லது தண்டனையின் ஒரு பகுதியையேனும் ஏற்றுக்கொள்ளவே வேண்டுமென நாங்கள் நியாயப்படுத்தினோம். ஆனால், பிறகு அவளின் பிடிமானம் வளர்ச்சியடைந்த நிலையில் ஒரே சமயத்தில் இரண்டு பக்கங்களை கிழித்தெறிந்தாள். அதன் காரணமாக, மூடிய அறையில் தனியாக அவள் எட்டு மணி நேரம் இருக்க வேண்டி ஆயிற்று.

அதற்கேற்ப தொல்லை எல்லோருக்கும் இரண்டு மடங்காகியது. எனினும், அவள் அவ்வாறு செய்வதை நிறுத்துவதாக இல்லை. அதன் பிறகு, நாட்கள் செல்லச்செல்ல, அவள் மூன்று அல்லது நான்கு பக்கங்களை கிழிக்கும் நாட்களை நாங்கள் எதிர் கொள்ள வேண்டி வந்தது. அதன் காரணமாக, தொடர்ச்சியாக பதினாறு மணி நேரம் வரை அவள் தன் அறையில் தனியாக இருக்கும்படி ஆயிற்று. வேளா வேளைக்கு உணவு கொடுப்பதற்கு இது இடையூறாக இருந்ததால் என் மனைவி கவலைப்பட்டாள். ஆனால் நாம் ஒரு விதியை உருவாக்கினால் அதற்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டுமெனவும், பாரபட்சமோ, தளர்வோ காட்டாமல் இருக்க வேண்டுமெனவும் நான் நினைத்தேன். இல்லையெனில் அவர்கள் தவறான கருத்து கொண்டு விடுவார்கள்.

அந்தச் சமயத்தில் அவள் 14 அல்லது 15 மாதங்கள் நிரம்பியவளாக இருந்தாள். அவ்வப்போது ஒரு மணி நேரம் போலக் கதறிய பின்பு அவள் தூங்கிவிடுவதென்னவோ உண்மைதான். அது கருணையின்பாற்பட்டது. அவள் அறை மிகவும் அழகானது. மரத்தினாலான அழகிய ஆடுகுதிரையும், நூறு பொம்மைகளும், பொதிக்கப் பட்ட மிருகங்களும் நிறைந்தது. நேரத்தை பிரயோஜனமாகப் பயன்படுத்தினால் புதிர் விளையாட்டு போன்ற பல்வேறு காரியங்களை அந்த அறையில் செய்யலாம். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் கதவைத் திறக்கும் சில சமங்களில் மேலும் சில புத்தகங்களிலிருந்து மேலும் சில பக்கங்களை, அவள் உள்ளே இருக்கும்போது கிழித்திருப்பதை நாங்கள் கண்டோம். இந்தப் பக்கங்களையும் உரிய வகையில் கணக்கில் சேர்த்துக் கொண்டாக வேண்டும்.

குழந்தையின் பெயர் பார்ன் டான்சின். எங்களுடையதிலிருந்து குழந்தைக்கு

சிவப்பு மற்றும் நீல ஒயின் கொஞ்சம் கொடுத்தோம். மேலும் அவளுடன் சிரத்தையோடு பேசிப் பார்த்தோம். ஆனால், அது எவ்வித பயனும் அளிக்கவில்லை.

உண்மையான கெட்டிக்காரத்தனத்தை அவள் பெற்று விட்டாள் என்பதை நான் சொல்லியாக வேண்டும். வீட்டில் அவள் விளையாடிக் கொண்டிருக்கும்போது - தன் அறையிலிருந்து அவள் வெளிவந்திருக்கக் கூடிய அபூர்வமான தருணங்களில் - நீங்கள் அவளருகில் சென்றால், அங்கு அவளுக்கு முன் ஒரு புத்தகம் திறந்தபடி இருக்கும். நீங்கள் அதைப்பரிசோதித்தால் அது பார்ப்பதற்கு மிகச் சரியாகவே இருக்கும். அதன்பிறகு, நீங்கள் உன்னிப்பாகப் பார்த்தால் சிறு முனை கிழிக்கப் பட்ட ஒரு பக்கத்தைக் காண்பீர்கள். இது, பட்டும்படாமலுமான சாதாரண பார்வையில் மிகச் சுலபமாகத் தெரிய வராது. ஆனால் அவள் என்ன செய்திருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும். அவள் அந்தச் சிறு முனையை கிழித்து அப்படியே விழுங்கியிருப்பாள். அதனால், அவற்றையும் அவள் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் சேர்த்துக் கொண்டாயிற்று.

உங்கள் திட்டங்களை தவிடு பொடியாக்குவதற்கு அவர்கள் எந்த ஒரு எல்லைக்கும் செல்வார்கள். நாம் குழந்தையிடம் அதிக கண்டிப்போடு நடந்து கொள்வதால்தான் அவள் மிகவும் மெலிந்து கொண்டே போகிறாள் என்றாள் என் மனைவி. ஆனால் குழந்தை இவ்வுலகில் இன்னும் நீண்ட காலத்துக்கு வாழவிருக்கிறாள்;

இந்த வாழ்க்கையை, ஏராளமான விதிகள் நிறைந்த இவ்வுலகில், அவள் பிறருடன் சேர்ந்து வாழ்ந்தாக வேண்டும். விதிமுறைகளுக்கேற்ப இயங்க உள்ளதால் கற்றுக் கொள்ள இயலாது போனால் நீ இவ்வுலகில் வெறுக்கப்பட்டு ஒரு குணவிலியென தனித்து விடப்படுவாய். சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவாய் என நான் குறிப்பிட்டேன்.

தன் அறையில் தொடர்ச்சியாக எண்பத்தெட்டு மணி நேரம் தனித்திருக்கச் செய்ததுதான் இருந்ததற்குள் மிக நீண்ட காலம். கதவின் கொக்கியை இரும்புக் கொண்டி கொண்டு என் மனைவி நீக்கித் திறந்தபோது அது முடிவுக்கு வந்தது. அப்போதும் அவள் இன்னும் பனிரெண்டு மணி நேரம் உள்ளிருந்திருக்க எங்களுக்குக் கடமைப்பட்டிருந்தாள். ஏனெனில், அவள் அப்போது இருபத்தைந்து பக்கங்களுக்காக உள்ளிருந்தாள். நான் மீண்டும் கொக்கியில் கதவை இணைத்தேன். மேலும், ஒரு பெரிய பூட்டு போட்டுப் பூட்டினேன். அதை ஒரு காந்தத் தகடு கொண்டு மட்டுமே ஒருவரால் திறக்க முடியும். அந்தக் காந்தத் தகடை என்னிடமே வைத்துக் கொண்டேன்.

எனினும், எவ்வித முன்னேற்றமுமில்லை. குழந்தை, தன் அறையிலிருந்து இருட்டு பொந்திலிருந்து வெளிவரும் ஒரு வெளவாலைப் போல் வருவாள். அருகிலிருந்து குட்நைட் மூன் அல்லது வேறு ஏதோ ஒரு புத்தகத்தை நோக்கி விரைவாள். தன் கையால் முரட்டுத் தனமாக அதன் பக்கங்களைக் கிழிக்கத் தொடங்குவாள். பத்து நொடிகளில் குட்நைட் மூனின் முப்பத்து நான்கு பக்கங்கள் தரையில் கிடக்கும், அவற்றோடு மேலட்டைகளும். நான் சற்றே கவலைப்படத் தொடங்கினேன். உரிய மணியளவை நான் அவள் பற்றுக் கணக்கில் சேர்த்தபோது, அதன்பிறகு, 1992 வரை அவள் தன் அறையை விட்டு வெளிவரப் போவதில்லை என்பதை அறிய முடிந்தது. மேலும், அவள் மிகவும் வெளிறிக் காணப்பட்டாள். வாரக்கணக்கில் அவள் பூங்காவுக்குச் சென்றிருக்கவில்லை. ஏறத்தாழ ஒரு தார்மீகச் சிக்கல் எங்களுக்கு ஏற்பட்டு விட்டிருந்தது.

புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழிப்பது சரியானதே எனவும், அதைவிட, முன்னர் அவள் புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழித்துக் கொண்டிருந்ததும் சரியானதே எனவும் அறிவித்து இந்தப் பிரச்சினையை நான் தீர்த்தேன். பெற்றோராய் இருப்பதில் நிறைவளிக்கக் கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்று. சிறந்தது - உங்கள் கைவசமிருக்கின்றன. நானும் குழந்தையும் சந்தோஷமாக, தரையில் அருகருகே அமர்ந்து, புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழித்தோம். சில சமயம் நாங்கள் தெருவிற்குச் சென்று காற்று விசைக் கண்ணாடித் தடுப்பானை - வெறுமனே கேளிக்கைக்காக - சேர்ந்து நொறுக்கினோம்!

Share this Story:

Follow Webdunia tamil