Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குறுக்கு பாதை

சிறுகதை - சந்திர. பிரவீண்குமார்

Advertiesment
குறுக்கு பாதை
, திங்கள், 20 ஜனவரி 2014 (13:40 IST)
“என்னால இதுக்கு மேல நடக்க முடியாது” என்று நான் புலம்ப ஆரம்பித்தேன்.

“அட… சும்மாயிருப்பா! கீழே போக இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும். அதுவரைக்கும் என்னால உன்னை தூக்கிக் கொண்டு வர முடியாது” என்று அடக்கினார் சீனு அண்ணன். ஆனால் அவர் கூறிய தகவல் என்னை அடக்காமல் அதிகமாக புலம்ப வைத்தது.

“என்னது…?! இன்னும் ரெண்டு மணி நேரமா? அதுவரைக்கும் என்னால நடக்க முடியாது. கீழே போகறதுக்குள்ள நான் செத்துருவேன். இந்த கிரிவலத்தை கண்டுபுடிச்சவன் யாருன்னு தெரியல. அவன் மட்டும் என் கையில கிடைச்சான்…” என்று பற்களை கடித்தேன்.

இப்போது சீனு அண்ணன் சிரித்தார். ” விட்டா அண்ணாமலையாரை கூட திட்டுவ போல”

“விட்டா என்ன? அண்ணாமலையாரை திட்ட எனக்கென்ன பயம்… எந்த கடவுளும் தனக்கு இப்படி வழிபாடு செஞ்சா தான் அருள் பண்ணுவேன்னு சொன்னா அவன் கடவுளே இல்ல. காட்டுமிராண்டி” என்று வெடித்தேன்.

சீனு அண்ணன் என்னை உற்று பார்த்தார். பிறகு கடகடவென்று மீண்டும் சிரித்தார். “உண்மைதான். தனக்கு இப்படி வழிபாடு செஞ்சா தான் அருள் தருவேன்னு அண்ணாமலையார் சொல்லலை. நாம தான் அவர் பேரு சொல்லி இப்படியெல்லாம் கிரிவலம் போறோம். அது சரி? நீ தானே குறுக்கு வழில கிரிவலம் போகணும். அந்த வழியை காண்பிங்கன்னு கேட்டே? அண்ணாமலையார் என்கிட்டே கேட்கலையே?” என்றார்.

“நான் தான் கேட்டேன். இப்பவும் ஆசை தான். ஆனா கால் வலிக்குதே?”

இப்போது காலை பார்த்தேன். மரண வலி எடுத்தது.

எனக்கு இப்படி குறுக்கு வழி கிரிவலம் போகும் ஆசை சந்துருவால் தான் வந்தது. சந்துரு, என் வகுப்பு தோழன். அவனுடைய அப்பா நாங்கள் படித்த பள்ளியில் தான் ஆசிரியராக இருந்தார். அதனால் சந்துரு எப்பவும் பந்தாவாக தான் இருப்பான். அதுவும் எனக்கு தெரியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் பந்தா செய்வது அவனுக்கு முக்கிய பொழுதுபோக்கு.

இப்படி தான் என்னிடம் அந்த விஷயத்தையும் சொன்னான். “நம்ம ஊருக்கு ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இசைஞானி இளையராஜா கிரிவலம் வர்றார் தெரியுமா?”

“தெரியுமே!” என்றேன் நான்.

“அது விஷயம் இல்ல. அவர் எந்த வழியில் கிரிவலம் போறார்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்டான் சந்துரு.

“எல்லோரும் போற வழியில தான் இருக்கும்”

“போடா… அந்த வழியில போனா கிரிவலம் போற மக்கள் அவரை தொந்தரவு செய்ய மாட்டாங்களா? அவர் போகறது குறுக்கு வழியில” என்று பெருமிதம் பொங்க சொன்னான் சந்துரு.

குறுக்கு வழி என்று சொன்னதும் எனக்கு சந்தோசம் தாங்கவில்லை. ‘இனிமேல் அடிக்கடி கிரிவலம் போய் புண்ணியம் தேடிக்க வேண்டியது தான்’ என்று நினைத்துக் கொண்டேன்.

“டேய்… உனக்கு அந்த வழி தெரியுமா?” என்று கேட்டேன்.

“தெரியுமே…” என்றான் பந்தாவாக.

“எனக்கும் காண்பியேன் டா…:” என்று கெஞ்சினேன்.

“அதெல்லாம் காண்பிக்க மாட்டேன்” என்று ஒரேயடியாக மறுத்து விட்டான். அவன் அந்த வழியை எனக்கு சொல்லி விட்டால் அவனுடைய ‘வாத்தியார் பையன்’ என்ற இமேஜ் என்ன ஆவது?

அப்போது தொடங்கிய தேடல் தான் ‘குறுக்கு வழி கிரிவலப் பாதை’. ஊரில் யார் அண்ணாமலையார் மீது அதீத பக்தி கொண்டதாக எனக்குப்பட்டாலும் அவர்களிடம் “கிரிவலப்பாதைக்கு ஒரு குறுக்கு வழி இருக்காமே? உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டு விடுவேன். எனக்கு தெரிந்து பலருக்கு குறுக்கு வழியில் ஒரு கிரிவலப்பாதை இருப்பது தெரியவே இல்லை. ‘எனக்கு தெரிந்த தகவல் கூட பல பேருக்கு தெரியல’ என்ற இறுமாப்பில்(!) திரிந்தேன்.

அந்த நேரத்தில் தான் சீனு அண்ணனின் நட்பு எனக்கு கிடைத்தது. என்னை போலவே ஊரை பற்றிய தேடல் உள்ளவர் என்பது தான் எங்களுக்கு நட்பு ஏற்பட காரணம். அவரிடம் மட்டும் விடுவேனா?.
“மலைக்கு உள்ளே ஒரு குறுக்கு வழி கிரிவலப்பாதை இருக்காமே? உங்களுக்கு தெரியுமா அண்ணா…” என்று அவரிடமும் என் வேட்டையை நடத்தினேன்.

“தெரியுமே..” என்ற பதில் அவரிடம் இருந்து வந்தது. “அப்பாடா… ஒரு வழியா கிடைச்சுது’ என்று நினைத்துக் கொண்டேன்.

“எனக்கும் காண்பிக்கறீங்களா அண்ணா” என்று கேட்டு பார்த்தேன்.

“வர சனிக்கிழமை உனக்கு லீவு தானே போகலாமா” என்று திருப்பிக் கேட்டார்.
பழம் நழுவி பாலில் விழுந்து விட்டது. இரண்டு பேரும் சனிக்கிழமை மதிய சாப்பாட்டுக்கு பிறகு .ரமணாசிரமத்தில் சந்திப்பதாக குறித்துக் கொண்டோம்.

என் நெடுநாள் கனவு பலிக்கும் சகுனமாக வெள்ளிக்கிழமை நல்ல மழை பெய்தது.

முடிவு செய்தபடி சனிக்கிழமை மதியம் ரமணாசிரமத்தில் இருவரும் ஆஜர் ஆனோம். சீனு அண்ணன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.
“மழை பெய்து மலையில் கல்லு அதிகமா இருக்கும். உனக்கு பிரச்சனையில்லையே” என்று கேட்டார். அவர் ஏன் அப்படி கேட்டார் என்று எனக்கு அப்புறம் தான் தெரிந்தது.

வேகமாக மலையேற ஆரம்பித்தோம். முதலில் எனக்கு மகிழ்சியில் தெரியவில்லை. பிறகு காலில் கற்கள் குத்த ஆரம்பித்தன. கால்கள் வலி எடுக்க தொடங்கியது

“இன்னும் கொஞ்ச தூரம் தான் பா. சீக்கிரம் நட” என்று விரட்ட ஆரம்பித்தார் சீனு அண்ணன்.

“நிக்க கூட முடியலண்ணா…” என்று முனகினேன்.

“இன்னும் கொஞ்ச தூரம் தான், பொறுத்துக்கோ. இருட்ட ஆரம்பிச்சா இறங்கறது கஷ்டம்” என்றார். வேகமாக நடக்கத் தொடங்கினேன். கால் வலி எனக்கு மரண பயத்தை தந்தது. மயக்கம் வந்தது.

கொஞ்ச நேரம் கழித்து சீனு அண்ணன், “அதோ பார் இடுக்கு பிள்ளையார் கோவில் தெரியுது. இன்னும் ஐந்து நிமிஷத்துல இறங்கிடலாம்” என்று குரல் தந்தார். உற்சாகமாக மயக்கம் தெளிந்து நடக்க ஆரம்பித்தேன்.

ஒரு வழியாக கீழே இறங்கினோம். அப்போது தான் ஒரு விஷயம் என் நினைவுக்கு வந்தது. இவ்வளவு நேரமாக அண்ணாமலையாரை வேண்டவே இல்லை.

“என்னப்பா, நேத்து மழை பெஞ்சதால இப்படி இருக்கு. இன்னொரு முறை வெயில் காலத்துல போகலாம்” என்றார் சீனு அண்ணன்.

“வேண்டாம் அண்ணா… கஷ்டமோ, நஷ்டமோ இனிமேல் நேர்வழியிலேயே கிரிவலம் போறேன்” என்றேன் அழுத்தமாக.

Share this Story:

Follow Webdunia tamil