Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிலப்பதிகாரம் எனும் ஒரே தமிழ் நாடகம்- இந்திரா பார்த்தசாரதி

சிலப்பதிகாரம் எனும் ஒரே தமிழ் நாடகம்- இந்திரா பார்த்தசாரதி

Webdunia

சமீபத்தில் இன்னொரு முறை `சிலப்பதிகாரத்தை'ப் படித்தேன். அதை ஒரு காவியமாக எண்ணி என்னால் படிக்க முடிவதேயில்லை. இளங்கோ ஷேக்ஸ்பியருடன் வைத்து எண்ணத்தக்க அளவுக்கு சிறந்த நாடக ஆசிரியன் என்ற கருத்துத்தான் மேலோங்குகிறது.

ஷேக்ஸ்பியர் வரலாற்றிலும் மரபிலும் வழங்கிய கதைகளுக்குப் படடை தீட்டிப் பொன்மயமாக்கியது போல இளங்கோவும் சங்ககாலத்துப் பாடல்களினின்றும் ஒரு சில நிகழ்ச்சிகளை எடுத்து அற்புதமான நாடகம் ஒன்றை நமக்குத் தந்திருக்கிறார்.

பேகன் என்ற சங்க காலத்தக் குறுநில மன்னன் ஒருவன் தன் மனைவி கண்ணகியை விட்டு பிரிந்திருந்ததைக் கண்டித்து கபிலர், பெருங்குன்றூர்கிழார், அரிசில் கிழார் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். வேங்கை மரத்தடியில் வேதனையுடன் நிற்கும் பெண் ஒருத்தியின் குறிப்பும் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றது. இவற்றின் அடிப்படையில் எழுந்ததுதான் சிலப்பதிகாரம்' என்ற நாடகம்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோ என்ன சொல்ல விரும்புகிறார்? பதிகத்தில் வரும் மூன்று உண்மைகளையா? அம்மூன்று உண்மைகளில் மிகவும் முக்கியமானது. `ஊழ்வினை உருத்து வந்தூட்டும்' என்பதாகும். அதாவது விதியை வெல்வது என்பது அரிய காரியம்.

துன்பவியல் நாடகங்கள், விதியையோ கடவுளையோ மனிதன் எதிர்த்துப் போராட முயன்று தோல்வியடைவதைதான் குறிப்பிடுகின்றன என்று கூறுவார்கள். மனிதனால் போராட முடியுமென்பதே மானுடத்துக்கு வெற்றி என்ற அளவில், துன்பவியல் நாடகம் இப்போராட்டத்தைத்தான் - வெற்றி தோல்வி என்பன முக்கியமல்ல - சித்தரிக்க வேண்டுமென்பது டோப்ரி, டபிள்யு வி.ஓ.' கான்றோர் என்பவர்களின் கருத்து. சோபோகிள்ஸ் நாடகங்களில் விதியின் தவிர்க்க முடியாத தன்மை வற்புறுத்தப்படுகிறது.

நல்லது கெட்டது என்பவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சுதந்திரம் மனிதனுக்கிருக்கிறது. `விதி' தவிர்க்க முடியாததது என்ற நிலையில், துன்பவியல் நாடகத்தின் கதாநாயகன் கெட்டதைத் தேர்ந்தெடுத்து, வீழ்ச்சி அடைகிறான். இறுதி வெற்றி `விதி'க்கு. விதிக்குப் பதிலாகக் கடவுள் என்று கொண்டால், துன்பவியல் நாடகம், மனித ஆற்றலின் வரையறையையும், மூலப் பொருளின் எல்லையற்ற தன்மையையும் சுட்டிக் காட்டுமென்று கொள்ளலாம்.

சிலப்பதிகாரம் எனும் ஒரே தமிழ் நாடகம
- இந்திரா பார்த்தசாரதி

கோவலனின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? அவன் கண்ணகியை விட்டு நீங்கியது தவிர்க்க முடியாதது. வழியில் சந்தித்த மறையவன். `மதுரைக்கு இட ப்பக்கமாகச் செல்லலாம். போகும் வழியில் உனக்கு நேர இருப்பதை உணர வாய்ப்பு உண்டு' என்று கூறியதை புறக்கணித்து கவுந்தியடிகளின் யோசனையின்படி நடுவழியைத் தேர்ந்தெடுத்தது தவிர்க்க முடியாதது. ஆகவே சிலப்பதகாரத்தில் வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவலனை அவன் அழிவுக்கு அழைத்துச் செல்வன என்ற அளவில்தான் அர்த்தமுடையவனவா? அல்லது அர்த்தமற்றவையா? கோவலனின் மரணம் என்ற உண்மைக்கு முன்னால் கண்ணகியின் கற்பு, மாதவியின் கலையாற்றல், பூம்புகார், மதுரை மாநகர், ஆகிய நகரங்களின் செல்வவளம் எவைக்குத்தான் அர்த்தமிருக்கின்றன? ஓர் உண்மையை நிலை நிறுத்திக்காட்டுவதற்கு இத்தனைத் தோற்ற மாயைகளையா இளங்கோ சிருஷ்டித்துக் காட்டியிருக்க வேண்டும்? இவை மிகவும் சுவாரஸ்யமான கேள்விகள்.

இராமாயணம் கதாநாயகனின் வீழ்ச்சியைச் சொல்லவில்லை. இந்தியக்காவியங்களிலோ, நாடகங்களிலோ கதாநாயகன் தோல்வியடையும் மரபு கிடையவே கிடையாது. "இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் துன்பவியல் நாடகம் என்பதற்கு இடமே இல்லை" என்று ஆனந்த குமாரஸ்வாமி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இவ்வகையில் சிலப்பதிகாரம் மாறுபட்டிருப்பதே இதன் தனித்தன்மை. இது ஒரு வித்தியாசமான நாடகம் என்பதற்கோர் எடுத்துக்காட்டு.

சிலப்பதிகாரத்தில் கதாநாயகன் மட்டும் இறக்கவில்லை தவறு செய்த அரசன் மரணம் எய்துகிறான். அவன் மனைவி அவனைத் தொடர்கின்றாள். இறுதியில் ஊர் எரிவாய்ப்பட்டு அழிகின்றது. அவரவர் கொண்டிருந்த லட்சியங்களும், கனவுகளும் சிதைந்து, அழிவு என்றோர் உண்மை அரியாசனம் ஏறுகின்றது. கணவனையே கடவுளாகக் கொண்ட கண்ணகியின் கற்பு தவறுடையதா? கண்ணகிக்கு விதிக்கப்பட்டிருந்த ஒழுக்கத்தை மீறிக் கோவலனை வழிபட்ட மாதவியின் குற்றம் என்று சொல்ல முடியுமா? வணிக தர்மத்தில் சலிப்படைந்து, கலையார்வம் கொண்டது கோவலனின் தவறா? பொற்கொல்லனையும் இளங்கோ `வில்லனா'கச் சித்தரிக்கவில்லை. `கூற்றத் தூதுவனாகத்தான்' விதியின் காட்டியிருக்கிறார். விதி விளையாடிய காரணத்தினால்தான் பாண்டிய மன்னனின் நாக்கும் தடுமாறியது.

ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களுள் மிகவும் சிக்கல் வாய்ந்ததாகக் கருதப்படும் `கிங் லியர்' இங்கு நினைவுக்கு வருகின்றது. அதில் வரலாற்று நாடகங்களில் வருவதுபோல, ஒரு புதிய அரசன் அரியாசனம் ஏறி ஒரு புது அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கவில்லை. லியர், கார்டிலியா, கொனரில், ரீகன், கார்ன்வால், எட்மன்ட், க்ளொஸஸ்டர் ஆகிய எல்லாரும் இக்கிறார்கள். ஆல்வனி ஆகியோர் விதியின் வலிமைக்கு ஆளாகி வேதனையுற்றவர்கள். ஷேக்ஸ்பியர் கூறுவதுபோல், `iநேன ஞநைஉநள டிக யேவரசந' அதே போல் சிலப்பதிகாரத்தில் எஞ்சியிருப்பவர்கள் மதுரையில் இருக்கும் நல்லவர்கள்தாம், அவர்கள் ஒட்டுமொத்தமாக குறிப்பிடப்படுகின்றார்களேயன்றி அவர்களுக்கென்று ஒரு தனி முகமுமில்லை.

சிலப்பதிகாரம் எனும் ஒரே தமிழ் நாடகம
- இந்திரா பார்த்தசாரதி

மரபு வழித்துன்பவியல் நாடகங்கள், மூலப்பொருளின் எல்லையற்ற தன்மையைச் சுட்டிக்காட்டும் வழியில் மனிதனின் பல ஹீனத்தை எடுத்துக் கூறுகின்றன. ஆனால் மூலப்பொருளின் எல்லையற்ற தன்மையை நையாண்டி செய்யும் நாடகங்களையும் இக்காலத்தவர்கள் `Grotesque' என்று சொல்லுகிறார்கள். `கிங் லியர்' இவ்வகiச் சார்ந்த நாடகம். ஓர் உண்மையை நிலைநிறுத்திக்காட்ட எல்லாரும் இறக்க வேண்டுமென்றால், அந்த உண்மையை நிலைநிறுத்திக் காட்ட வேண்டிய அவசியந்தான் என்ன? கடவுளையா விதியையோ அல்லது எல்லையற்றதாய் நாம் நினைக்கின்றோமோ அதைப் பரிகசிப்பது போல் இருக்கிறது. கண்ணகியின் கற்பை நாம் புரிந்து கொள்வதற்காக ஓர் ஊர் எரிய வேண்டியது அவசியந்தானா? சிலப்பதிகாரத்தின் தொனிப்பொருள் இதுதான் என்று தோன்றுகிறது.

வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மையே அதன் அர்த்தம். அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பித்துக் கொள்ள வேண்டியதுதான் மனிதனின் முயற்சி.

புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் மூலம் இவ்வெறுமையை வற்புறுத்திய இளங்கோ வஞ்சிக்காண்டத்தின் வழியாக இதற்கோர் அர்த்தம் காணமுடியுமா என்று முயல்கிறார். செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பும், அவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்ததும் இம்முயற்சியின் பலன்கள்.

மனிதனின் முயற்சியைச் சிறப்பித்துக் கூறும் வஞ்சிக் காண்டத்தில் விதியைப் பற்றி பேச்சேயில்லை. கனகவிசயர் விதியின் காரணமாகத் தோற்றார்களென்றோ, அல்லது செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுக்க வடநாடு சென்றது ஊழ்வினையின் காரணமாக வென்றோ கூறப்படவேயில்லை. மனிதன் தன் ஆற்றலின் எல்லையை உணரத் தொடங்குகிறபோது, அவன் வலிமைக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும் ஒரு சக்தியைப் பற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.

இவ்வாறு பார்க்கும்போது, பிரஷ்ட் கூறுவதுபோல், thesis (புகார்க் காண்டம்) anti thesis (மதுரைக் காண்டம்) synthesis (வஞ்சிக் காண்டம்) என்று ஒரு நாடகத்துக்கு தேவையான மூன்று அம்சங்களும் சிலப்பதிகாரத்தில் இருப்பதை நாம் காண்கின்றோம்.

Share this Story:

Follow Webdunia tamil