Publish Date: Thu, 02 Oct 2014 (13:23 IST)
Updated Date: Thu, 02 Oct 2014 (13:33 IST)
நான்கு வருடங்களுக்குப் பிறகு சரத்குமார் தனி ஹீரோவாக நடித்துவரும் படம் சண்டமாருதம். மலையாளப்பட தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் பிரேம் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன், ராதிகா சரத்குமார், சரத்குமார் இணைந்து தயாரித்துவரும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கும்பகோணத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன.
படப்பிடிப்பின் இடைவேளையின் போது படத்தின் நாயகன் சரத்குமார், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், நாயகி ஓவியா ஆகியோர் பேட்டிளித்தனர்.
சரத்குமார்
படம் பற்றி சொல்லுங்க...?
சண்டமாருதத்தில் கதாநாயகன், வில்லன் என இரட்டை கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். கதாநாயகிகளாக மீரா நந்தன், ஓவியா ஆகியோர் நடிக்கின்றனர்.
இது நான் நடிக்கும் 136 -வது படம். என்னுடைய மகாபிரபு, சாணக்கியா, ஏய் உள்பட பல படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் படத்தை இயக்கி வருகிறார்.
எந்தெந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறீர்கள்?
சென்னை, மதுரை, புதுச்சேரி, பெங்களூரு, பொள்ளாச்சி உள்பட பல பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். இப்போது இங்கே கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடத்திகிட்டிருக்கோம்.
ஏன் கும்பகோணம்...?
கும்பகோணம் படத்தின் கதைக்களம் என்பதால் கும்பகோணத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தி வருகிறேnம்.
வேறு யார் யார் நடிக்கிறார்கள்?
அருண்சாகர், ராதாரவி, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி, வின்சென்ட் அசோகன், கானா உலகநாதன், வெண்ணிற ஆடை மூர்த்தி, டெல்லி கணேஷ், நளினி, சந்தானபாரதின்னு நிறைய பேர் நடிக்கிறாங்க. என் அண்ணன் சுதர்சனின் மகன் ராம்குமார் முதல்முறையாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். நட்புக்காக சமுத்திரகனியும் நடிக்கிறார்.
படத்தின் விசேஷம்...?
இந்தப் படத்தின் கதையை நானே எழுதியிருக்கேன். ஒரு பாடலும் இதில் பாடியிருக்கேன்.
ஓவியா
இதுவரை இளம் நடிகர்களுடன் நடித்து வந்த நீங்க முதல்முறையாக சீனியர் நடிகர் சரத்குமாருடன் நடிப்பது எப்படி இருக்கிறது?
சரத்குமார் சினிமாவில் நிறைய அனுபவம் வாய்ந்தவர். அவருடன் நடிக்கப் போகிறேnம் என்றதும் கொஞ்சம் பயமாகதான் இருந்தது. ஆனால், அவர் சகஜமாக எல்லோரிடமும் பழகுவதால் ரொம்ப மகிழ்ச்சியுடன் நடித்து வருகிறேன்.
உங்களுக்குப் பிடித்த நடிகை...? நயன்தாரா.
பிடித்த இயக்குனர்...? ஷங்கர் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்கிறீர்களே...? கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை. கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிக்கலாம்.
ஏ.வெங்கடேஷ்
படத்தைப் பற்றி சொல்லுங்க...?
சண்டமாருதம் எனக்கு 23 -வது படம். க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார் முதல்முறையாக இந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார். கூடுதல் திரைக்கதை வசனத்தை நான் எழுதியிருக்கேன்.
படத்துக்கு இசை...? ஜேம்ஸ் வசந்தன்.
ஆக்ஷன் படமா...? ஆக்ஷன் பிரதானமாக இருக்கும். ஆறு சண்டைக் காட்சிகள் படத்தில் இருக்கு. நான்கு பாடல்கள். படத்தில் நானும் நடித்திருக்கிறேன்.
படம் எப்போது வெளிவருகிறது...? நவம்பர்.