Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடிகார மனிதர்கள்

-எம்.ஜி.சுரேஷ்

கடிகார மனிதர்கள்

Webdunia

, செவ்வாய், 30 அக்டோபர் 2007 (17:37 IST)
பாஸ்கரன் தீவிரமான யோசனைக்குப் பின்னரே அந்த முடிவுக்கு வந்திருந்தான். வேறு வழியில்லை. அந்த மத்திய அரசு நிதியுதவி ஃபைலைக் கிழித்துப் போட்டு விடுவது ஒரு புத்திசலித்தனமான காரியமாக இருக்கும்.

ஐந்தரை மணிக்கு ஆபீஸ் முடிந்துவிடும். பக்கத்து "ஸீட்" ஹெலன் பிரமீளா தனது கனத்த சரீரத்தை சுமந்து கொண்டு புறப்பட்டு விடுவாள். எதிர் 'ஸீட்' சுப்பிரமணியமும், கந்தவேலுவும் ஐந்து நிமிஷம் முன்னதாகவே பறந்து விடுவார்கள்.

ஐந்தரை ஆன அடுத்த நிமிஷமே செக்ஷன் முழுக்க காலியாகி விடும். ஃபைலை டிஸ்போஸ்(?) செய்துவிட வேண்டியதுதான்.

கடிகாரத்தைப் பார்த்தான். மணி 5 இருபத்தேழு ஆகி இருந்தது. மூன்று நிமிஷம்! அப்புறம் எல்லாம் சரியாக இருக்கும். டேபிளைப் பார்த்தான். மத்திய அரசு நிதியுதவி பைல் தயாராகக் காத்துக் கொண்டிருந்தது.

'செக்ஷன் என்னமோ கலகலப்பாய்த்தானிருந்தது, இவனைத் தவிர அத்தனைபேரும் 'பிஸி' யாக அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர். இவனுக்கு எதிலும் ஈர்ப்பில்லை. ஐந்தரை மணியை எதிர் நோக்கி காத்திருந்தான்.

காற்றில் ஃபைலின் காகிதங்கள் படபடத்தன. நீலம், சிவப்பு, பச்சை மசிகளில் ஆங்காங்கே எழுத்துகளும் கையெழுத்துகளும் அக்காகிதங்களில் கன்னாபின்னாவென்று இறைந்திருந்தன.

webdunia photoWD
ஒவ்வோர் ஐந்தாண்டுத் திட்டத்தின் போதும் திடீர் திடீர் என்று முளைக்கும் எண்ணற்ற சர்க்கார் அலுவலகங்களில் அதுவும் ஒன்று. அரைக்காசு சம்பளம் என்றாலும் அரசாங்க உத்யோகம் போன்ற பழமொழிகளுக்குப் ப்லையான ஆடுகளில் பாஸ்கரனும் ஒருவன். வேறெந்த நல்ல வேலையும் கிடைக்காமல் போகவே இந்த வேலையில் வந்து ஒட்டிக் கொண்டவன். ஒரு சர்க்கார் ஆஸ்பத்திரியின் நிர்வாக அலுவலகமான அந்த ஆபீசில் இவன் மாதிரி இன்னும் பல பலியாடுகள் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தன. அந்த ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் அனைவரது சம்பளம், லீவ் மற்றும் ஆஸ்பத்திரி சம்பந்தமான உபகரணங்கள் வாங்குவது மாதிரியான 'லொட்டு - லொஸ்கு' வெலைகள் எல்லாம் இந்த அலுவலகத்தின் தினசரிக் கடமைகளில் முக்கியமானவை. விலைக்கு வாங்கப்பட்ட ஆஸ்பத்திரி உபகரணங்களை பராமரிப்பது, ரிப்பேர் தொடர்பாக உபகரணங்களை உரிய கம்பெனிகளிடம் ஒப்படைப்பது; ஆஸ்பத்திரி உபகரணங்கள் தவிர, அது தொடர்பான இருப்புப்பதிவேடுகளை பராமரித்தல் இவையே அவன் வேலைகள். அந்த அலுவலகத்தில் உயிர் நாட்யான இவன் வேலைகள் ஓர் இளித்தவாய் எழுத்தர் செய்யக்கூடிய வேலைகளாக மதிக்கப்படுவ்பவை. ஏனெனில், இந்த வேலைகளில் 'பசை' பார்க்க முடியாதே. பசை பார்க்க முடியாத வேலைகள் எல்லாமே இளித்த வாயர்களுக்காக சிருஷ்டிக்கப்படுபவை. வேலை செய்பவர்களின் டி.ஏ. பில்கள், லோன்கள், அட்வான்ஸ்கள், ஆகியவற்றை கவனித்தாலவது ஒவ்வொரு பில்லுக்கும் பத்து பர்சன்ட், பதினைந்து பர்சன்ட் என்று பசை பார்க்கலாம். ஆஸ்பத்திரி உபகரணங்கள் வாங்கும் 'கிளார்க்'காக இருந்தால் ஒவ்வொரு கம்பெனியிடமிருந்தும் கணிசமாக 'கமிஷன்' அடிக்கலாம். இவன் ஸீட்டில் கமிஷன் அடிக்க வாய்ப்பில்லை. இது இளித்தவாயர்களுக்கான ஸீட்.

அலுவலகத்தில் ஏமாந்த சோணகிரி எவன் அகப்பட்டாலும் அவன் தலையில் கட்டப்படும் ஸீட். தற்போதைய சோணகிரி பாஸ்கரன்.

பாஸ்கரன் ஒரு மாதிரியான ஆசாமி லஞ்சம் அது இது என்றெல்லாம் அலையாத கேஸ். தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன். அதனாலேயே பிறரது நூதனமான பார்வைக்கும் கேலிக்கும் ஆளானவன். தனது சக்காக்கள் சகல வசதியுடனும் இருக்கையில். தான் மட்டும் தனது சம்பளத்தை மட்டுமே நம்பியதால், காலந்தள்ள முடியாத - திக்பிரமைக்கு ஆளனவன். ஒரு லோன் விடாமல் போட்டு, ஆபீசிலும் ஒருத்தன் பாக்கி இல்லாமல் கடன் வாங்கி தனது சகாக்களிடமும் கடனாளி ஆனவன். மாதச் சம்பளம் பிடித்தம் போக வரும் நானூற்றுச் சொச்சத்தில் இருனூற்றுச் சொச்சம் வடகைக்கும், எலக்ட்ரிக் பில்லுக்கும் போக இதர பில்களுக்காகக் கடன் வாங்கி கடன் வாங்கியே திவாலாகிக் கொண்டிருப்பவன். திவாலாகிக் கொண்டிருக்கும் இவனது குடும்பம் ரு கம்பெனியோ அல்லது பாங்க்கோ இல்லை என்ற காரணத்தால் சர்க்காரும் இவனது குடும்பத்தை தேசிய மயமாக்க முடியாத சுழ் நிலை. வாங்கும் சம்பளம் போதவில்லை. கிம்பளம் வாங்கத் தைரியமில்லை. கஷ்டப்படும் நேரங்களில், அப்படி கொஞ்ச நஞ்ச தைரியம் வரும் சமயங்களில், அதுமாதிரி நல்ல ஸீட்டில் தன்னை வேலை செய்ய அதிகாரிகள் விடுவதும் இல்லை. 'பசை'யுள்ள ஸீட்களில் சீனியர்கள் உட்கார்ந்த பிறகு மிச்சமுள்ள ஸீட்கள்தானே இவன் மாதிரி ஜூனியர்களுக்கு கிடைக்கும்?

இப்படியே பல அருடங்களை ஓட்டியதில் பாஸ்கர் சம்பாதித்தவை ஒரு சீக்காளி மனைவி; ஒரு பெண் குழந்தை; மூலம்; சில சாயம் வெளிறிய பேண்ட் சட்டைகள்; நகைகளை அடகு வைத்த மார்வாடி பில்கள் மற்றும் தலையைச் சுற்றி கடன்... இத்தியாதிகள். சம்பளம் வாங்கிய முதல் நாளே சம்பளத்தை கடனுக்கு தாரை வார்த்து விட்டு மறு நாள் பஸ்ஸுக்கு சில்லறை தேடும் அவலம் இன்னும் எத்தனை நாட்களுக்கு? பாஸ்கரன் யோசித்தான். பல மாத யோசனைக்குப் பிறகு ஒரு யோசனை உதித்தது.

அந்த யோசனையின் படியே அந்த பைல் சுக்கல் சுக்கலாக கிழிபடவிருந்தது.

பாஸ்கரனுக்கு இப்போது வரும் மொத்த மாதச் சம்பளம் தொள்ளாயிரத்துச் சொச்சம். அதில் பிடித்தம் போக வருவதோ நானூற்றுச் சொச்சம். ஒரு வேளை வேலையில் தப்புத் தண்டா எதையாவது செய்து 'சஸ்பென்ட்" ஆகிவிட்டாலோ சப்சிஸ்டன்ஸ் அலவன்ஸ் என்ற பெயரில் கிட்டத்தட்ட சம்பளத்தில் பாதி அதாவது - நானூற்றுச் சொச்சம் கிடைக்கும். அதாவது வேலைக்குப் போகாமலேயே அதே சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கலாம். 'சஸ்பென்ஷன்' குறைந்தது ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும். 'சஸ்பென்ஷன் காலம் முழுக்க சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கலாம். இப்போது கடனைத் திருப்பித்தரச் சொல்லி அரிக்கும் கடன் காரர்கள் சஸ்பென்ட் காலத்தில் பழைய கடனைக் கேட்க தயங்குவார்கள். கொஞ்ச நாளைக்கு ஆபீஸ் பிடுங்கல், கடன் பிடுங்கல் இல்லாமல் இருக்கலாம். தினமும் ஆபீஸ் போவதால் ஏற்படும் பஸ், காபி செலவுகளும் சுத்தமாக மிச்சமாகும்.

மேற்படி யோசனையின் பேரில்தான் பாஸ்கரன் தான் சஸ்பென்ட் ஆகிவிடுவது நல்லது என்று முடிவுக்கு வந்தான். ஒரு சின்ன 'மெமோ' வாங்குவதற்கே பயந்து சாகும் சர்க்கார் குமாஸ்தாக்களுக்கு மத்தியில் தன்னை 'சஸ்பென்ட்' செய்ய மாட்டார்களா என்று ஏங்கும் தனது விசித்திரன்மான தலைவிதியை நினைத்து நொந்து கொண்டான் பாஸ்கரன்.

ஆக, சஸ்பென்ட் செய்யப்படவேண்டும், நல்லது. அதற்கு ஏதாவது ஒரு தப்புத் தண்டா செய்யவேண்டுமே, என்ன செய்யலாம்? ஹெலன் பிரமீளாவின் கையைப்பிடித்து இழுத்தால் என்ன? அடக் கடவுளே... குய்யோ முறையோ என்று கத்தாமல் ஒரு வேளை அவள் சம்மதித்து தொலைத்து விட்டால் என்ன செய்வது? ஏற்கனவே ஒரு மாதிரி 'அடித்துப்' பார்வை பார்க்கிறாள். சரி, அப்படியானால் வேறு என்னதான் செய்யலாம்? பைல் எதையாவது ஒளித்து இல்லை... இல்லை... ஒழித்தே விட்டால் என்ன? ஏதாவது ஒரு பைலைக் கிழித்தெறிந்து விட்டு அந்த பைலைக் காணோம் என்று சொல்லி விடலாமே. அதுதான் சரி ஒரு பைலைக் கிழித்துப் போடவேண்டும். ஆபுறம் பைலைக் காணோம் என்று சொல்லிவிட்டு சஸ்பென்ட் ஆகிவிட வேண்டும். சஸ்பென்ஷன் காலம் முடிவதற்குள் ஆபீசில் புதிய பைலை உருவாக்கி விடுவார்கள். அப்புறம் வேலைக்கு திரும்ப வந்து அந்த புதிய பைலில் வேலையை ஆரம்பிக்கலாமே!

எந்த ஃபைலைக் கிழிப்பது? பைலைக் கிழிக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்ததுமே, உடனே அவன் நினைவுக்கு வந்தது மத்திய அரசு நிதியுதவி ஃபைல் தான். அதற்குக் காரணம் இருந்தது. கிழித்தெறியப்படக் கூடிய யோக்யதை சர்க்கார் ஆபிசின் இதர பைல்களுக்கும் உண்டு என்றாலும் மற்றவற்றை விட இதற்கு அதிகம் உண்டு. அது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

சில வருஷங்களுக்கு முன்னால் ஒரு பெரிய பிரமுகர் ஓர் ஆக்சிடென்டில் மாட்டிக் கொண்டார். அவரது போதாத காலம் இந்த ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக நேர்ந்தது. ஆக்சிடென்டின் விளைவாக வாயில் நுழையாத ஏதோ ஒரு லத்தீன் பெயரில் அவருக்கு உடல் கோளாறு ஏற்பட்டிருந்தது. தனியார் ஆஸ்பத்திரியில் அந்த 'லத்தீன்' வியாதிக்கும் பரமவைரியாக 'ஜப்பனிய'ப் பெயரில் ஒரு எலக்ட்ரானிக் எந்திரம் இருக்கிறதாம். இந்த ஆஸ்பத்திரியில் உள்ள இயந்திரங்களே ஒழுங்காக இயங்குவதில்லை, இதில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய இயந்‌திரங்களுக்கு எங்கே யோகம் அடிக்கப்போகிறது? அந்த ஆஸ்பத்திரியில் அந்த இயந்திரம் இல்லாமற்போனதால் பெரிதும் திண்டாடிப் போன அந்த பிரமுகர், ஒரு வழியாக இந்த ஆஸ்பத்திரியிலிருந்து வேறு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றலாகி மண்டையைப் போடாமல் தப்பிப் பிழைத்தார். தனது இக்கட்டான சூழ்நிலையை யோசித்துப் பார்த்த அந்த பிரமுகர் தான் பிழைத்தெழுந்ததும் இந்த ஆஸ்பத்திரிக்கு அந்த எலக்ட்ரானிக் இயந்திரத்தை இலவசமாக வாங்கித் தருவது என்ற முடிவுக்கு வந்தார். ஆஸ்பத்திரிக்கு இயந்திரம் கிடைக்கும்; தனக்குப் பெயர் நிலைக்கும்; எல்லாவற்றிற்கும் மேலாக வருமான வரிக்கும் காதில் பூ வைக்கலாம்.

மேற்படி உத்தேசத்தின் படி அந்த பிரமுகர் சில லட்ச ரூபாய் பெறுமானமுள்ள அந்த இயந்திரத்தை வாங்கி ஆஸ்பத்திரிக்குப் பரிசளித்து விட்டார். அதற்குப் பிறகு தான் விவகாரம் ஆரம்பித்தது. இயந்திரக் கம்பெனி பணத்தைப் பெற்றுக் கொண்டு, இயந்திரத்தை டெலிவரி எடுத்துக் கொள்ளுமாறு எப்போதோ ஆஸ்பத்திரிக்கு தகவல் அனுப்பி விட்டது. வருஷக் கணக்காகியும் அந்த இயந்திரத்தை சர்க்கார் ஆஸ்பத்திரி டெலிவரி எடுத்துக் கொள்ளவே இல்லை. இது மாதிரி தனி நபரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள இயந்திரத்தை பெற்றுக் கொள்ளலாமா என்று 'செக்ரடேரியட்'டை சர்க்கார் ஆஸ்பத்திரி கேட்டது.

அதற்கு பதில் தெரியாத செக்ரடேரியட் மத்திய அரசுக்கு எழுதி ஆலோசனை கேட்டது. மத்திய அரசோ மற்ற மானில அரசுக்கு இதனை தெரியப்படுத்தி இது மாதிரி சந்தர்ப்பம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதா எனவும், அச்சந்தர்ப்பத்தில் அவர்கள் எடுத்த மேல் நடவடிக்கை என்ன எனவும் வினவியது. அவர்கள் யாருக்கு வந்த விருந்தோ என்று மௌனமாக இருந்து விட்டார்கள். பின்னர் ஒரு குறிப்புரையாவது அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு கோரியது. ஆக மா‌நில, மத்திய அரசுகள் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தன. நினைவூட்டுகள் பறந்ததில் ஒவ்வோர் அலுவலகத்திலும் தலா கால் கிலோ அரைக்கிலோ எடை பெறுமானமுள்ள ஃபைல்கள் உருவானதுதான் மிச்சம். இன்று வரை இவற்றுக்கு யாரும் தீர்வு காண முயலவில்லை.

இதற்கிடையில் உபயோகப்படுத்தப்படாமல் வருஷக் கணக்கானதில் அந்த இயந்திரமும் ரிப்பேராகிவிட்டது. இனி அதை டெலிவரி எடுத்தாலும் ரிப்பெர் என்று உபயோகிக்காமல் ஒரு மூலையில் போட்டு வைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யப்போவதும் இல்லை. சும்மா கிடைக்கும் இந்த இயந்திரத்தை டெலிவரி எடுத்துக் கொள்ளவே வருஷக் கணக்காகத் தள்ளிக் கொண்டிருக்கும் இந்த சிவப்பு நாடா அதிகார வர்க்கம். சர்க்கார் பணம் கொடுத்து இயந்திரம் வாங்குவதென்றால் இன்னும் என்னென்ன கெடுபிடிகள் செய்யுமோ? இந்த அதிகார வர்கத்தையும், ஆஸ்பத்திரியையும் நம்பி வாழ்கிற அப்பாவி ஜனங்களைப் பரிதாபத்துடன் நினைத்துக் கொள்வான் பாஸ்கரன். எவனோ யாருக்கோ பரிசளித்த இயந்திரத்துக்கும் 'மத்திய அரசு நிதியுதவிக்கும் என்ன சம்ப‌ந்தம்? எப்படியோ, மொத்தத்தில் அந்த ஃபைலை பார்க்கும்போதெல்லாம் அரசு இயந்திரத்தின் முட்டாள் தனத்தின் மீது அவனுக்கு கோபம் பற்றிக் கொண்டு வரும். தற்போது அந்த ஃபைலைக் கிழித்துப் போடுவதில் அவனுக்கு ஒருவித ஆத்ம திருப்தியும் அதன் மீதான கோபத்துக்கு ஒரு வடிகாலும் கிடைக்கும்.

ஆயிற்று - மணி ஐந்தரை ஆகிவிட்டது. எதிர்பார்த்த மாதிரியே காரியங்கள் நடந்து முடிந்திருந்தன.

ஆபீஸ் முழுதும் ஒரே பேச்சு. பேச்சின் பிரதான விஷயம் பாஸ்கரன் என்ற கிளார்க் முக்கியமான ஒரு ஃபைலைத் தொலைத்து விட்டானாம். ஆபீசின் எதிர் சாரி மரத்தடி நிழல்களிலும், பெட்டிக் கடை, டீக்கடை, முன்னேயும் நின்று சக கிளார்க்குகள் கிசுகிசுத்தனர். பாவம் அவனது போதாத காலம், என்ன தண்டனை கிடைக்குமோ, ஒரு வேளை கமிஷனுக்கு ஆசைப்பட்ட செக்ஷன் சூபரின்டெண்டே ஃபைலை ஒளித்து வைத்து விட்டு பாஸ்கரன் மீது பழியை போட்டுவிட்டாரோ என்னவோ என்றெல்லாம் விவாதங்கள் நடந்தன. இதுமாதிரி விஷயங்கள் தங்களுக்குப் படிப்பினை மாதிரி. எதிர்காலத்தில் தங்களுக்கு இது மாதிரி நேர்ந்து விடக்கூடாது என்றெல்லாம் பேசிக்கொண்ட அவர்களுக்கு பாஸ்கரனின் உள் நோக்கம் தெரிய வாய்ப்பில்லைதான்.

எல்லாச் சடங்குகளும் நடந்து முடிந்து விட்டன. பாஸ்கரனை ஃபைல் கேட்டு அவன் மறுத்து, மெமோ வழங்கி விசாரணை செய்து, குற்றம் சுமத்தி, இறுதியில் அவன் தண்டனைக்காக காத்திருந்தான்.

விசாரணையின் போது "தயவு செய்து என்னை சஸ்பென்ட் மட்டும் செய்து விடாதீர்கள் என்று அடிக்கடி மேலதிகாரிகள் அனைவரிடமும் கேட்டுக் கொண்டான். சர்க்கார் அலுவலகங்களில் சாதரணர்கள் எதை வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்கிறார்களோ அதைத்தான் மேலதிகாரிகள் கண்டிப்பாகச் செய்வார்கள். எந்த ஊருக்காவது 'ட்ரான்ஸ்பர்' வேண்டுமென்றால் 'டிரான்ஸ்பர் போட்டுவிடாதீர்கள் என்று கெஞ்ச வேண்டும். வேலூருக்கு ட்ரான்ஸ்பர் வேண்டாம் என்று கெஞ்சினால் வேலூருக்கு ட்ரான்ஸ்பர் உடனே கிடைக்கும். இந்த சூத்திரத்தின் அடிப்படையில்தான் பாஸ்கரன் சஸ்பென்ஷனைப் பார்த்துப் பீதியடைந்தவன் போலக் காட்டிக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு நிமிஷமும் 'சஸ்பென்ஷன்' ஆர்டரை எதிர்பார்த்தவாறே காத்திருந்த பாஸ்கரன் அவசர அவசரமாகத் தனது வேலைகளை முடித்துக் கொண்டிருந்தான். சஸ்பென்ஷனுக்கு பிறகு வேலையைப் பாதியில் விட்டு விட்டு ஓடிவிட்டான் என்று ஒரு பயல் பேசக் கூடாதல்லவா?

"ஸார்!"

குரல் கேட்டு திரும்பி பார்த்தான் பாஸ்கரன். அவனுக்கு சந்தோஷத்தில் மூச்சு அடைத்தது. கையில் ஏதோ ஆர்டருடன் பியூன் நின்றிருந்தான். பாய்ந்து அந்த ஆர்டரை வாங்கி கொண்ட பாஸ்கரன் ஆவலுடன் அதைப் பிரித்துப் பார்த்தான்.

".... மேற்படி குற்றச் சாட்டுகளின் அடிப்படையில், அரசு ஊழியரின் நன்னடத்தை விதிகளின் கீழும், அடிப்படை விதிகள் இன்னின்ன பிரிவுகளின் படியும், திரு. பாஸ்கரன் இள நிலை உதவியாளரின் வழக்கு பரிசீலிக்கப்பட்டு, பின் வரும் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அவரது சம்பளத்தில் நான்கு சம்பள உயர்வுகள் திரண்ட ஊதியப் பயனுடன் பிடித்தம் செய்யப்படுகின்றன...."

மேற்கொண்டு அவனால் படிக்க முடியவில்லை. மார்பை அடைத்தது. வியர்த்தது.

அடக் கடவுளே சஸ்பென்ட் செய்வதற்கு பதிலாக இன்க்ரிமென்டைக் குறைத்து விட்டார்களே... இன்க்ரிமென்டுடன் சம்பளம் வாங்கியே போதவில்லை. அதுவும் கட் என்றால்.

மீண்டும் ஆர்டரைப் படிக்க முயன்றான். முடியவில்லை. அந்த ஆர்டரை முழுசாகப் படிக்கு முன்னரே அதிர்ச்சியில் அவன் இறந்து போயிருந்தான்.

webdunia
webdunia photoWD
(--கார்க்கி, நவம்பர் 1985.)
நன்றி : கனவுலக வாசியின் நனவுக் குறிப்புகள் (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர்: எம்.ஜி.சுரேஷ்.
வெளியீடு: மதி நிலையம்



Share this Story:

Follow Webdunia tamil