ஒரு வாழ்க்கை முறை (A LifeStyle)
ஆங்கிலம் வழி தமிழில்: ஆர்.முத்துக்குமார்.
ஒரு வாழ்க்கை முறை (A LifeStyle)
-ஃபெர்னான்டோ சோரென்டினோ
[1]
எனது இளமைப் பருவத்தில், நான் ஒரு விவசாயியாகவும், கால் நடை வளர்ப்பவனாகவும் ஆவதற்கு முன்பு, வங்கி ஊழியராக இருந்தேன். இப்படித்தான் இது எல்லாம் நிகழ்ந்தது:
அப்போது எனக்கு 24 வயது. நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை. இப்போதுள்ள அதே, கேன்னிங்கிற்கும் அரவோஸிற்கும் இடையே உள்ள சாந்தா ஃபே அவென்யூவில் உள்ள ஒரு சிறிய குடியிருப்பில் இருந்தேன்.
இப்போது, இந்த சிறிய இடத்திலும் கூட விபத்துக்கள் நேரலாம் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாகிவிட்டது. என்னுடைய விஷயத்தில் அது ஒரு மிகச்சிறிய விபத்துதான்; வேலைக்குச் செல்வதற்காக கதவை திறக்கும்போது சாவி உடைந்து பூட்டுக்குள் சிக்கிக்கொண்டது.
ஸ்க்ரூ ட்ரைவர்கள் மற்றும் குறடு ஆகியவற்றை நாடிய பிறகு பூட்டு ரிப்பேர் செய்யும் கடையை அணுக முடிவு செய்தேன். பூட்டு ரிப்பேர் செய்பவனுக்காக காத்திருக்கும் இடைப்பட்ட வேளையில் வங்கிக்கு சற்று தாமதமாக வருவேன் என்று தகவல் அனுப்பினேன்.
அதிர்ஷ்டவசமாக பூட்டு ரிப்பேர்காரர் சொன்ன படி வந்து சேர்ந்தார். இவரைப் பற்றி எனக்கு நினைவு இருப்பதெல்லாம், அவர் இளமையாக இருந்தபோதும் அவர் தலை முடி முழுதும் வெள்ளையாக இருந்தது என்பது மட்டுமே. சாவித் துவாரம் வழியாக அவனிடம் கூறினேன், "சாவி உடைந்து பூட்டிற்குள் உள்ளது" என்று.
அவர் எரிச்சலை துரித கதியில் வெளிப்படுத்தினார். "உள்ள மாட்டிக்கிச்சா? அப்ப இது ஏற்கனவே கஷ்டமான காரியம், இதற்கு எனக்கு 3 மணி நேரம் ஆகும், மேலும் நான் இதற்காக உங்களிடமிருந்து வசூலிக்கும் தொகை....
அவர் ஒரு கட்டுப்படியாகாத கட்டணத்தைக் கூறினார்.
தற்போது வீட்டில் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ஆனால் கதவு திறந்தவுடன் வெளியே வங்கிக்குச் சென்று உனக்கு சேர வேண்டிய தொகையை கொடுத்து விடுகிறேன் என்றேன்.
இதைக் கூறியவுடன், என்னை எரித்து விடுவதுபோல் அவன் பார்த்தது நான் ஏதோ ஒழுக்கமற்ற ஒரு காரியத்தை செய்யச் சொன்னது போல் இருந்தது.
"என்னை மன்னியுங்கள்" அவன் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஒரு நாகரீகத்துடன் கூறினான். " அர்ஜென்டீன பூட்டு ரிப்பேர் சங்கத்தில் நான் உறுப்பினர் மட்டுமல்ல, இந்த சங்கத்தின் விதிமுறைகளை உருவாக்கியதில் பங்காற்றியவனும் கூட. இதில் ஊகத்திற்கு எந்த விதமான இடமும் இல்லை. உங்களை உசுப்பிவிடும் அந்த ஆவணத்தை நீங்கள் படிக்க விருப்பம் கொண்டீர்களென்றால், அதில் அடிப்படை கட்டளைகள் என்ற தலைப்பின் கீழ் எந்த ஒரு சங்க உறுப்பினரும் வேலை முடிந்த பிறகு காசு வாங்கக்கூடாது என்ற விதி முறை இருப்பதை அறிவீர்கள்" என்றான்.
நான் நம்பிக்கையற்று லேசாக புன்னகைத்தேன். "நீ விளையாடுகிறாய் என்று நினைக்கிறேன்" என்றேன்.
ஹலோ சார்; அர்ஜென்டீன பூட்டு ரிப்பேர் தொழிலாளர் சங்க விதிகள் ஒன்றும் நகைச்சுவை இல்லை. அந்த விதிமுறைகளில்..
எந்த ஒரு விவரத்தையும் மீற முடியாது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு அறத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்க பல ஆண்டுகள் ஆய்வு தேவைப்பட்டது. ஆனால்... எல்லோரும் அதனை படித்து புரிந்து கொள்ள முடியாது என்பது வேறு விஷயம். ஏனெனில் நாங்கள் ஒரு குறியீட்டு மொழி அல்லது ஒரு குழூ உக்குறி மொழியில் எழுதியுள்ளோம். இருந்தாலும் அதன் அறிமுகத்தில் உள்ள 7-வது ஷரத்து உங்களுக்கு புரியும் என்று கருதுகிறேன், "கடவுள் கதவுகளை திறப்பார், கதவுகள் அதனை போற்றி வணங்கும்".
[2]
அந்த முட்டாள்தனத்தை ஏற்கக் கூடாது என்பதற்கு தயாரானேன். "தயவு செய்து கதவை திறந்து கொடுங்கள், பணத்தை உடனடியாகக் கொடுத்து விடுகிறேன்"
"மன்னிக்கணும் சார், எந்த ஒரு தொழிலுக்கும் தர்மம் ஒன்று உண்டு, பூட்டு ரிப்பேர் தொழிலில் அது வளைந்து கொடுக்காதது, குட் டே சார்". அவன் கிளம்பிப்போனான்.
நான் அதிர்ச்சியில் அப்படியே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தேன். பிறகு வங்கியை அழைத்து என்னால் இன்று வர முடியாமல் போகலாம் என்று தகவல் தெரிவித்தேன்.
அதன் பிறகு அந்த வெள்ளைத்தலை பூட்டு ரிப்பேர்காரரை நினைத்துப் பார்த்து எனக்கு நானே கூறிக் கொண்டேன்: "அவன் ஒரு சரியான பைத்தியம்". நான் வேறொரு பூட்டு ரிப்பேர் கடையை அழைக்கப்போகிறேன், பூட்டை திறந்தவுடன் வெளியில் சென்று பணம் தருகிறேன் என்று கூறக்ககூடாது என்று முடிவு செய்தேன்.
தொலைபேசி ஏட்டை எடுத்து எண்ணைக் கண்டுபிடித்து டயல் செய்தேன்.
என்ன முகவரி? ஒரு தற்காப்பான பெண் குரல் கேட்டது.
3653 சான்ட்டா ஃபே, குடியிருப்பு, 10- ஏ.
அவள் சிறிது நேரம் தயங்கினாள், என்னை முகவரியைத் திரும்ப கூற வைத்தாள். பிறகு : "சாத்தியமில்லை சார், அர்ஜென்டீன பூட்டு ரிப்பேர் ஊழியர் சங்க விதிகள் இந்த முகவரியில் எந்த வேலை செய்வதையும் தடை செய்துள்ளது" என்றாள். கோபத்தில் நான் கொதித்தெழுந்தேன் " இப்ப கவனமா கேட்டுக்க, இந்த மாதிரி முட்டா... தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
அதன் பிறகு 20 பூட்டு ரிப்பேர் கடைகளுக்கு தொலைபேசி செய்தேன். முகவரியை கேட்டவுடன் ஒரே மாதிரியான பதில்தான் வந்தது.
சரி! இதற்கு வேறு எங்காவது தீர்வை கண்டுபிடிக்கிறேன் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்.
நான் குடியிருப்புக் கட்டிடத்தின் பணியாளை அழைத்து பிரச்சனையை விளக்கினேன்.
"இதுல ரெண்டு விஷயம் இருக்கு" என்று அவன் கூறத் தொடங்கினான், "எனக்கு பூட்டுகளை திறக்கத் தெரியாது, இரண்டாவது எனக்கு திறக்கத் தெரிந்தாலும், நான் செய்ய முடியாது, ஏனெனில் என் வேலை இடத்தை சுத்தம் செய்வதும் சந்தேகத்திற்கிடமான பறவைகள் அதன் கூண்டை விட்டு வெளியே பறக்காமல் பார்த்துக் கொள்வதும்தான். மேலும் நீங்கள் காசு கொடுப்பதில் அவ்வளவு பெருந்தன்மையானவரும் இல்லை" என்றான்.
இப்போது நான் பதட்டமடைய துவங்கினேன், நிறைய தர்க்கமற்ற, பயனற்ற செயல்களை செய்தேன். ஒரு கப் காபி குடித்தேன், சிகரெட் புகைத்தேன். உட்கார்ந்தேன், எழுந்தேன், நடந்தேன், கைகளைக் கழுவினேன், ஒரு தம்ளர் தண்ணி குடித்தேன்.
பிறகு எனக்கு மோனிகா டிஷியாவ் தொலை பேசி எண் ஞாபகம் வந்தது. அவள் எண்ணுக்கு ஃபோன் செய்தேன். ஒரு இனிமையையும் அலட்சிய பாவனையையும் குரலில் வரவழைத்துக் கொண்டேன். என்ன எப்டி போயிட்டுருக்கு? எல்லாம் நல்லபடியா நடந்திட்டுருக்கா கண்ணே, என்றேன்.
அவளது பதில் என்னை நடுக்கமுறச் செய்தது."கடைசியா என் ஞாபகம் வந்துருக்கு இல்ல? நீ என்னை காதலிக்கிறாய் என்று என்னால் கூற முடியும். கடந்த இரண்டு வாரங்களாக உன்னை நான் பார்க்க முடியவில்லை".
[3]
பெண்ணுடன் வாதம் செய்வது என் திறமைக்கு அப்பாற்பட்டது. குறிப்பாக நான் தற்போது இருக்கும் தாழ்வு மனோ நிலையில். இருந்த போதும் எனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவளுக்கு துரித கதியில் விளக்கினேன். அவள் என்னை புரிந்து கொள்ளவில்லையா, அல்லது நான் கூறுவதை கேட்க மறுக்கிறாளா என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஃபோனை வைக்கும் முன் அவள் கூறிய கடைசி வார்த்தை: "நான் யாருடைய கைப்பாவையும் அல்ல"!
இப்போது நான் இரண்டாம் முறையாக பயனற்ற தர்க்கமற்ற சில நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதாயிற்று. பிறகு வங்கியை அழைத்தேன், அதாவது சக ஊழியர் ஒருவர் எனக்காக கதவுகளை திறந்து தருவார் என்று எதிர்பார்த்தேன்.
என்ன துரதிர்ஷ்டம்! அது அறிவுகெட்ட, நான் வெறுக்கும் ஜோக்கரானா என்ஸோ பரேடெஸ்ஸிடம் சென்றது. நான் நீண்ட நேரம் அவனிடம் கூற வேண்டியதாயிற்று.
"ஆகவே... உன்னால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை? வேலைக்கு வராததற்கான சாக்குகளுக்கு உனக்கு பஞ்சமில்லை" என்று அசட்டுத்தனமாக ஆச்சரியம் கலந்த தொனியில் அவன் பேசினான்.
திடீரென கொலை ஒன்றை செய்வதற்கான மனோ நிலை எழுந்து. ஃபோனை வைத்து விட்டு மீண்டும் வங்கியை அழைத்து மிகேலாஞ்சேலோ லபோர்டாவை கேட்டேன். அவன் கொஞ்சம் சட்டென புரிந்து கொள்வான். நிச்சயமாக அவன் இதற்கு ஒரு தீர்வு காண ஆர்வம் கொண்டுள்ளது போல் தெரிந்தது.
உடைந்தது பூட்டா சாவியா சொல்லு? என்றான்.
"சாவி"
"பூட்டுக்குள்ள மாட்டிக்கிச்சு?"
கேள்வியால் ஏற்கனவே சற்று கடுப்பாயிருந்த நான் "சாவி உடைந்து பாதி பூட்டுக்குள் உள்ளது" என்றேன்.
"ஸ்க்ரூடிரைவரை வைத்து அந்த சிறிய துண்டை எடுக்க முயற்சி செய்து பார்த்தாயா?"
"ஆமாம்! ஆனா அது சாத்தியமில்லை"
நல்லது! அப்ப ஒண்ணு செய். பூட்டு ரிப்பேர் செய்வறவன கூப்பிடு"
கூப்டுப்பாத்தாச்சு! நான் எகிறும் எனது கோபத்தை அடக்கியபடி கூறினேன்.
"அவங்களுக்கு பணம் முன் கூட்டியே கொடுக்கணுமாம்"
அப்ப பணத்தை கொடு அவ்வளவுதான?
தபாரு என் கிட்ட பணம் இப்பத்திக்கு இல்ல.
அப்ப உன் பிரச்சனைகளுக்கு என்ன பண்றது சொல்லு?
இதற்கு எனக்கு என்னிடம் விரைவான பதிலில்லை. அவனிடம் பணம் கேட்டிருக்கலாம், ஆனால் அவன் பேசிய விதம் என்னை கேட்க விடவில்லை.
இப்படி அந்த நாள் முடிந்தது.
அடுத்த நாள் சீக்கிரமே எழுந்தேன். மேலும் சில தொலைபேசி அழைப்புகளைச் செய்தேன். ஆனால் தொலைபேசி வேலை செய்யவில்லை. மற்றுமொரு தீர்க்கவியலாத பிரச்சனை: தொலைபேசி இல்லாமல் எப்படி பழுது பார்க்க அழைப்பது?
நான் பலகணிக்கு சென்று சான்டா ஃபே அவென்யூவில் சாலையில் நடந்து செல்பவர்களிடம் கூவினேன். தெருச் இரைச்சல் காதை செவிடாக்குவது போல் இருந்தது. 10-வது மாடியிலிருந்து அழைத்தால் யாருக்கு காதில் விழும்? அதிகபட்சம் யாராவது ஒருவர் எப்போதாவது மேலே பார்ப்பார் பிறகு தன் வழியே நடந்து செல்கிறார்.
[5]
அடுத்தபடியாக நான் என் தட்டச்சு எந்திரத்தில் 5 காகிதங்களையும் 4 கார்பன்களையும் சொருகி கீழ் வரும் செய்தியை டைப் செய்தேன்: மேடம் அல்லது சார், எனது சாவி உடைந்து பூட்டிற்குள் சிக்கிக்கொண்டுள்ளது. 2 நாட்களாக நான் வெளியே வர முடியவில்லை. முடிந்தால் ஏதாவது செய்யுங்கள். 3653, சான்டா ஃபே குடியிருப்பு 10 -ஏ.
நான் அந்த 5 காகிதங்களையும் தெருவில் வீசியெறிந்தேன். அந்த உயரத்திலிருந்து செங்குத்தாக போடுவது கடினம். புரியாத போக்குடைய அந்த காற்றில் காகிதங்கள் மிதந்து சென்றன. அது நீண்ட நேரம் காற்றில் படபடத்தது. 3 காகிதங்கள் சாலையில் விழுந்தது. ஆனால் அதுவும் இடையறா வாகனங்களால் நசுக்கப்பட்டு கறுப்பானது. மற்றொன்று கடை ஒன்றின் பந்தல் மேல் விழுந்தது. ஆனால் 5-வது நடைமேடையில் விழுந்தது. உடனடியாக ஒரு மிகச்சிறிய கனவான் எடுத்து படிக்கத் தொடங்கினார். மேலே பார்த்தார். சூரிய ஒளி மறைக்காத வண்ணம் கையை கண்ணுக்கு மேல் வைத்துப் பார்த்தார். நான் அவருக்கு நட்பு முகம் காட்டினேன். அவர் காகிதத்தை சுக்கு நூறாகக் கிழித்து சாக்கடையில் போட்டுவிட்டுச் சென்றார்.
சுருக்கமாகக் கூறினால், தொடர்ந்து சில வாரங்களுக்கு என்னாலான முயற்சிகளை மேற்கொண்டேன்.
பலகணியிலிருந்து நூற்றுக்கணக்கான காகிதங்களை வீசினேன். அவை ஒன்று படிக்கப்படவில்லை, அல்லது படிக்கப்பட்டது, அல்லது யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒரு நாள் என் வீட்டுக் கதவினடியில் ஒரு தபால் கவர் இருந்ததைக் கண்டேன். தொலைபேசி இணைப்பு நான் பணம் கட்டாததால் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து எனது எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
முதலில் வீட்டில் இருந்த மளிகைச் சாமான்களை தாறுமாறாக பயன்படுத்தி வந்தேன், ஆனால் குறித்த நேரத்தில் சுதாரித்துக் கொண்டேன். மழை நீரை சேமிக்கத் துவங்கினேன். பூந்தொட்டியிலிருந்து தாவரத்தை பிடுங்கி எறிந்து விட்டு, உருளைக் கிழங்கு மற்றும் சில காய்களை பயிர் செய்தேன். அதனை நேசத்துடனும் வலியுடனும் பாதுகாத்து வளர்த்தேன். ஆனால் எனக்கு பிராணிகளின் புரோட்டீன் சத்து தேவைப்பட்டது. இதனால் பூச்சிகளையும் வளர்க்கத் தொடங்கினேன். சிலந்தி, கொறி விலங்குகளை பிடித்து இனப்பெருக்கம் செய்ய வைத்தேன். சமயத்தில் எப்போதாவது சிட்டுக்குருவி அல்லது புறாவையும் பிடித்தேன்.
வெயில் அதிகம் உள்ள நாட்களில் உருபெருக்கும் கண்ணாடி, காகிதம் கொண்டு நெருப்பு பற்ற வைக்க தெரிந்து கொண்டேன். எரிபொருளுக்காக, எனது புத்தகங்கள், மரச்சாமான்கள் ஆகியவற்றை மெதுவே எரித்தேன். அப்போதுதான் தெரிந்தது வீட்டில் தேவைக்கு அதிகமான பொருட்கள் இருக்கிறதென்று.
சில பொருட்கள் தட்டுப்பாடாக இருந்தாலும் நான் வசதியாகவே இருந்தேன். உதாரணமாக வெளி உலகில் என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை. எனக்கு செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கம் கிடையாது. தொலைக்காட்சிப் பெட்டியையோ வானொலிப்பெட்டியையோ என்னால் வேலை செய்ய வைக்க முடியாது.
[5]
பலகணியிலிருந்து வெளி உலகைப் பார்த்தேன். சில மாற்றங்களை கவனித்தேன். ஒரு புள்ளியில் தள்ளு வண்டிகள் ஓடுவதை நிறுத்திக் கொண்டன. எவ்வளவு காலம் முன்பு இது நிகழ்ந்தது என்று எனக்கு தெரியவில்லை. காலம் பற்றிய அனைத்து சிந்தனைகளையும் நான் இழந்தேன். ஆனால் கண்ணாடி, எனது வழுக்கை, எனது நீள வெண் தாடி, என் முழங்கால்களின் வலி ஆகியவை எனக்கு வயதாகிவிட்டது என்பதை தெரிவித்தது.
பொழுதுபோக்கிற்காக எனது சிந்தனையை அலைய விட்டேன். எனக்கு பயமோ லட்சியமோ கிடையாது.
ஒரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால், நான் ஒருவாறு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.