வைரமுத்து பாராட்டியதை பாக்கியமாக கருதுகிறேன் - ப்ரியங்கா பேட்டி
வைரமுத்து பாராட்டியதை பாக்கியமாக கருதுகிறேன் - ப்ரியங்கா பேட்டி
Publish Date: Wed, 16 Mar 2016 (12:48 IST)
Updated Date: Wed, 16 Mar 2016 (13:27 IST)
கங்காருவில் பாசமிக்க தங்கச்சி... வந்தா மலயில் ரகளையான வட சென்னைப் பெண்.
இப்போது கோடை மழையில் அம்சமான கிராமத்து அழகி.
நெல்லைச் சீமையின் மண்வாசனை நாயகியாக அச்சு அசலாகப் பொருந்திவிட்டார் என குவிகின்றன பாராட்டுகள்.
நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தாலும், இன்னும் பெரிய ப்ரேக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது ப்ரியங்காவுக்கு. அது கோடை மழை படம் மூலம் தணிந்திருக்கிறது.
பிரபுதேவாவின் உதவியாளர் கதிரவன் இயக்கியிருந்த இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ஆரம்பத்தில் படம் குறித்து எந்த பரபரப்பும் இல்லை. இப்போது மெல்ல மெல்ல படம் குறித்த 'டாக்' நல்லவிதமாகப் பரவ, சந்தோஷத்தில் இருக்கிறார் ப்ரியங்கா.
கோடை மழை பட அனுபவங்கள் குறித்துக் கேட்டபோது,"ஹைய்யோ... சொல்ல நிறைய இருக்குங்க" என மலர்ந்தார். "ஒரு உதவி இயக்குநர் மூலமாகத்தான் எனக்கு இந்தப்
பட வாய்ப்பு வந்தது. கதை கேட்டதுமே, இது எனக்கு சரியான படமாக அமையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது" என்றார்.
இப்போதெல்லாம் பெரிய நடிகர்களே கதைத் தேர்வில் கோட்டை விடுகிறார்கள். உங்களால் சரியாக கதையைத் தேர்வு செய்ய முடிகிறதா?
"நிச்சயமாக. மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் நடித்த மூன்று படங்களிலுமே என் பாத்திரம் மக்களால் பேசப்பட்டது. மூன்று படங்களுமே நல்ல கதைதான். எனவே கதை கேட்டு, சரியான பாத்திரத்தைத் தேர்வு செய்வதில் இதுவரை நான் கோட்டை விட்டதில்லை."
கோடைமழை பற்றி சொல்லுங்கள்...?
"கோடை மழை கிராமப் பின்னணியில் உருவான படம். எனக்கு நல்ல வேடம். பொதுவாக
கிராமத்துப் பெண் வேடம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். இந்தப் படத்தில் இயக்குநர் சொன்னதை நான் செய்தேன். ஷூட்டிங்கில் நிறைய காட்சிகளை வித்தியாசமான கோணத்தில் படமாக்கிக் கொண்டே இருப்பார் கதிரவன்."
மேலும் அடுத்த பக்கம் பார்க்க......
வைரமுத்துவின் பாடல்கள் அதிகம் பேசப்படுகிறதே...?
"இந்தப் படத்தில் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு நான் நடித்தது மறக்க முடியாதது. என் முதல் படம் கங்காருவிலும் அவர்தான் பாடல்கள் எழுதினார். இப்போது மூன்றாவது படத்துக்கும் அவர்தான் எழுதியிருக்கிறார். என்னை மாதிரி வளரும் நடிகைக்கு இதை விட வேறு என்ன வேண்டும்? கோடை மழையைப் பார்த்த கவிஞர் வைரமுத்து, சிறப்பாக உணர்ந்து நடித்திருக்கிறாய் என்று என்னைப் பாராட்டினார். அது என் பாக்கியமாகக் கருதுகிறேன்."
ரொம்ப அழகா சிரிக்கிறீங்க? இந்த சிரிப்பில் கவிழ்ந்தவர்கள் எத்தனைப் பேரோ?
"என்னுடைய சிரிப்பை நிறையப் பேர் பாராட்டியது உண்மைதான். ஆனால் கவிழ்ந்தவர்கள்
லிஸ்டெல்லாம் என்னிடம் இல்லை."
இந்த மாதிரி வேடங்களில்தான் நடிக்க வேண்டும் என்ற பிடிவாதம் ஏதாவது உள்ளதா?
"அதெல்லாம் ஒன்றுமில்லை. இன்றைக்கு வருகிற காமெடி, காதல் குறிப்பாக நானும்
ரவுடிதான் மாதிரியான படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். கதை, பாத்திரத்தின் முக்கியத்துவம்... இரண்டும் பிடித்திருந்தால் போதும். நடிக்கத் தடை இல்லை."
அடுத்து நடிக்கவிருக்கும் படங்கள்?
"கோடை மழை மாதிரி நல்ல கேரக்டர்கள் அமைய வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன். இப்போதைக்கு சாரல், ரீங்காரம் படங்களில் நடித்து வருகிறேன். திருப்பதி லட்டு என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறேன்."