Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம் இலக்கியவாதிகளுக்கான ஒரு கையேடு

இளம் இலக்கியவாதிகளுக்கான ஒரு கையேடு

Webdunia

, சனி, 30 ஜூன் 2007 (12:37 IST)
புதிதாகத் தமிழில் எழுதவரும் இளம் எழுத்தாளர்கள் பலர் என்னிடம் வந்து தங்களது எழுத்து பற்றியும் - தங்களது இலக்கிய எதிர்காலம் குறித்தும் - அடுத்து எப்படி இயங்குவது என்பது பற்றி - ஆலோசனைகள் கேட்கிறார்கள்.

நவீன தமிழ்ச் சூழலில் எனக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து என் மனதில் படும் ஆலோசனைகளை இங்கு முன்வைப்பது நல்லது என்று தோன்றுகிறது.

முதலாவதாக, புதிதாக எழுத ஆரம்பித்திருக்கும் இலக்கியவாதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் :

அவர்களுக்கு நன்றாக எழுதத் தெரிய வேண்டியதில்லை. தினசரிப் பத்திரிகைகளின் வார மலர்களில் கிசுகிசு எழுதுகிற அளவுக்கு எழுத்து சாமர்த்தியம் இருந்தாலே போதுமானது. ஏனெனில், தன்னை ஒரு டால்ஸ்டாய் தாஃதாவெஸ்கி ஹெமிங்வே என்றெல்லாம் கற்பிதம் செய்து கொண்டு, அவர்களைப் போலவே தானும் தீவிரமாக உழைத்து நல்ல இலக்கியப் பிரதிகளை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இப்போது இது ஒரு தப்பான இடம். ஒரு விதத்தில் பார்த்தால் இது ஒரு நிம்மதி தரும் விஷயம்.

எழுத்துச் சனியனோடு முட்டிமோதி சிரமப்படவேண்டாமே. கொஞ்சம் எழுத்துத் திறமை, கொஞ்சம் வாய்ச்சவடால் இருந்தாலே போதும். பிழைத்துக் கொள்ளலாம். சரிதானா?

இதை மீறி பைத்தியக்காரத்தனமான கனவுகளுடன் நீங்கள் கடுமையாக உழைத்து ஒரு தீவிரமான இலக்கியப் பிரதியை உருவாக்க முனைந்து அதில் வெற்றியும் பெற்று விட்டால் (அது தேவையற்ற வேலை என்ற போதிலும்) அதன் பிறகு நீங்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் பீதியுடனும் வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக வேண்டி வரும். ஏனெனில்,

(அ) தெருவில் புதிதாக நுழையும் ஒரு நாயைப் பார்த்து பழைய நாய்கள் பற்களைக் காட்டி உறுமுவது போல உங்களைப் பார்த்து பழைய படைப்பாளிகள் (!) உறுமுவார்கள். பின்னங்களால்களுக்கு இடையே வாலைச் சுருட்டிக் கொண்டு நீங்கள் உங்கள் பிரதியுடன் பின் வாங்க நேரிடும்.

இளம் இலக்கியவாதிகளுக்கான ஒரு கையேடு (ஆ) நவீன தமிழ் இலக்கியவெளி என்பது மாம்பலம் ரங்கநாதன் தெருவைவிட ஜனநெரிசல் மிக்கது. எனவே பிரதியை எழுதி பிரசுரித்த கையோடு ஒரு வெளியீட்டு விழா வைக்காவிட்டால் நீங்களும் உங்கள் பிரதியும் காணாமல் போய்விடுவீர்கள். கூட்டம் போட்டல்தான் குறைந்தபட்சம் உங்கள் பிரதியை நிராகரிக்கவாவது செய்வார்கள். இல்லாவிட்டால் மௌன அரசியல் நடத்திக் கொன்றே விடுவார்கள்.

(இ) நவீன இலக்கியவாதிகள் குழுக்களாக செயல்படுகிறார்கள். குழுக்கள் என்றதும் என்னமோ கால்பந்தாட்டக் குழு, ஹாக்கி குழு போல ஆரோக்கியமான போட்டிக் குழுக்கள் என்று தப்பிதமாகக் கற்பனை செய்து கொள்ளக் கூடாது. இவை வேறு மாதிரி குழுக்கள்.

மத்திய கால வரலாற்றில் உலவிக் கொண்டிருந்த ரகசியச் சங்கங்களைப் போன்றவை. இவர்களது செயல் திட்டம், ஒரு கொலைத் திட்டம். எழுத முயன்று தோற்றவர்களால் உருவாக்கப்பட்ட சங்கம் இது. ஆதலால் புதிதாக எவனாவது நன்றாக எழுதுபவன் இலக்கிய உலகில் பிரவேசித்துவிட்டால் அவனைத் தீர்த்துக் கட்டுவதே இவர்களது லட்சியம். இவர்கள் நவீன இலக்கிய உலகை பனிப் பிரதேசங்களைப் போல் வழுக்கலான பிரதேசமாக்கி இருக்கிறார்கள். கால் வைத்த மறுநொடியே நீங்கள் வழுக்கி விழுந்து விடுவீர்கள். (இந்த கும்பலின் அழிச்சாட்டியத்திற்கு பயந்துதான் பல இலக்கிவாதிகள் வணிகப் பத்திரிகைகளுக்குப் போய் மின்ன ஆரம்பித்து விடுகிறார்கள்.)

(ஈ) வணிகப் பத்திரிகைகளுக்குப் போகும் உத்தேசம் இல்லையெனில் நீங்கள் உங்களை ஏதாவது ஒரு இலக்கியக் குழுவில் இணைத்துக் கொள்வது நல்லது. ஒவ்வொரு இலக்கியக் குழுத் தலைவரும் தன்னை ஒரு போப்பாண்டவராக நியமித்துக் கொண்டவர். அவர் உங்களுக்கு ஞானஸ்நானம் வழங்குவார். ஞானஸ்நான பெறுமுன் உங்கள் பிரதி தமிழில் எழுதப்பட்டிருந்தபோதிலும், தமிழைத் தவிர வேறு ஏதோ `துளு' `காண்டனீஸ்' `இட்டிஷ்' போன்ற மொழிகளில் எழுதப்பட்டதாகவே கருதப்படும். அதற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றே கொள்ள வேண்டும். நானஸ்நானம் பெற்ற பிறகே இது தமிழ்ப் பிரதியாகக் கொள்ளப்படும்.

(உ) உலகின் மிகப்பெரிய இலக்கிய மேதைகளான டால்ஸ்டாய், தாஸ்தாவெஸ்கி, ஆல்பெர்காமூ, காஃப்கா, யசுனேரி கவபட்டா, ஜெர்ஸி கோஸின்ஸ்கி, இடாலோகால்வினோ போன்றவர்களைப் படித்துவிட்டு அவர்களைப் போலவே நீங்களும் எளிமையாக எழுத முயன்றால் உங்களை விழுங்க ஒரு அதல பாதாளம் காத்திருக்கிறது. நவீன தமிழ் இலக்கியச் சூழலில் `எளிய' `புரிகிற மாதிரி' `படிப்பதற்கு இன்பம்தரத்தக்க' என்பது போன்ற வார்த்தைகள் தடை செய்யப்பட்டவை. இதனால் உங்கள் எழுத்து `வணிக எழுத்து மாதிரி இருக்கிறது' `தட்டையாக இருக்கிறது' என்றெல்லாம் சொல்லி ஒரே முஷ்டிக் குத்தில் உங்களை மல்லாத்தி விடுவார்கள். எனவே ஒவ்வொரு வார்த்தை எழுதும்போதும் உங்களை சாட்டையால் அடித்து வருத்திக் கொண்டு கடினமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுவதுதான் உங்களை ஒரு இலக்கியப் பேராசானாய்க் காட்டும். (உங்கள் உள்ளொளி உங்கள் தலைக்குப் பின்னே, பின்னந்தலையில் ஓர் ஒளிவட்டமாக மாறிச் சுழல ஆரம்பிக்கும். இருட்டில் `டார்ச் லைட்' இல்லாமலேயே நீங்கள் நடந்து போவது சாத்தியம். ஒளிவட்டம் போதிய வெளிச்சம் தரு இளம் இலக்கியவாதிகளுக்கான ஒரு கையேடு

(ஊ) உங்கள் நடை ஒருவேளை, இப்படி இருக்கலாம், ரோகவனத்தில் உதிரும் பாறைகளில
செதில் உதிரும் பாதரச எலும்பின்தூள் படிந்த கல்கோவிலில் நூல் சுருளும
சர்ப்பம் மணல் உதிர நகர்ந்தது. புரியவில்லை என்கிறீர்களா? அதனால் என்ன புரிந்தால்தானே சிக்கல். இப்படி எழுதிய கையோடு உங்கள் எழுத்தை மார்க்வஸ், போர்ஹே மாதிரி இருப்பதாக நீங்களே வெளியே சொல்லிப் பரப்பவேண்டும். தமிழர்கள் தமிழையே ஒழுங்காகப் படிப்பதில்லையாதலால் பிற மொழி இலக்கியத்தை எங்கே படித்திருக்கப் போகிறார்கள். எனவே நீங்கள் சொல்லும் கருத்துக்கு அப்பீலே இருக்காது. பிறகென்ன? நீங்கள் தான் வெற்றியாளர். தமிழ் எழுதுகிறவர்களுக்குப் பிறமொழியில் எழுத வருபவர்களுக்கு இல்லாத ஒரு அரிய வசதி இருக்கிறது. தமிழர்கள் இளிச்சவாயர்கள். ஏமாளிகள் என்பதுதான் அது. எனவே அவர்களை ஏமாற்றுவது எளிது. இது மாதிரி சாமர்த்தியத்தை மலையாளத்திலோ, வங்காளத்திலோ காட்ட முடியாது என்பதால் தமிழ்ச் சூழலில் இருக்கும் இந்த சாதகமான அம்சத்தைப் பயன்படுத்தி முன்னேறப் பார்க்க வேண்டும். புரியாமல் எழுதுவதில் ஒரு பெரிய சௌகர்யம் இருக்கிறது. தலித்தியவாதிகளிடம் இதை தலித் இலக்கியம் என்று சொல்லலாம். பெண்ணியவாதிகளிடம் இதைப் பெண்ணிய இலக்கியம் என்று சொல்லலாம். இலங்கைத் தமிழர்களிடம் இது ஈழப் பிரச்சனை பற்றிப் பேசுகிறது என்று சொல்லிவிடலாம். அனைவரது ஒட்டு மொத்த ஆதரவையும் பெற்றுவிடலாம். தெளிவாக எழுதினால் இப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமா?

(எ) ஒருவேளை நீங்கள் இப்படியும் எழுதலாம்.

இளம் இலக்கியவாதிகளுக்கான ஒரு கையேடு ஒரு காலத்தில் சென்னை பிளாட்பாரங்களில் சரோஜா தேவி கதைகள் என்ற பெயரில் இதுபோன்ற எழுத்துக்கள் கிடைத்து வந்தன. இப்போது இவற்றை நவீன தமிழ்ச் சூழலில் தீவிர இலக்கியமாக்கி இருக்கிறார்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் இதைப் போலவும் நீங்கள் எழுதிவிட்டு இது ஸாதே, ழீத் எழுதியது போன்று இருப்பதாகப் பிரச்சாரம் செய்யவேண்டும். பலன் கிடைப்பது நிச்சயம்.

(ஏ) அப்புறம் ஒரு விஷயம், நீங்கள் எழுதிய முதல் நாவல் பேசப்பட வேண்டுமானால் இரண்டாவது நாவலை உடனடியாக எழுதி வெளியிட வேண்டும். அப்போதுதான் முதல் நாவல் பேசப்படும். "அது பரவாயில்லை அந்த அளவுக்கு இந்த இரண்டாவது நாவல் இல்லை" என்பார்கள். ஒரு வழியாக முதல் நாவலைப் பேச வைத்துவிட்ட வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

(ஐ) இப்படியாக நீங்கள் ஒரு பிரதியை எப்படியோ தயார் செய்து பிரசுரித்து ஒரு இலக்கியவாதியாகி விட்டீர்கள். அதோடு விஷயம் முடிந்துவிடவில்லை. அதற்குப் பின்புதான் விவகாரமே இருக்கிறது. வெகுஜனப் பத்திரிகைகள் சமீப காலமாக தீவிர இலக்கியவாதிகள் பால் கரிசனம் காட்டி வருகின்றன. அதில் ஏதாவது ஒன்று இலக்கிய மலர் வெளியிடும் அப்போது உங்களிடம் `பேட்டி' அல்லது `கட்டுரை' கேட்டு வரும். அது சமயம் கவனமாக நடந்து கொள்வதன் மூலம் நீங்கள் ஜெயிக்க வேண்டியது முக்கியம். `புதுமைப்பித்தனின் நடைகுடை சாய்ந்தநடை' `கு.ப.ரா. காலாவதியாகிவிட்டார்' `மௌனியின் கதைகளில் ஒன்று கூட தேறாது'
`புதுமைப்பித்தனுக்கு சமூகஅக்கறை இல்லை' என்றெல்லாம் குண்டுகளைத் தூக்கிப் போட வேண்டும். இப்படி நீங்கள் அள்ளி வீசும் அதிரடி ஸ்டேட்மெண்டுகள் உங்களை இலக்கியவானில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் போல் மிளிர வைக்கும். உங்கள் புகழ் எய்ட்ஸ் போல் பரவும். வெளிநாட்டுத் தமிழர்கள் உங்களை அவர்கள் நாட்டுக்கு வரவழைத்து பாராட்டுக் கூட்டம் நடத்தி கை நிறைய டாலர்களாகக் கொடுத்து அனுப்புவார்கள். அப்புறம் என்ன, நீங்கள்தான் நவீன இலக்கியவாதி; தீவிரமான படைப்பாளி; எல்லாமும்.

(ஒ) கடைசியாக ஒரு விஷயம், தமிழ்நாட்டில் அரசு, தனியார் நிறுவனங்களின் உதவியின்றி சாதாரண தனி நபர்களின் முயற்சியினால் சிறு பத்திரிகைகள் சிரம தசையில் இயங்கி வருகின்றன. பேட்டியில் பத்திரிகையாளர்கள் உங்களுக்குப் பிடித்த சிறு பத்திரிகை எது என்று கேட்டால், இந்த தரித்திரம் பிடித்த பத்திரிகைகளில் ஒன்றின் பெயரைச் சொல்லிவிடக் கூடாது. பெயரைச் சொன்னாலே தரித்திரம் ஒட்டிக் கொள்ளும். எனவே இளம் இலக்கியவாதிகளுக்கான ஒரு கையேடு நெதர்லாந்திலிருந்து வெளிவரும் `நூற்று இருபத்தெட்டாவது மனிதன்' என்ற பத்திரிகைதான் பிடிக்கும்? என்று சொல்லவேண்டும். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் பத்திரிகையின் பேரைச் சொல்வதால் யாருக்கு என்ன லாபம்? நெதர்லாந்தில் இருக்கும் புலம் பெயர் தமிழர் நடத்தும் பத்திரிகையின் பெயரைச் சொன்னாலாவது அவர்கள் நாளைக்கு நம்மை நெதர்லாந்துக்கு வரவழைத்து சாப்பாடு போட்டு ஊரைச் சுற்றிக் காட்டுவார்கள். குளிர்காலக் கோட் வாங்கிக் கொடுப்பார்கள். எனவே இதுபோன்ற விஷயங்களில் உஷாராக இருந்து காரியத்தை சாதிக்கவேண்டும். இந்த மாதிரி திட்டமிட்டு இயங்கினால் நீங்கள் வெற்றிகரமாக இலக்கியவாதியாவது நிச்சயம். ஏதாவது வேலை செய்து கொண்டே இலக்கியப் பணியைத் தொடரும் நீங்கள் வெளிநாட்டு டாலர்கள் தேறுவதைப் பொறுத்து முழுநேர எழுத்தாளனாகி விடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம் அப்புறம் என்ன; சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பியுங்கள். வெற்றி உங்களுக்கே.அது சரி; இதற்கெல்லாம் ஒத்து வராமல் தான் உண்டு, தன் எழுத்து உண்டு என்று தான்தோன்றியாக இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கியப் பைத்தியங்கள் என்ன ஆகும்? அதுகள்பாடு பாவம்தான். நான்காம் பேருக்குக்கூடத் தெரியாமல் அந்த ஜன்மங்கள் காலம்பூராவும் இருட்டிலேயே இருந்து மறைய வேண்டியதுதான். திருத்தக்கத்தேவரை உ.வே.சா. கண்டுபிடித்தது போல், அவர்களைப் பின்வரும் நூற்றாண்டில் எவனாவது ஒரு வாசகன் கண்டுபிடித்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் அதற்கும் வழி இல்லாமல் போய்விடும். சரி கிடக்கிறார்கள்; பிழைக்கத் தெரியாதவர்கள். அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை. நம் பிழைப்பை நாம் பார்ப்போம். அதுதானே நமக்கு நல்லது? மிஸ்டர் ஹெமிங்வே நீரா சொன்னீர் `தீவிர இலக்கியம் எழுத்தாளனைக் கொன்றுவிடும்' என்று. திட்டமிட்டு செயல்பட்டால் அது வென்று விடுமய்யா வென்றுவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil