நான் கதாநாயகியாக தொடர்வதன் ரகசியம்... - காஜல் அகர்வால் பேட்டி
நான் கதாநாயகியாக தொடர்வதன் ரகசியம்... - காஜல் அகர்வால் பேட்டி
Publish Date: Tue, 09 Feb 2016 (17:21 IST)
Updated Date: Tue, 09 Feb 2016 (17:27 IST)
காஜல் அகர்வாலின் மார்க்கெட் கடந்த வருடம் சரிந்ததைப் போல் தோன்றியது. ஆனால், அது தோற்றம்தான். இந்த வருடம் கை நிறையப் படங்கள். தொடர்ந்து திரையுலகில் தாக்குப் பிடிக்கும் ரகசியத்தை மீடியாவிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ச்சியாக இத்தனை வருடங்கள் திரையுலகில் எப்படி தாக்குப் பிடிக்கிறீர்கள்?
நான் 10 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். எப்படி இவ்வளவு காலம் கதாநாயகியாக நீடிக்கிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். அதனுடைய ரகசியம் கதை தேர்வுதான்.
அதனை கொஞ்சம் விளக்க முடியுமா?
சினிமாவுக்கு வந்த புதிதில் எல்லா படங்களிலும் நடித்தேன். அதன்மூலம் சினிமா பற்றி நல்ல புரிதலும் அனுபவமும் ஏற்பட்டது. அதன்பிறகு தெளிவாகி விட்டேன். இப்போதெல்லாம் நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன்.
நல்ல கதை என்பதை எப்படி ஜட்ஜ் செய்கிறீர்கள்?
டைரக்டர்கள் என்னிடம் கதை சொல்லும் போதே இது ரசிகர்களுக்கு பிடிக்குமா, எனது கதாபாத்திரம் வலுவாக இருக்கிறதா, என்னால் அதில் சிறப்பாக நடிக்க முடியுமா என்றெல்லாம் மனதுக்குள் கற்பனை செய்து பார்ப்பேன். மனது நல்ல கதைதான் ஒப்புக்கொள் என்று சொன்னால் சம்மதித்து விடுவேன்.
விக்ரம் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டதே?
அது வதந்தி. விக்ரமுடன் ஒரு படத்தில் நடிக்கக் கேட்டார்கள். கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். திரு அந்தப் படத்தை இயக்குகிறார்.
ஆனந்த் ஷங்கர் படத்திலிருந்து நீங்கள் விலகியதாக கூறப்படுவது...?
உண்மையில்லை, அது வதந்தி.
விஜய்யின் 60 -வது படத்தில் நீங்கள்தான் நாயகியாமே?
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால் இப்போதைக்கு எதுவும் கூற முடியாது.
இப்போது என்னென்ன படங்களில் நடித்து வருகிறீர்கள்?
தெலுங்கில் பிரமோற்சவம் படத்தில் நடித்து வருகிறேன். இது தவிர இந்தியில் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன். இந்த வருடம் இரண்டு தமிழ்ப் படங்களிலும் நடிக்க உள்ளேன்.
உங்களை இந்த உயரத்தில் வைத்திருப்பது எது என நினைக்கிறீர்கள்?
நல்ல கதைகள் தான் இவ்வளவு உயரத்தில் என்னை உட்கார வைத்து இருக்கிறது.