கபாலி வாய்ப்பு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை - ராதிகா ஆப்தே பேட்டி
கபாலி வாய்ப்பு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை - ராதிகா ஆப்தே பேட்டி
Publish Date: Sat, 23 Jul 2016 (15:01 IST)
Updated Date: Sat, 23 Jul 2016 (15:12 IST)
கபாலி வெளியாகி தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கபாலியில் வாய்ப்பு கிடைத்தது பற்றியும், ரஜினியுடன் நடித்த அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார் ராதிகா ஆப்தே.
இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தீர்களா?
நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. அவருடன் ஜோடி சேரும் வாய்ப்பு கபாலி படத்தின் மூலம் கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. வாழ்க்கையில் ஒரு தடவைதான் இதுபோன்ற நல்ல விஷயங்கள் நடக்கும்.
இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது? இயக்குனர் ரஞ்சித்துக்கு உங்களை யாரேனும் பரிந்துரை செய்தார்களா?
ரஜினியுடன் நடிக்க நிறைய கதாநாயகிகள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் டைரக்டர் ரஞ்சித் ஏஜெண்டுகள், இடைத்தரகர்கள் உதவி இல்லாமல் நேரடியாகவே போனில் என்னிடம் பேசி சென்னைக்கு அழைத்து கதை சொன்னார்.
ரஜினியை முதல் முதலில் சந்தித்தது நினைவிருக்கிறதா?
நினைவிருக்கிறது. படப்பிடிப்புக்காக முதல் நாள் நடந்த போட்டோஷூட்டுக்கு நான் சென்றபோது கேரவனுக்கு வெளியே எனக்காக காத்திருந்து வரவேற்றார். எந்த நடிகர் இப்படி செய்வார்?
அப்போது என்ன உணர்ந்தீர்கள்?
அந்த சம்பவம் எனக்கு நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. முதலில் அவரிடம் மராத்தி மொழியில் பேசினேன். பிறகு இந்தி, ஆங்கிலத்தில் உரையாடினோம். ரஜினிகாந்த் என்னை மிகவும் கவர்ந்து விட்டார்.
அவரிடம் பார்த்து நீங்கள் வியந்தது?
படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் தொழில் மீது அவர் காட்டிய அக்கறையை பார்த்து வியந்தேன்.
படம் வெளியான நிலையில் எப்படி உணர்கிறீர்கள்?
படத்தில் தாதா ரஜினியின் மனைவியாகவும், தன்ஷிகாவின் தாயாகவும் நடித்திருக்கிறேன். இளம் பெண்ணாகவும், வயதான தோற்றத்திலும் நடித்திருக்கிறேன். எனக்கு மிக நிறைவாக உள்ளது.