Publish Date: Sat, 17 Oct 2015 (16:03 IST)
Updated Date: Sat, 17 Oct 2015 (16:11 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படங்களில் முக்கியமானது, மெல்லிசை. ராமின் உதவி இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி படத்தை இயக்கியிருக்கிறார். படம் குறித்து சொல்ல விஜய் சேதுபதியிடம் நிறைய இருக்கிறது.
மெல்லிசை படத்தின் எந்த அம்சம் உங்களை இதில் நடிக்க வைத்தது?
இந்தப் படத்தின் கதையை கேட்ட முக்கால் மணி நேரத்தில் நடிக்கிறதுன்னு முடிவு பண்ணுனேன். ஒரு ஆள் ஒரு பெண் மேல வச்சிருக்கிற அன்போட ஆழத்தை சொல்ற படமா இது எனக்கு பட்டது. இதில் த்ரில்லர் இருந்தாலும், அது கடைசியில் போய் முடிவது ஒரு ஆண் பெண் உறவோடதான். அதுதான் இந்தப் படத்தை நான் செல்க்ட் பண்ண காரணம்.
கதை பிடித்து நடித்தாலும், சில படங்கள் திருப்தியாக அமைவதில்லை. இந்தப் படம் எப்படி?
இதில் எனக்கு சுதந்திரம் இருந்தது. கிளைமாக்ஸ் எடுத்த பிறகு, இரண்டு நாள் கழிச்சு, எனக்கு அது அவ்வளவா பிடிக்கலை. வேற ஒண்ணு ட்ரை பண்ணட்டுமான்னு இயக்குர் ரஞ்சித் ஜெயக்கொடிகிட்ட கேட்டேன். ஒண்ணும் பிரச்சனை இல்ல தலைவா, நீங்க ட்ரை பண்ணுங்கன்னு சொன்னார். இதேமாதிரி பல இடங்களில் எனக்கு திருப்தி இல்லைன்னு திரும்பவும் கேட்டு நடிச்சேன். அதுக்கு டைரக்டர் எல்லாவிதத்திலும் ஒத்துழைப்பு தந்தார். அந்தவகையில் அவருக்கு நான் வாய்ப்பு தரலை, அவர்தான் எனக்கு வாய்ப்பு தந்திருக்கார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்கு அப்புறம் மீண்டும் காயத்ரியுடன் இணைந்து நடித்திருக்கிறீர்கள்...?
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடிக்கிறப்போ, கொஞ்சம் அசந்தா இந்தப் பொண்ணு என்னை தூக்கி சாப்பிட்டிடும்னு டைரக்டர்கிட்ட சொல்வேன். சின்னச் சின்ன இடைவெளியை ரொம்ப அழகா பில்லப் பண்ணுவாங்க.
காயத்ரியை தேர்வு செய்தது யார்?
இந்தப் படத்தை தொடங்கிறப்போ நாலைஞ்சு பேர் பரிசீலனையில் இருந்தாங்க. நான்தான், காயத்ரியையும் ஒரு ஆடிசன் எடுத்துப் பாருங்கன்னு சொன்னேன். ஆடிசன் வச்சபோது டைரக்டருக்கு அவரை பிடிச்சிருந்தது. அப்படித்தான் காயத்ரி இந்தப் படத்துல வந்தாங்க. இந்தப் படத்துக்குப் பிறகு அவங்க பெரிய லெவலுக்கு போவாங்கன்னு நம்பறேன்.
உங்க படங்களில் பல குறிப்பிட்ட ஆடியன்ஸை மட்டும்தான் திருப்திப்படுத்தியிருக்கு. இந்தப் படம் எப்படி?
வாழ்க்கை எப்படியோ அதை பத்துனதுதான் இந்தப் படத்தோட கதை. எல்லோரும் அதை நம்பித்தான் இருக்கிறோம். ஜெயித்தவங்க, தோத்தவங்கன்னு அனைவருக்கும் பிடித்தமான ஒரு எமோஷனை ஆழமாகச் சொல்லக் கூடிய படம் மெல்லிசை. அனைத்துத் தரப்பினருக்கும் இந்தப் படம் கண்டிப்பாகப் பிடிக்கும்.