கர்லூ பறவைகள்
- கேப்ரியல் கார்சியா மார்க்குவிஸ்
நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர். மேஜிகல் ரியலிசம் என்ற வகை எழுத்தால், மிகப் பிரபலம் பெற்றவர். இவரது `ஒரு நூற்றாண்டுத் தனிமை' நாவல், உலகின் சிறந்த நாவல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிறந்த சிறுகதைகளையும் இவர் படைத்தளித்துள்ளார்.
நாங்கள் மூவரும், மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தோம், நாணயத்தை யாரோ துளைக்குள போட வுல்லிட்ஸர் மீண்டும் இசைத்தட்டினை - இரவு முழுதும் பாடிக் கொண்டிருந்த அதே இசைத்தட்டினை - மறுபடியும் இசைத்தது. பின்பு எங்களுக்கு யோசித்துப் பார்க்கக் கூட நேரம் வைக்காமல், அதிவேகமாக நிகழ்ந்துவிட்டது அந்த பின் நிகழ்வு. எங்கிருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்குமுன் - இருக்குமிடத்தின் ஞாபகத்தை நாங்கள் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருமுன் - அது நிகழ்ந்தது.
எங்களில் ஒருத்தன், தன் கரத்தைக் கெளண்டருக்கு மேல் நீட்டி (அந்தக் கையைப் பார்க்கவில்லை - கேட்டோம்) இருட்டில் தடவினான். ஒரு தம்ளரை அது தள்ளிவிடவே, இருகரங்களையும்ட கரடு முரடான தரையில் ஊன்றிக் கொண்டு இருட்டில் துளாவினான்.
பின்பு மூவரும் இருட்டுக்குள் எங்களை நாங்கள் பார்த்துக் கொள்ள முயன்றோம். முப்பது விரல்கள் இணைந்ததை வைத்து நாங்கள் அங்கிருப்பதை உணர்ந்து கொண்டோம். கல்லாவின் கெளண்டரைப் பற்றிப் பிடித்துக் கொண்டோம். நாம் கிளம்பலாம் என்று எங்களில் ஒருத்தன் சொன்னான். பின்பு எதுவும் நிகழாதது போல், எழுந்து நின்றோம். நாங்கள் திகைப்படைவதற்குக் கூட இன்னும் நேரம் கிடைக்கவில்லை.
முற்றம் வழியாகச் சென்றபோது, அருகிலிருந்து இசை சுழன்று வந்து எங்களை அடைவதைக் கேட்டோம். சோகித்த பெண்கள், உட்கார்ந்தபடியே காத்துக் கொண்டிருக்கும் வாசனையைப் பிடித்தோம். கதவை நாங்கள் அடைவதற்குள அந்த ஹாலின் நீண்ட வெறுமையினை உணர்ந்தோம். வேறு வாசனைகள் எங்களைச் சூழ்ந்து கொள்ளுமுன், கதவுக்கருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் புளித்த மணத்தை நோக்கிச் சொன்னோம், போய் வருகிறோம்.
அந்தப் பெண் எந்தப் பதிலும் கூறவில்லை. அவள் எழுந்து நின்றதால், ஆடும் நாற்காலி கிரீச்சிட்டது. தளர்ந்த பலகைத் தரையில், காலடிகளை உதைந்துச் சென்றதையும் திரும்பி வந்து அப்பெண் உட்கார்ந்ததையும் அப்போது திரும்பவும் ஒரு முறை கீல்கள் கிரீச்சிட்டதையும் பின்பு எங்களுக்குப் பின் கதவு மூடிக் கொண்டதையும் கேட்டோம்.
நாங்கள் சுற்றிச் சுற்றி நடந்தோம். நேர் எதிரே - பார்க்க முடியாத ஓர் கடும் விடியலின் மென்காற்று;அதை வெட்டுவது போல எங்களுக்கு பின் ஒரு குரல் இதைச் சொன்து, வழி விடுங்கள் உள்ளே போக வேண்டும்.
நாங்கள் பின்னுக்கு நகர்ந்தோம். அந்தக் குரல் மீண்டும் சொன்னது. நீங்கள் இன்னும் கதவுக்கு எதிரில்தான் இருக்கிறீர்கள்.
அதன்பிறகு எல்லாப் பக்கமும் நகர்ந்து பார்த்துவிட்டு, அந்தக் குரலை எல்லா இடத்திலும் கேட்டு, நாங்கள் இதைச் சொன்னோம். கல்லூக்கள் எங்கள் கண்களைக் கொத்திக் கொண்டு போய்விட்டன. நாங்கள் இங்கிருந்து போக வழி தெரியாமல் நிற்கிறோம்.
உடனே பல கதவுகள் திறந்து கொள்வதைக் கேட்டோம். பின்பு, எங்கள் கரங்களிலிருந்து எங்களில் ஒருவனை, வழி பார்த்து வர விடுத்துவிட்டோம். அவன் இருட்டுக்குள நகர்ந்து செல்வதைக் கேட்டோம். பல்வேறு பொருட்களை எங்களை அடர்ந்து சூழ்ந்து கொண்டிருக்க, எங்கோ இருட்டுக்குள் இருந்து அவன் பேசினான். நாம் போக வேண்டிய இடம், அருகில் எங்கேயோதான் இருக்க வேணும்.
அவன் மேலும் சொன்னான். நிறைந்து வழியும்படி குவிக்கப்பட்ட தொட்டிகளின் நாற்றம் இங்கே சுற்றிலும் இருக்கிறது.
மறுபடியும் அவனுடைய கரங்கள் இணைவதை உணர்ந்தோம். எதிரிலிருந்த ஒரு சுவரில் சாய்ந்து கொண்டு நின்றோம். எங்கள் கூடவே வந்த வேறொரு குரல், இப்போது எங்களைக் கடந்து சென்றது - ஆனால் எதிர்த்திசையில்.
`இவைகள் சவப்பெட்டிகளாய்த்தான் இருக்க வேண்டும்' எங்களில் ஒருத்தன் சொன்னான். அவனாகவே, எங்களை ஒரு மூலைக்கு இழுத்துச் சென்றான், எங்களுக்குப் பக்கத்தில் மூச்சு விட்டுக் கொண்டு பின்பு சொன்னான். `இவை பெட்டிகள்தான். குவித்து வைக்கப்பட்ட துணிகளின் நாற்றத்தைக் கண்டு சொல்லும் திறமை எனக்குச் சின்ன வயசிலிருந்தே இருக்கிறது'
பின்பு நாங்கள் அத்திசையில் நகர்ந்தோம். தரை மிருதுவாயும், மெத்தென்றுமிருந்தது. நாங்கள் நடந்து சென்றது வளமான ஒரு நிலத்தின் மீது. எங்களில் யாரோ ஒருத்தன் கரத்தை நீட்டி எங்களை நிறுத்தினான். ஆரோக்கியமான உயிர்த்துடிப்புள்ள ஒரு தோலின் தொடர்பை உணர்ந்தோம். ஆனால் எதிரிலிருந்த சுவரையோ, நாங்கள் நீண்ட நேரமாக உணரவேயில்லை.
`இது ஒரு பெண்' நாங்கள் சொல்லிக் கொண்டோம். எங்களில் ஒருத்தன் - பெட்டிகளைப் பற்றி பேசியவன் - சொன்னான். `அவள் தூங்குகிறாள் என்று நினைக்கிறேன்.'
எங்கள் கரங்களின் ஸ்பரிசத்தில், அவள் உடல் அசைந்தது; நெளிந்தது. எங்களின் கையெல்லையை மீறி அது போகவில்லை என்றாலும், அது நழுவிச் செல்வதை உணர்ந்தோம். ஆனால் அது இன்னும் எழுந்து நிற்கவில்லை.
அசையாமல் சிறிது நேரம் நின்றோம். பின்பு மற்றவர் தோள்களில் சாய்ந்து உறுதிப்படுத்திக் கொண்டு நின்றோம். பிறகு அவர் குரலைக் கேட்டோம்.
`யாரது?' என்று அது கேட்டது.
"நாங்கள்தான்" நாங்கள் நகராமல் பதிலளித்தோம். கிரீச்சும் கேட்டன. இருட்டுக்குள் காலணிகளுக்காகத் தேடி நகர்ந்தன அந்தப் பாதங்கள். இன்னும் முழுசாக விழித்துக் கொள்ளாமல், உட்கார்ந்தபடியே எங்களைப் பார்க்கும் ஒரு பெண்ணை மனதில் வரைந்து கொண்டோம்.
`இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' அவள் கேட்டாள். உடனே நாங்கள் பதிலளித்தோம் : `எங்கிருக்கிறோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. கர்லூக்கள் எங்கள் கண்களைக் கொத்தி எடுத்துவிட்டன.'
இந்த விஷயம் பற்றி தான் ஏதோ கேள்விப்பட்டதாக அவள் சொன்னாள். செய்தித்தாள்கள் இதைப் பற்றிச் சொல்லியிருந்தன. மூன்று மனிதர்கள், ஏழு கர்லூக்கள் (ஐந்து அல்லது ஆறு கர்லூக்கள்) இருந்த ஒரு முற்றத்தில் குடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் ஒருவன் கர்லூக்களைப் போலவே பாடத் தொடங்கினான். அவைகளைப் போலி செய்தான். `இதில் மோசம் என்னவென்றால், ஒரு மணி நேரத்திற்குப் பின்னால் அங்கே போய் அவர்களோடு சேர்ந்து கொண்டவன் அவன்' அவள் சொன்னாள். மேஜைமேல் அந்தப் பறவைகள் தாவிக்குதித்து, அவர்களின் கண்களைக் கொத்தி எடுத்துச் சென்றுவிட்டன.
செய்தித்தாள்களில் சொல்லியதை அவள் எல்லோருக்கும் சொன்னாள். ஆனால் யாரும் அதை நம்பவில்லை.
நாங்கள் சொன்னோம் :`ஜனங்கள் அங்கே போயிருந்தால், அந்தக் கர்லூக்களைப் பார்த்திருக்கலாம்.'
உடனே அந்தப் பெண் சொன்னாள் :`அடுத்த நாள் அந்த முற்றம் நிறைய, ஜனங்கள் கூடி விட்டார்கள் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த பெண் முன்னதாகவே அந்தக் கர்லூக்களை எடுத்துக் கொண்டு எங்கோ சென்றுவிட்டாள்.'
நாங்கள் சுற்றித் திரும்பி நடக்கத் தொடங்கியதும் அந்தப் பெண் சொல்வதை நிறுத்திவிட்டாள். மறுபடியும் அந்தச் சுவர்தான் எதிரிலிருந்தது. சும்மா சுற்றித் திரும்பியதுமே நாங்கள் அந்தச் சுவரைக் கண்டுபிடித்துவிட்டோம். எங்களைச் சுற்றி, எங்களைச் சூழ்ந்து எப்போதும் ஒரு சுவர். ஒருத்தனை மறுபடியும் எங்கள் கரங்களிலிருந்து விடுவித்தோம். அவன் மீண்டும் தவழ்ந்து செல்வதையும் நிலத்தை முகர்வதையும் பின்பு தொடர்வதையும் கேட்டோம்.
இப்போது அந்தப் பெட்டிகள் எங்கே என்று எங்களுக்குத் தெரியவில்லை.`இப்போது நாம் வேறு எங்கோ வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்' கூடவே இதையும் சொன்னோம்: `இங்கே வா. இங்கே நமக்கு அருகில் யாரோ இருக்கிறார்கள்.
பிரிந்து சென்றவன் அருகில் வருவதைக் கேட்டோம். அவன் எங்களுக்குப் பக்கத்தில் நிற்பதையும் அவனது சூடான மூச்சு எங்கள் முகத்தைத் தாக்குவதையும் உணர்ந்தோம். `அந்த வழியாகப் போ' அவனுக்குக் கூறினோம். `நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அங்கே இருக்கிறது.'
அவன் அதைச் சென்று அடைந்திருக்க வேண்டும். நாங்கள் குறிப்பிட்ட இடத்தை அவன் நகர்ந்து சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் அடுத்த கணம், உடனே அவன் திரும்பி வந்து எங்களிடம் சொன்னான்.
`அது ஒரு பையன் என்று நினைக்கிறேன்'
உடனே நாங்கள் அவனுக்குச் சொன்னோம் : `சரி... அவனுக்கு நம்மைத் தெரியுமா என்று கேள்.'
அவன் அந்தக் கேள்வியைக் கேட்டான். அந்தப் பையனின் கவலையற்ற சன்னக் குரலை நாங்கள் கேட்டோம். அவன் சொன்னான் : `ஆம் உங்களைத் தெரியும். நீங்கள்தானே கர்லூக்களால் கண்கள் கொத்தி எடுக்கப்பட்ட அந்த மூன்று பேர்?'
பின் ஒரு வயதான குரல் பேசியது, மூடிய கதவுக்குப் பின்னாலிருந்து வந்தது போல் தோன்றிய அந்தப் பெண் குரல் சொன்னது :`மறுபடியும் நீ உனக்குள் பேச ஆரம்பித்துவிட்டாயா?'
அந்தக் குழந்தையின் சாவதானமான குரல் சொன்னது :`இல்ல¨.. கர்லூக்களால் கண்கள் கொத்தி எடுக்கப்பட்ட மனிதர்கள்.. மறுபடியும் இங்கே வந்திருக்கிறார்கள்.'
கீல்களின் சத்தம். பிறகு முதல் தடவையைவிட மிக அருகில் அந்த வயதான குரல் :`அவர்களை வீட்டுக்கு அழைத்துப் போ.' அவள் சொன்னாள்.
அந்தப் பையன் சொன்னான் :`அவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.'
அந்த வயதான குரல் சொன்னது :`அர்த்தம் இல்லாமல் உளராதே. இவர்கள் இங்கே வசிக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த கர்லூக்கள் இவர்கள் கண்களைக் கொத்திச் சென்ற இரவிலிருந்தே இது இங்கே எல்லோருக்கும் தெரியும்.'
பின்பு, அவள் மாறுபட்ட குரலில், எங்களை நோக்கிப் பேசுவது போல் தொடர்ந்து கூறினாள் :`என்ன நடந்தது என்பது யாராலும் நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது. மேலும் இது பேப்பர்காரர்களால் அவைகளின் வியாபாரத்தை அதிகரிக்க, மிகைப்படுத்தப்பட்ட ஒரு ஆதாரமற்ற தகவல் என்றும் சிலர் சொல்கிறார்கள். யாரும் அந்த கர்லூக்களைப் பார்க்கவில்லை.'
உடனே அச்சிறுவன் சொன்னான் :`ஆனால் இவர்களைத் தெரு வழியே இட்டுச் சென்றால், என்னை யாரும் நம்பமாட்டார்கள்.'
நாங்கள் நகரவில்லை. சுவரில் எதிரிட்டுச் சாய்ந்து நிலைத்து நின்று, அவளைக் கவனித்துக் கேட்டோம். மேலும் அந்தப் பெண் சொன்னாள் :`இவன் உங்களைக் கூட்டிச் செல்லலாம் என்று நினைத்தான் என்றால் மட்டும் அது வேறு விதமாகிவிடும். ஒரு சிறு பையன் சொல்வது பற்றி யாரும் பெரிசாகக் கவனம் செலுத்த மாட்டார்கள்.'
அந்தக் குழந்தையின் குரல் குறுக்கிட்டது. `இவர்களுடன் நான் தெருவில் சென்றாலோ, இவர்கள்தான் அந்தக் கர்லூக்களால் கண்கள் இழந்த மனிதர்கள் என்று சொன்னாலோ, பையன்கள் என் மேல் கல்லை விட்டெறிந்தார்கள். தெருக்காரர்கள் ஒவ்வொருவரும் சொல்கிறார்கள், அது ஒருபோதும் நடந்திருக்காது என்று.'
அங்கு ஒரு கணநேர அமைதி. பின்பு அந்தக் கதவு மறுபடியும் மூடிக் கொண்டது. அந்தப் பையன் பேசினான் : அதில்லாமல் நான் இப்போது `டெர்ரியும் கடற்கொள்ளைக்காரர்களும்' படித்துக் கொண்டிருக்கிறேன்.
காதுக்குள் எங்களில் யாரோ ஒருத்தன் சொன்னான் : `அவனை நான் வழிக்குக் கொண்டு வருகிறேன்.' குரல் வந்த இடத்துக்கு அவன் தவழ்ந்து சென்றான். `அந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும்' என்றான். : `இந்த வாரம் டெர்ரிக்கு என்ன நடந்தது என்பதையாவது எங்களுக்குச் சொல்லேன்.'
தன் சாதுரியத்தால் அவன் காரியம் சாதிக்க முயற்சி செய்கிறான் என நினைத்தோம். ஆனால் அந்தப் பையன் சொன்னான் : `எனக்கு அந்த கதையென்றும் பிடித்தமானதில்லை. நான் ஆசைப்படும் ஒரே ஒரு பொருள், பெயிண்ட்தான்.'
`டெர்ரி ஒரு ஆபத்தான கட்டத்தில் இருக்கிறான்' நாங்கள் சொன்னோம்.
உடனே அந்தப் பையன் சொன்னான் :`அது வெள்ளிக்கிழமை. இன்று ஞாயிற்றுக்கிழமை. மேலும் நான் விரும்புவது பெயிண்ட் மட்டும்தான்' அவன் இதை உணர்ச்சியற்ற வேறுபட்ட குரலில் உஷ்ணத்துடன் சொன்னான்.
மற்றவன் திரும்பி வந்ததும் நாங்கள் சொன்னோம். `நாங்கள் மூன்று நாட்களுக்கு மேல் அலைந்து திரிகிறோம். ஒரு நிமிஷம் கூட இளைப்பாற முடியாமல் கிடந்து தவிக்கிறோம்.'
ஒருத்தன் சொன்னான் :`சரி. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வோம். ஆனால் ஒருவர் கையை மற்றவர் போக விட்டுவிட வேண்டாம்.'
கீழே அமர்ந்தோம். பார்க்க முடியாத சூரியன் எங்களின் தோள்களைச் சூடாக்கத் தொடங்கினான். சூரியனின் புறப்பாடு கூட எங்கள் ஆவலைத் தூண்டவில்லை. முன்பே தொலைந்து போய்விட்ட தூரம் பற்றிய ஞாபகத்தால் காலம், திசை எல்லாவற்றிலும் நாங்கள் அந்த தூரத்தையே நினைவுகொண்டோம். பல குரல்கள் கடந்தன.
`கர்லூக்கள் எங்கள் கண்களைக் கொத்திக் கொண்டு போய்விட்டன' - நாங்கள் சொன்னோம்.
அதில் ஒரு குரல் சொன்னது : `இது உண்மைதானா என்று செய்தித்தாள்களைப் படித்துப் பார்க்க வேண்டும்.'
அந்தக் குரல்கள் சென்று தேய்ந்தன. தோளோடு தோள் இணைய நாங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தோம். கடந்து செல்லும் குரல்களை, கடந்து செல்லும் மன உருவங்களை, மணத்தாலோ ஒலியாலோ - அவை கடந்து செல்வதை உணர்ந்தபடி காத்திருந்தோம். எங்களின் உச்சந்தலைக்கு மேல் சூரியன் மேலும் அதிகச் சூட்டைக் கிளப்பினான். பின்பு எங்களுள் ஒருவன் சொன்னான் :`அந்தச் சுவரை நோக்கி மறுபடியும் போவோம்.'
பார்க்க முடியாத வெளிச்சத்தை தலைகளை அண்ணாந்து நோக்கியபடி அசையாமலிருந்துகொண்டு மற்ற இருவரும் சொன்னோம்.
`இப்போது வேண்டாம். சூரியன் சாய்ந்து நம் முகத்தில் காயத் தொடங்கும் வரை நாம் காத்திருப்போம்.'
நன்றி - சங்கேதங்களும் குறியீடுகளும்
மேலைநாட்டுச் சிறுகதைகள்
தமிழில் : கால சுப்பிரமணியம்
குருத்து வெளியீடு