ஒவ்வொரு கவிதையும், கவிதையின் நலனுக்காக கவிதையையும் வரலாற்றையும் சமரசப்படுத்தும் ஒரு முயற்சியாகும். தான் வாழும் சமூகத்துடன் கவிஞன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற போதிலும் `காலத்தின் சுழல் ஓட்டம்' என்பதில் அவன் பங்கு கொள்கிறபோதிலும், வரலாற்றின் கொடுங்கோன்மையிலிருந்து எப்போதுமே தப்பிக்க முயல்கிறான் - இம்மாதிரியான தீவிர உதாரணங்களை நவீன உலகில் கற்பனை செய்வது அருகி வருகிறது. பெரும் கவித்துவ சோதனைகள் யாவும் - மந்திரச் சூத்திரங்கள், காவியக் கவிதையிலிருந்து ஆடோமெடிக் எழுத்து வரை, புராணிகம், தகவல் செய்தி, கொச்சைச் சொல் வழக்கு, படிமம் என்றுமே திரும்ப நிகழ முடியாததேதி, கோலாகலம் - இவையும், கவிதைக்கும் வரலாற்றுக்கும் பொதுவான உலைக்களனாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. உயிர்த்துடிப்பு மிக்க தேதி கருவளச் செறிவுடன், ஒரு புதிய காலகட்டத்தினை தொடக்கி வைக்க முடிவற்றுத் திரும்பிக் கொண்டிருக்கும். கவிதையின் தன்மையானது களிப்பூட்டும் விழாவுக்கு இணையானது. அது காலண்டரில் ஒரு தேதியாக இருப்பதோடன்றி காலத்தின் சீர் ஓட்டத்தில் ஒரு இடைவெட்டாகவும், நேற்றுமில்லாது, நாளையுமில்லாது, காலம் தவறாது நிகழ்காலத்தினுள் வெடித்துச் சிதறும் பொருளாகவும் இருக்கிறது. ஒவ்வொரு கவிதையும் ஒரு களியாட்ட விழா, தூய காலத்தின் திரட்சி.
மனிதர்களுக்கும் வரலாற்றுக்கும் இடையிலான உறவு அடிமைத் தனமும், சார்பு நிலையும் உள்ளதாக இருக்கிறது. வரலாற்றின் முதன்மைப் பாத்திரங்கள் நாம் மட்டுமே எனினும் நாம் அதன் கச்சாப் பொருளாகவும், பலியாட்களாகவும் இருக்கிறோம். வரலாற்றின் நிறைவேற்றம் நம்மைக் கொண்டே நடக்கும். கவிதை இந்த உறவினை தீவிரமாக மாறுதல் அடையச் செய்கிறது. கவிதையின் நிறைவேற்றம் வரலாற்றின் ஏதுவில்தான் நடக்க முடியும். கவிதையின் விளைபொருட்கள் - நாயகன், கொலையாள், காதலன், நீதிக்கதை, பகுதியான ஒரு கல்வெட்டு, திரும்ப வரும் வரிகள், சூளுரை, விளையாடும் குழந்தையின் உதடுகளில் தானாய் உருவாகும் ஒரு வியப்புக்குறி, சாவுத் தீர்ப்பளிக்கப்பட்டு குற்றவாளி, முதன் முதலாகக் காதல் செய்யும் பெண், காற்றில் மிதந்து வரும் சொல் தொடர், அலறலின் ஒரு இழை, புதிய சொல்லாக்கம் மற்றும் புராதன சொல்லாட்சி, மேற்கோள் வரிகள் - இவை யாவும் தம்மை சுவரில் மோதி நொறுங்கிப் போகவோ, இறந்து போவதற்கு தம்மை இழந்து கொள்ளவோ அனுமதியாது. இவை முடிவின் முடிவிற்கு, இருத்தலின் உச்சத்திற்குக் காத்திருக்கின்றன. காரண, காரியத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்றன. அவை என்னவாக இருக்கின்றனவோ அவையாக தம்மை ஆக்கி மீட்டுத் தரும் கவிதைக்காகக் காத்திருக்கின்றன. வரலாறு இன்றி எந்த எந்தக் கவிதையும் இருக்க முடியாது என்றாலும் வரலாற்றை உருவ மாற்றம் செய்யும் பணியினைத் தவிர கவிதைக்கு வேறு ஏதுமில்லை. எனவே நிஜமான புரட்சிகர கவிதை ஊழியிறுதி செய்தியுடைய கவிதையாகும்.
சரித்திரமும் சமுதாயமும் எப்பொருளினால் ஆக்கப்படுகிறதோ - மொழி - கவிதையும் அதனாலேயே ஆக்கப்படுகிறது. உரையாடல் மற்றும் தர்க்கரீதியான சொல்லாடல் போன்றவற்றை நிர்வகிக்கும் விதிகளைத் தவிர்த்த வேறு விதிகளால் மொழியை மறு உற்பத்தி செய்கிறது கவிதை. இந்தக் கவிதைப் பண்பு மாற்றம் மொழியின் ஆழ்ந்த உள்ளிடங்களில் நிகழ்கிறது. இந்த சொல் தொடர் - தனித்த சொல் அல்ல - மொழியின் மிக எளிய தனிமம் அல்லது அதன் செல்கூறு ஆகும். ஒரு சொல் பிற சொற்களின்றியோ, ஒரு சொல் தொடர் பிற சொல் தொடர்களின்றியோ நிலைக்க முடியாது.
அதாவது ஒவ்வொரு வாக்கியமும் மற்றொன்றிற்கான தொக்கி நிற்கும் குறிப்பினையும் கொண்டுள்ளது. மற்றதினால் விளக்கமூட்டப்படுவதற்கு ஏற்புடனும் இருக்கிறது. ஒவ்வொரு சொல் தொடரும் எதையாவது `சொல்லும் விருப்பத்தை' உள்ளடக்கி இருக்கிறது. தனக்கு அப்பாற்பட்டதை பட்டவர்த்தனமாகக் குறிக்கிறது. இயக்கம் மிகுந்ததும் இடம் மாற்றிக் கொள்ளக் கூடியதுமான குறியீடுகளால் ஆனதே மொழி. ஒவ்வொரு குறியீடும் எதை `இலக்குவைத்து' செல்கிறது என்பதைக் குறிக்கிறது. இந்த வகையில் அர்த்தம் என்பதும், செய்திப் பரிமாற்றம் எனப்படும் சொற்களின் நோக்கத்தன்மையின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் கவிதை சொற்களைத் தொட்ட மாத்திரத்தில் லயமிக்க அலகுகளாகவும், படிமங்களாகவும் மாறிவிடுகின்றன. அவை தமக்குள்ளாகவே நிறைவுடையதாயும் சுயாட்சி மிக்கதாயும் ஆகின்றன.