Publish Date: Wed, 27 Apr 2016 (10:11 IST)
Updated Date: Wed, 27 Apr 2016 (10:17 IST)
தென்னிந்திய சினிமாவில் நாயகர்களுக்கு இணையாகப் பார்க்கப்படும், மதிக்கப்படும் ஒரே நடிகை அனுஷ்கா.
பாகுபலி இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய இந்தியாவே ஆவலாக உள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தில் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
வெற்றி, தோல்வி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ரசிகர்கள் அளிக்கும் ஆதரவை வைத்தே வெற்றி தோல்வியை கணிக்கிறார்கள். ரசிகர்கள் ஏராளமாக தியேட்டர்களுக்கு வந்து படத்தை பார்த்து வசூலும் அதிகமாக இருந்தால் அதை வெற்றிப்படமாக கருதுகிறார்கள். வசூல் இல்லை என்றால் தோல்விப்படம் என்கிறார்கள்.
நீங்கள் வெற்றி, தோல்வியை எப்படி பார்க்கிறீர்கள்?
என்னைப் பொருத்தவரை நான் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுமா தோல்வி அடையுமா என்பதை அந்த படம் வெளியாகும் முன்பே கணித்து விடுவேன்.
கதையை கேட்கும்போதே படத்தின் தரத்தை தெரிந்து கொள்வேன். படம் ஓடுமா ஓடாதா என்பது அப்போதே எனக்கு புரிந்து விடும். ஓடக்கூடிய நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்து எடுத்து நடிப்பேன்.
அதாவது கதையை தேர்வு செய்யும் போதே படத்தின் வெற்றி தோல்வி உங்களுக்கு தெரிந்துவிடும் என்கிறீர்கள்...?
ஆமாம். நான் நடிக்கும் படம் தயாராகும் போதே வெற்றி பெறும் என்பது எனக்கு தெரிந்து விடும். படம் வெளிவந்த பிறகு 95 சதவீதம் நான் நினைத்தது போலத்தான் நடந்து இருக்கிறது.
படம் வெற்றிபெற நடிகர்கள் என்ன செய்ய வேண்டும்?
படத்தில் நடிக்கும்போதே இந்த படம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையுடன் நடிக்க வேண்டும். அப்போதுதான் மனது உற்சாகமாக இருக்கும்.
நடிகர்கள் செய்யக் கூடாதது எது?
பணம் வருகிறது என்பதற்காக மோசமான கதைகளில் நடிக்க கூடாது. எனக்கு இதுவரை நல்ல கதையம்சம் உள்ள படங்களாகவே அமைந்துள்ளன.
உங்களுடைய கதைத்தேர்வு எந்த மாதிரி இருந்திருக்கிறது?
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத்தான் நடித்து இருக்கிறேன். என்னை மனதில் வைத்து கதைகளை எழுதுகிறார்கள். அருந்ததி, பாகுபலி, ருத்ரமா தேவி ஆகியவை எனக்கு முக்கிய படங்களாக அமைந்தன.
பாகுபலி 2, எஸ் 3 படங்கள்...?
பாகுபலி இரண்டாம் பாகம் படமும், சிங்கம்-3 படமும் என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களாகவே உள்ளன. பாக்மதி என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்.