இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் போகிறேன் - ராதிகா பேட்டி
இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் போகிறேன் - ராதிகா பேட்டி
Publish Date: Sat, 27 Feb 2016 (14:50 IST)
Updated Date: Sat, 27 Feb 2016 (14:54 IST)
இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும்விதமாக குறும்பட விழாவை நடத்தயிருக்கிறார் ராதிகா. இது குறித்து சென்னையில் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
என்ன திடீர் என்று குறும்படம் பக்கம்...?
சினிமாவில் இருந்து டெலிவிஷனில் நடிக்க சென்றேன். டி.வி. தொடர்கள் தயாரித்தேன். அதன் தொடர்ச்சியாக தற்போது குறும்பட விழா நடத்தி இளைஞர்கள் படைப்பாற்றலை ஊக்குவிக்க முடிவு செய்து இருக்கிறேன்.
இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்?
இளைஞர்கள் விதம்விதமாக நிறைய கதைகள் வைத்து இருக்கிறார்கள். பிரபலமான டைரக்டர்களிடம் பணியாற்றாமலேயே அற்புதமான குறும்படங்கள் இயக்கி யூ டியூப்களில் வெளியிட்டு வருகின்றனர். அவர்களுக்கு சினிமாவில் டைரக்டராக அறிமுகமாவதே குறிக்கோளாக இருக்கிறது. அப்படிப்பட்ட இளைஞர்கள் கனவை நனவாக்கவே ராடான் நிறுவன துணைத்தலைவர் ரேயான் ஏற்பாட்டில் குறும்பட விழா நடத்தப்படுகிறது.
இதில் எத்தனை குறும்படங்கள் பங்கேற்கின்றன?
இந்த குறும்பட விழாவுக்கு இந்திய மற்றும் சர்வதேச அளவில் 200 குறும்பட இயக்குனர்கள் தங்களது படைப்புகளை அனுப்பி இருக்கிறார்கள். இதில் முதல்கட்டமாக 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டு யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. அவற்றில் இருந்து நடிகர் சரத்குமார், டைரக்டர் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறந்த 10 படங்களை தேர்வு செய்தனர். அதிலிருந்து ஏழு படங்கள் மட்டும் இறுதியாக தேர்வு செய்யப்பட்டது.
அதனை தேர்வு செய்தவர்கள் யார்?
கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன், எடிட்டர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் ஆகியோர்.
தேர்வு செய்யப்பட்ட குறும்படங்கள் எவை?
பாதை, முற்பகல் செய்யாவிடில், ஹைக்கூ, கொக்கரிக்கும் காதல், மனம், நிஷிதி, ஓடம் ஆகியன.
இந்த குறும்படங்களை திரையிடும் நோக்கம் உள்ளதா?
அடுத்த மாதம் (மார்ச்) 9-ந்தேதி சென்னை சத்யம் தியேட்டரில் திரையிடப்பட உள்ளன. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.