Publish Date: Wed, 30 Dec 2015 (08:42 IST)
Updated Date: Wed, 30 Dec 2015 (10:04 IST)
மலேசியாவில் நடந்த தற்காப்பு ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நமீதாவின் பேச்சுதான் ஹைலைட்.
பெண்கள் பிரச்சனையை பேசியதில் நமீதா ஒரு பெண்ணியவாதி என்றால், மலேசிய தொழிலதிபர்களை படம் தயாரிக்க அழைத்ததில் ஒரு தேர்ந்த அரசியல்வாதியை பார்க்க முடிந்தது. அவரது பேச்சு இங்கே உங்களுக்காக.
தற்காப்பு குறித்த நமீதாவின் பார்வை என்ன? அவரது வாழ்க்கையில் தற்காப்பை எப்படி கடைபிடித்து வந்துள்ளார்?
தற்காப்பு என்பது தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வது. தற்காப்பு ஆண்களை விட பெண்களுக்கு இன்றைய சூழலில் மிக அவசியம். நான் மாடலிங்கில் நுழையும்போது ‘நீங்க பெரிய பிசினஸ்மேனோட பொண்ணு. ஏன்மா இந்த ஃபீல்டுக்குள்ள வர்றே’ என்ற ரீதியில் கேள்விகள் வந்தன.
அவர்களுக்கு நான் சொன்ன பதில் ‘நமீதா என்பது என்னுடைய பெயர். அந்த பெயர் தெரிவதற்காக நான் ஏதாவது செய்ய வேண்டும். என்னதான் அப்பாவாக இருந்தாலும் அவர் வேறு நான் வேறு தான்’.
இப்படி விட்டுக்கொடுக்காமல் போராடியதால்தான் மிஸ்.யுனிவர்ஸில் மூன்றாவது இடம் அளவுக்கு முன்னேற முடிந்தது. இதுபோல இன்றைய பெண்கள் தங்கள் பெயர் தனித்து தெரிய வேண்டும் என்று தங்களுக்கு பிடித்த துறையில் சாதிக்க முயல வேண்டும்.
பெண்கள் எல்லா பருவத்திலும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
நமீதா அப்படி எதிர்கொண்ட பிரச்சனைகளும், அவற்றிலிருந்து தன்னை
தற்காத்துக் கொண்டதும் எப்படி?
என்னுடைய சிறு வயதில் பேருந்துகளில் பயணிக்கும்போது என்னிடம் கூட சில ஆண்கள் தவறாக நடக்க முயற்சிப்பார்கள். அவர்களை விரட்ட நான் பயன்படுத்திய ஆயுதம் சேஃப்டி பின். அது எப்போதுமே என்னுடன் இருக்கும்.
பெண்களின் வயது ஏறும்போது பிரச்சனைகளும் அதிகரிக்கும். சேஃப்டி பின்
போதாது. அதில் நமீதாவின் அனுபவம் எப்படி?
நான் கொஞ்சம் வளர்ந்த உடன் பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்த ஆரம்பித்தேன். சேஃப்டி பின், பெப்பர் ஸ்ப்ரே இரண்டுமே பெண்கள் அவசியம் கையில் வைத்துக் கொள்ள வேண்டியவை. நமக்கான தற்காப்பு ஆயுதங்கள் அவை.
மலேசியாவில் அதிக தமிழர்கள் பெரும் தொழிலதிபர்களாக இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நமீதா வைத்த கோரிக்கை என்ன?
மலேசியாவைச் சேர்ந்த தொழிபதிபர்களுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.
எங்கள் தமிழ்நாட்டில் நிறைய திறமையான இளைஞர்கள் நல்ல நல்ல படங்களை எடுக்கத் தொடங்கியுள்ளனர். சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் தரும் சின்னச் சின்ன படங்கள் வெளிவரத் துவங்கி தமிழ் சினிமாவுக்கே ஆரோக்கியமான சூழல் உருவாகி இருக்கிறது.
சினிமாவில் பல்வேறு சம்பவங்கள் நமீதாவை ஆச்சர்யப்பட வைத்துள்ளன.
சமீபத்தில் அவரை பெருமையடைச் செய்கிற மாதிரி ஏதாவது நடந்ததா?
ஒரு சின்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு தயாரிப்பாளரிடம் ஒருவர், நீங்கள் ஏன் படம் எடுக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர், எத்தனை பணம் இருந்தாலும் அதனால் என்ன பயன். ஒரு படம் எடுத்து அதன் டைட்டிலில் ஒரு ஓரமாக என் பெயர் வந்தால் கூட இந்த சினிமா இருக்கும்வரை என் பெயர் நீடித்து இருக்கும்.
இதற்காக எவ்வளவு இழந்தாலும் பரவாயில்லை என்றிருக்கிறார். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
2015 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை அறிய கீழே கிளிக் செய்யவும்: