Publish Date: Wed, 17 Dec 2014 (09:24 IST)
Updated Date: Wed, 17 Dec 2014 (09:29 IST)
என் வழி தனி வழி படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் புதுமையான முறையில் மொபைல் ஆப் பில் வெளியிட்டனர். இந்த முறையில் இந்தியாவிலேயே முதல் முயற்சி என் வழி தனி வழி படம்தான். இது குறித்து பேட்டியளித்த படத்தின் நாயகன் ஆர்கே பேசியது இங்கே உங்களுக்காக.
இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து சொல்லுங்கள்?
இந்த ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டை வேறு மாதிரி புதிய வழியில் செய்ய ஆசைப்பட்டேன்.வருங்காலம் இனி தொழில்நுட்பத்தின் கையில்தான். வருங்காலம் இனி மீடியா கையில்தான். எனவேதான் இம் முயற்சியை செய்துள்ளோம்.இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் போன்றவற்றை ரசிகர்கள் எவரும் இருந்த இடத்திலிருந்து பார்க்கும் கேட்கும் வகையில் புது தொழில்நுட்பத்தில் வெளியிட்டுள்ளோம். இதன்படி படத்தின் விளம்பரத்தையோ,போஸ்டரையோ மொபைல் போனில் க்ளிக் செய்தால் போதும் பாடல்களைக் கேட்கலாம். ட்ரெய்லரைப் பார்க்கலாம்.
இனி யாருடைய விவரம் தேவை என்றாலும் அவர் முகத்தை மொபைலில் ஒரு போட்டோ எடுத்தால் போதும். ஒரு புகைப்படத்தை வைத்தே எல்லாவிவரமும் கிடைக்கும். இதுதான் லேட்டஸ்ட் தொழில்நுட்பம்.
இந்த ஆடியோ வெளியீட்டை விமானத்தில் பறந்தபடியே வெளியிட எண்ணினேன். ஆனால் அதையும் தாண்டி இதைக் கொண்டு சேர்க்கும் மீடியா முன் அறிமுகம் செய்யவே இங்கு வருவதாக முடிவு செய்தேன்.
படத்தைப் பற்றி சொல்லுங்கள்?
என் வழி தனி வழி ஒரு போலீஸ் அதிகாரி பற்றிய விறுவிறு கதை.
படம் எப்போது ரிலீஸ்?
படம் ஜனவரி 23 -இல் வெளியாகிறது.
நடனம் எல்லாம் ஆடியிருக்கிறீர்களாமே?
படத்தில் பாடல்களுக்கு எனக்கு ஆட வரவில்லைதான். சுமாராக ஆடியுள்ளேன். ஆட ஆட வருமென்று நம்புகிறேன்.
படம் தயாரிக்கும் எண்ணம் உள்ளதா?
2015 -இல் மூன்று படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இதே படக்குழுவைக் கொண்டுஅடுத்து, வைகை எக்ஸ்பிரஸ் என்கிற படம் எடுக்க இருக்கிறோம். பிப்ரவரியில் படப்பிடிப்புக்குச் செல்கிறோம்.
படத்தில் உங்களைத் தவிர யார் யார் நடித்திருக்கிறார்கள்?
பூனம்கவுர், மீனாட்சி திட்சித், ராதாரவி, 'ஆஹா' ராஜீவ் கிருஷ்ணா, ஆசிஷ் வித்யார்த்தி, ரோஜா, சீதா, தலைவாசல் விஜய், அஜய்ரத்னம், இளவரசு, கராத்தே ராஜா, பொன்னம்பலம் என நடிகர் சங்கமே சேர்ந்தது போல் பலர் நடித்துள்ளனர்.
என் வழி தனி வழி எப்படி வந்துள்ளது?
எங்கள் முந்தைய எல்லாம் அவன் செயல் படத்தைப் போல பத்து மடங்கு நன்றாக இருக்கும்.