Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாயா வேலை செய்தது ஈத்தோர், பேயா வேலை செய்தது சிபி, நாயா பேயா வேலை செய்தது என்னுடைய மனைவி - சத்யராஜ் கலகல பேட்டி

Advertiesment
சத்யராஜ்
சத்யராஜ் பேசுகிறார் என்றால் - அது பேட்டியானலும், மேடையானாலும் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. நாளை அவரது தயாரிப்பில் அவரது மகன் சிபி நடித்திருக்கும் நாய்கள் ஜாக்கிரதை படம் வெளியாகிறது. படம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் சத்யராஜ் கூறியவை இங்கே உங்களுக்காக.
 
சிபிக்கு ஏன் இத்தனை பெரிய இடைவெளி? நீங்க அதுபற்றி அவரிடம் பேசியதில்லையா?
 
நான் டெய்லி வீட்டுக்கு போறப்போ சிபி யாரோ ஒருத்தர்கிட்ட கதை கேட்டுகிட்டே இருப்பாப்ல. நான் கேட்பேன், என்னடா டெய்லி கதை கேட்டுகிட்டு இருக்கே, ஆனா படமே நடிக்க மாட்டேன்னு. அது புடிக்கலை இது புடிக்கலைன்னு ஏதாவது சொல்வான். நான் என் அனுபவத்தை வச்சு சொல்வேன். நாங்க அந்த காலத்துல, அந்த காலத்துலன்னு சொல்லக் கூடாது இருந்தாலும் சொல்றேன். ரஜினி சார் நடிக்க வந்த வருஷத்திலேயே நிறைய படம் பண்ணினார். அதே மாதிரி விஜயகாந்த், கமல், பிரபு, நான் எல்லோருமே வருஷத்துக்கு பதினைஞ்சு இருபது படம்னு நடிச்சிருக்கோம். அப்புறம்தான் குறைச்சிகிட்டோம். வர்ற படத்தையெல்லாம் ஒத்துகிட்டு அடிச்சு தள்ளுனோம்னா பதினைஞ்சு படத்துல ரெண்டோ மூணோ ஓடிட்டுப் போகுது, அதுபோதும்னு சொல்வேன். 
webdunia
சிபியின் பதில் அதுக்கு என்னவாக இருந்தது?
 
சிபி சொன்னாப்ல... அதெல்லாம் உங்க காலம். இப்ப அப்படி கிடையாது. ஒரு படம் போச்சுன்னாலே ஆட்டம் குளோஸ். ஓகோ... இவங்க சினிமாவை இந்த மாதிரி ஸ்டடி பண்ணி வச்சிருக்காங்க போலன்னு விட்டுட்டேன். ஒருவகையில் அது உண்மையும்கூட.
 
அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் என்ன வித்தியாசம்னு நினைக்கிறீங்க?
 
பாசமலர் காலத்துல நைன்டி பர்சன்ட் கதை பத்து பர்சன்ட் டெக்னிக். நாங்க ஹீரோவா நடிச்ச காலத்துல அம்பது பர்சன்ட் கதை, அம்பது பர்சன்ட் டெக்னிக். இன்னைக்கு இருபத்தைஞ்சு பர்சன்ட் கதை எழுபத்தைஞ்சு பர்சன்ட் டெக்னிக் வேல்யூ. கதையை எப்படி சொல்றாங்கங்கிறது முக்கியமான விஷயம். 
webdunia
ஏதாவது உதாரணம்...?
 
மிகப்பெரிய உதாரணம் ராஜா ராணி. அட்லி எங்கிட்ட வந்து கதை சொல்றப்ப, ஒண்ணும் பெரிய விஷயமா படலையேன்னு நினைச்சுகிட்டு நடிச்சேன். பட், மேக்கிங்ல அதை அசித்தியிருப்பாங்க. படம் சூப்பர் டூப்பர் ஹிட். ஃபிலிம்பேர்ல எனக்கு பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் அவார்ட் வேற கிடைச்சது. 
 
இந்தப் படத்தை இயக்கியிருக்கிற சக்தி சரவணன்...?
 
சக்தியோட முதல் படம் நாணயம். அந்த கதையை சக்தி என்கிட்ட சொன்னார். ஒரு பேங்க் கொள்ளை. சரி ஏதோ இங்கிலீஷ் படத்தைப் பார்த்து சொல்றார் போல இருக்குன்னு நினைச்சேன். பேங்க் கொள்ளையை எல்லாம் எங்கய்யா எடுக்கப் போறாங்கன்னு பார்த்தா நாணயத்தை அவ்வளவு ஸ்டைலிஷா எடுத்திட்டார். சோ, கதை இல்லை, அதை எப்படி பிரமாதமா எடுக்கப் போறாங்கங்கிறதுதான் முக்கியம். இந்த கதையை (நாய்கள் ஜாக்கிரதை) சக்தி பிரமாதமா எடுப்பார்ங்கிற நம்பிக்கை இருந்திச்சி. 
 
படம் தயாரிப்பதில் என்ன பிரச்சனை, பணமா?
 
பணப்பிரச்சனையில்லை. நாமதான் ஊர் ஊரா தெருத்தெருவா நடிச்சிட்டிருக்கோமே. பணம் பிரச்சனையில்லை. ரிலீஸ் செய்றதுதான் பிரச்சனை. முன்னாடி ரஜினி, கமல், நான், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் யார் நடிச்ச படமா இருந்தாலும் ஒரு தியேடர்லதான் ரிலீசாகும். கோயம்புத்தூர்னா ஒரு தியேட்டர், ஈரோடுன்னா ஒரு தியேட்டார். ஆனா இன்னைக்கு பெரிய பட்ஜெட் படம் இருக்கிற எல்லா தியேட்டர்லயும் ரிலீஸ் ஆகுது. அப்போ சின்ன பட்ஜெட் படங்களை எப்படி வெளியிடுறது?
 
படத்தை வாங்கியிருக்கிற காஸ்டோ வில்லேஜ் பற்றி...?
 
இன்னைக்கு தமிழ்நாட்ல இருக்கிற மிகமிகப் பெரிய டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்ல ஒருத்தர் காஸ்மோ வில்லேஜ். இந்தப் படம் பெரிய வியாபாரம் உள்ள நடிகரோ, பெரிய வியாபரத்தில் இருக்கும் இயக்குனரோ சேர்ந்து எடுத்த படம் இல்லை, அப்படியே கண்ணை மூடிகிட்டு வாங்குறதுக்கு. படத்தை பார்த்துதான் வாங்குவாங்க. பார்த்து அவ்வளவு பிடிச்சுப் போய் தமிழ்நாடு முழுக்க 21 -ஆம் தேதி அவங்கதான் வெளியிடுறாங்க. 
 
டபுள் பாஸிடிவ் பார்த்த போது மனதில் என்ன தோன்றியது?
 
டபுள் பாஸிடிவ் பார்த்தப்போ, எனக்கு உண்மையிலேயே நூறாவது நாள் டபுள் பாஸிடிவ் பார்த்தப்போ ஏற்பட்ட ஃபீலிங்ஸ்தான். நூறாவது நாள் பிரமாதமா வந்திருந்தது. பட், அதை இன்னும் பிரமாதப்படுத்தியது இசைஞானி இளையராஜாவோட பேக்ரவுண்ட் ஸ்கோர். அதே மாதிரி இதில் தரண். படத்தை எங்கேயோ கொண்டு போயிட்டார்.
 
உங்க மனைவியும் கடுமையா உழைச்சதா நடிகர் பாலாஜி கூறியிருக்கிறாரே...?
 
என்னுடைய மனைவி இந்தப் படத்துல ரொம்ப உழைப்பு. எனக்கு சிரிப்பு வர்ற அளவுக்கு கடுமையான உழைப்பு. ரொம்ப ஓவர் பாசம் பையன் மேல. இந்தப் படத்துல நாயா வேலை செய்தது ஈத்தோர் (படத்தில் நடித்திருக்கும் நாய்) பேயா வேலை செய்தது சிபி நாயா பேயா வேலை செய்தது என்னுடைய மனைவி.

Share this Story:

Follow Webdunia tamil