மணிரத்னத்துடன் இணைவது எப்போது? - கமல் பேட்டி
மணிரத்னத்துடன் இணைவது எப்போது? - கமல் பேட்டி
Publish Date: Tue, 05 Apr 2016 (11:44 IST)
Updated Date: Tue, 05 Apr 2016 (11:52 IST)
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு, பிரான்சின் திரைப்பட ஆவணக் காப்பாளரான ஹென்றி லாங்லாய்ஸ் பெயரில் அளிக்கப்படும் விருது பாரிஸில் நடைபெற்ற விழாவில் அளிக்கப்பட்டது.
விருது பெற்றுக் கொண்ட கமல், அங்கு அளித்த பேட்டியில் மணிரத்னம், ரஜினி, மருதநாயகம், தனது அடுத்தப் படம் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
இந்த விருதைப் பெற நான் தகுதியானவனா, தெரியாது. ஆனால் இந்த விருது எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கிறது. இந்த நேரம் என்னுடைய குரு அனந்து இல்லாதது வருத்தமிளிக்கிறது. அவர்தான் எனக்கு ஹென்றி லாங்லாய்ஸை அறிமுகப்படுத்தினார்.
மணிரத்னம்
மணிரத்னத்துடன் எப்போது இணைந்து படம் பண்ணப் போகிறேன் என்று கேட்கிறார்கள். நாங்கள் இணையும்போது எதிர்பார்ப்பு அதிகமிருக்கும். அதற்கேற்ற கதை வேண்டும். அவருக்கு நல்ல நடிகர்களும், கதைகளும் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. நானும் அவரைப் போல் டைரக்ஷனில் பிஸியாக இருக்கிறேன். காலம் வரும்போது கண்டிப்பாக நாங்கள் இணைவோம்.
ரஜினி
நானும், ரஜினியும் சேர்ந்து நடிப்பதாக இருந்தால், எங்களுக்கு சம்பளம் கொடுத்தால் பிறகு படம் எடுக்க பணம் இருக்காது. அந்த ஒரு காரணத்துக்காகத்தான் நாங்கள் சேர்ந்து நடிக்க முடியவில்லை. நாங்கள் தனித்தனியாக நடிக்க ஆரம்பித்ததே இந்த ஒரு காரணத்துக்காகத்தான்.
மருதநாயகம்
மருதநாயகத்தை மீண்டும் தொடங்குவதற்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில்கூட இதுபற்றி நிறையபேர் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இத்தனை காலம் பொறுமையாக இருந்துவிட்டேன். இன்னும் கொஞ்ச காலம் நான் பொறுமையாக இருப்பது பெரிய விஷயமில்லை.
அடுத்தப் படம்
என்னுடைய அடுத்தப் படம் த்ரில்லர் பிளஸ் காமெடியாக தயாராகிறது. இதில் முதல்முறையாக என் மகள் ஸ்ருதியுடன் இணைந்து நடிக்கிறேன்.