கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் மீண்டும் நயன்தாராவுடன் நடிப்பேன் - சிம்பு பேட்டி
கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் மீண்டும் நயன்தாராவுடன் நடிப்பேன் - சிம்பு பேட்டி
Publish Date: Thu, 26 May 2016 (12:07 IST)
Updated Date: Thu, 26 May 2016 (12:14 IST)
சிம்பு, நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு வரும் 27 -ஆம் தேதி வெளியாகிறது. அதனை முன்னிட்டு சிம்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இது நம்ம ஆளு எந்த மாதிரி படம்?
விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி ஒரு காதல் படம் இது. வழக்கமான சிம்பு படமாக இருக்காது. இதில், பஞ்ச் வசனங்கள் கிடையாது. வெறும் காதல் மற்றும் சண்டை காட்சிகளை மட்டும் கொண்ட படமாக இருக்காது.
சண்டைக் காட்சி இருக்கிறதா?
சண்டை காட்சி இல்லாமல் நான் நடித்த முதல் படம் இது. திருமணத்துக்கு முந்திய காதலை சொல்லும் படமாக இருக்கும்.
இது நம்ம அளு படத்தின் சிறப்பு என்ன?
திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்ட ஒரு இளைஞருக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை பேசும் படம் இது. இருவருக்கும் இடையே திருமணத்துக்கு முன்பு நடைபெறும் நிகழ்வுகளை சித்தரிக்கும் கதை. இந்த படத்தை பார்க்கும் எல்லா இளைஞர்களும் சிம்பு மாதிரி இருக்க வேண்டும் என்றும், எல்லா பெண்களும் நயன்தாரா மாதிரி இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். இப்படி ஒரு பையன் நமக்கு கணவராக வரவேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். அதுமாதிரி என் கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
நீங்களும், நயன்தாராவும் மீண்டும் ஜோடியாக நடிப்பீர்களா?
எங்கள் இருவருக்கும் பொருத்தமான நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால், மீண்டும் ஜோடியாக நடிப்போம்.
ஒரு பாடல் காட்சியில் நயன்தாரா நடிக்க மறுத்து விட்டதாக பேசப்பட்டதே?
படம் தாமதம் ஆனதால், அந்த பாடல் காட்சியில் அவரால் நடிக்க முடியவில்லை. தனிப்பட்ட முறையில் நயன்தாராவுடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.
படம் தாமதம் ஆனதற்கு யார் காரணம்?
யாரும் காரணம் அல்ல. படம் நன்றாக வந்திருக்கிறது. அந்த வகையில் படக்குழுவினர் அனைவருக்கும் சந்தோஷம்.
உங்களுக்கு வீட்டில் பெண் பார்த்தார்களே...அது என்ன ஆனது?
இந்த கேள்விக்கான பதிலை இறைவன் பார்த்துக் கொள்வார். நம் கையில் ஒன்றுமில்லை. நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்.