ஒரு பெரிய மலையுச்சியில் - வெள்ளை வெளேரென்று தூண்கள் எவ்வளவு அழகாகக் காட்சியளிக்கின்றன.
பல்லாயிரம் வருடம் முன்னர் எழுந்த நாகரிகத்தின் சின்னங்களை எப்படி பாதுகாக்கின்றனர் கிரேக்கர்கள்.
'அக்ரோபலீஸ்'சை பார்க்கும்போதெல்லாம்... அருகில் செல்லும்போதெல்லாம்... அந்த மேதை சோக்கரட்டீசின் 'உன்னையே நீ அறிவாய்' என்ற வார்த்தைகள் காதில் ரீங்காரமிடுகின்றன.
மனித குலத்தின் மேம்பாட்டிற்கு எவ்வளவோ அள்ளி வழங்கியுள்ளது கிரேக்க நாகரீகம்.
எந்தத் துறையை எடுத்தாலும் அவர்களது அத்திவாரத்தில்தான் அந்தந்த துறை கட்டப்பட்டுள்ளது என்பதை பலர் அறிவார்.
கண்கள் கட்டப்பட்டு... கையில் தராசுடன் நீதி தேவதை 'தேமிஸ்' எவ்வளவு தத்ரூபமாக சிலை வடிக்கப்பட்டிருக்கிறாள்.
பல்கலைக்கழகம் என்ற பெயரையே உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவனும், போலியின் போலியை நாடு கடத்துங்கள் என முழங்கியவனுமான பிளேட்டோ சிரித்துக் கொண்டிருக்கிறான்.
'பிற்கூற்றிலிருந்துதான் முற்கூற்றின் உண்மை நிரூபணமாகிறது என்று சொன்ன அரிஸ்டாடிலின் அளவையியல் தத்துவம் எப்படி இங்கே பொருத்தமாகிறது எனச் சிந்தித்தபடியே ஏதென்ஸ் தெருக்களில் நடந்து கொண்டிருக்கிறேன். அருகில் என் மகனும் தெரு வீதியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இழவிண்டு கொண்டு வருகிறான்.
அவன் கேட்கும் கேள்விகள் ஏராளம். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வது மாபெரும் கடினம் எனினும் முடிந்தவரை முயன்று கொண்டிருக்கிறேன்.
கிரேக்க புராணங்களில் வரும் ஏராளமான தெய்வங்களுக்கெல்லாம் சிலை வடித்து வைத்திருக்கிறார்கள்.
அவற்றில் ஏதோ ஒன்றைக் காட்டி இது யார்? என்று என்னைக் கேட்பான். நான் பதிலுக்கு திண்டாடும்பொழுதுதான் கற்றது கை மண்ணளவு என்ற ஞானம் உதிக்கும். எனினும் சமாளிப்புக் கலையை சமுத்திரமளவு கற்றதனால் அது அடிக்கடி உதவிக் கொண்டிருந்தது.
விடுமுறையை எப்படிக் கழிக்கலாம் என்ற எண்ணம் வந்தபொழுது பாபிலோனியா நாகரீகம் எப்படி இருந்திருக்கும் எனப் பார்வையிடலாம் என்ற எண்ணம் எழுந்தது.
உலகின் தொன்மையான நாகரீகங்கள் இரண்டு. சிந்துவெளி நாகரீகம், பாபிலோனியா நாகரீகம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சிந்துவெளி நாகரீகத்தில்தான். மற்றைய நாகரீகம் எப்படி இருந்திருக்கும் என்ற ஆர்வம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அந்த ஆர்வம் இம்முறைதான் சாத்தியமாகிறது என்பதில் உள்ளூர ஒரு சிறிய ஆனந்தம்.
ஏதென்ஸ் நகரைச் சுற்றிப்பார்த்து விட்டு ஏதாவது ஒரு தீவில் போய் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வரலாமென முடிவு செய்தேன். பல அழகிய தீவுக்கூட்டங்களையும் கிரேக்க நாடு கொண்டிருந்தது.
ஏதென்சிலிருந்து ஐந்து மணித்தியாலங்கள் ஒரு சிறிய கப்பலில் பயணம் செய்தால் பாரஸ் எனும் தீவை அடையலாம் என்றார்கள்.
சரி, அங்கேயே போகலாம் என முடிவெடுத்து ஏகப்பட்ட உல்லாசப்பயணிகளுடன் நாங்களும் சேர்ந்து கொண்டு பயணித்தோம்.
நீலமும் வெள்ளையுமாய் அழகிய ஒரு தீவு அது. அத்தீவிலுள்ள வீடுகள் எல்லாவற்றிற்கும் வெள்ளைச் சுண்ணாம்புதான் அடித்திருக்கிறார்கள். நீல வானமும் சுற்றுவர நீலக் கடலும் இடையிடையே வெள்ளை வீடுகளுமாய் காட்சியளிக்கிற அத்தீவை நீலவெள்ளைத் தீவு எனப்பெயர் சூட்டியிருக்கலாம்.
அந்தத் தீவிலும் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் நிலத்தைத் தோண்டி பாபிலோனிய நாகரீகத்தின் வேர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கே நௌஸா என்னுமிடத்தில் ஒரு அரும்பொருட்காட்சி சாலை ஒன்றுண்டு. அதனைப்பார்வையிடுவதற்காய் நானும் மகனுமாய்ச் சென்றோம்.
நல்ல வெயில், சனக்கூட்டமும் அதிகம். முடிந்தவரை பார்த்து விட்டு ஒரு மதிற்கரையோரம் உட்கார்ந்திருந்தோம்.
அநேகமாக வெள்ளையர்கள்தான் எல்லாரும். குறிப்பிட்ட சில உல்லாசப் பயணிகளையும் எங்களையும் தவிர.
நாங்கள் இருந்த இடத்தை நோக்கி ஒரு பெண் கைக்குழந்தையையும் இடுப்பில் தாங்கிக் கொண்டு எம்மை நோக்கி வந்தாள். அழுக்கேறிய கிழிந்த கந்தல் ஆடை அணிந்திருந்தாள். தலை பறட்டையாய் கிடந்தது. முகம் மிகவும் கோரமாய்க் காட்சியளித்தது. கையில் ஒரு பிளாஸ்டிக் பை வைத்திருந்தாள். அதற்குள் சில அலுமினியப் பாத்திரங்களும் ஒரு நீட்டுப் பாண்துண்டும் சில வாழைப்பழங்களும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.
அவர்கள் சரியாக எமது நிறத்தினையே கொண்டிருந்தனர். நிச்சயமாக அவர்கள் ஆசியாவிலிருந்துதான் குடிபெயர்ந்திருக்க வேண்டும். அவர்கள் தமிழராகக் கூட இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எம்மை நெருங்கிய அவள், அழகான ஆங்கிலத்தில், "நாளைக்கு எனக்கு சாப்பாடு இல்லை. பிள்ளையும் பட்டிணிதான், உன்னிடம் பணமிருந்தால் கொஞ்சம் கொடேன் என்றாள்.
அவள் உண்மையான பிச்சைக்காரி என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் எமது சாயலையும் கொண்டிருந்தது மேலும் எனக்கு இரக்கத்தை ஏற்படுத்தியது. அவளுக்கு சிறிது பணத்தைக் கொடுத்தேன்.
அவள் முகத்தில் எந்த வித மாறுதலுமில்லை. நன்றி நன்றி என இருதடவை சொன்னாள். பின்னர்,
எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டாள். சிறீலங்கா என்றேன் நான்.
"அப்ப பிரச்சனைதான்" என்றபடியே சனக்கூட்டத்தினுள் விட்டாள். அவள் போன பின்னர் மகன் கேட்டான்: "சிறீலங்கா என்ற சொல்லுக்கு பிரச்சனை எண்டும் வேறை கருத்திருக்கிறதா?" என்று.
எனக்கு நெஞ்சின் அடியாழத்திலிருந்து ஏதோ இனம் புரியாத ஒரு வலி வாட்டத் தொடங்கியது.
பாபிலோனிய நாகரீகத்தின் வேர்களைத் தேடிக் கண்டுபிடித்தும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் கிரேக்கர்கள்.
எனது மகனின் வேரைக்கூட என்னால் பாதுகாக்க முடியாது நான் திண்டாடுகிறேன்.
பல்லாயிரம் வருடம் முன் தோன்றிய திராவிட நாகரீகம் எனது மண்ணில் எப்படி சிதைக்கப்படுகிறது?
அரிய பொக்கிஷங்களாக நாம் சேகரித்து வைத்த லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களைக் கொண்ட எங்கள் யாழ் நூல் நிலையத்திற்கு என்னாயிற்று?
ஆயிரம் ஆயிரமாண்டுகளாய் எம் மண்ணில் வாழ்ந்த மக்கள் எப்படி 24 மணி நேரத்தில் இடம் பெயர்ந்தார்கள்? ஏன்?
பல்கலைக்கழகம் என நாம் பாதுகாத்து வந்த எமது அறிவுப் பூங்காவை பாழடித்தவர் யார்?
எமது வழிபாட்டுத் தலங்களில் கூடக் குண்டுகளைப் பொழிந்த கொடியவர்களை என்ன செய்யலாம்?
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், கிரிமலை நாதேஸ்வரர் போன்ற கோயில்களிலும் திருட்டு.
எங்களுடைய புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தேடிதேடி கண்டுபிடித்த திராவிட நாகரீகத்தின் அடையாளங்கள் வேர்கள் அடங்கிய யாழ் அரும் பொருட்காட்சிச் சாலை எங்கே?
வரலாற்றுச் சின்னங்களை அழிப்போர் மனிதரல்ல. வரலாறு ஒரு முறைதான் நிகழும்.
"ஓடுகின்ற ஆற்றில் நீ இரண்டு முறை குதிக்க முடியாது" என்று சொன்னானே -கெராக்லிச்டஸ் என்னும் கிரேக்க ஞானி.
எனது மகன் எந்த அடையாளத்தைக் கொண்டு வாழ முடியும்? அவனது திராவிட வேரை அவனுக்கு எப்படி என்னால் விளங்கப்படுத்த முடியும்?
[நன்றி: பன்முகம் (அக்.-டிச.2002, காலாண்டிதழ்)]