படப்பிடிப்பில் நடிப்பைத் தவிர வேறு சிந்தனை இருக்காது - கீர்த்தி சுரேஷ் பேட்டி
படப்பிடிப்பில் நடிப்பைத் தவிர வேறு சிந்தனை இருக்காது - கீர்த்தி சுரேஷ் பேட்டி
Publish Date: Tue, 18 Oct 2016 (09:31 IST)
Updated Date: Tue, 18 Oct 2016 (09:34 IST)
குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்து, அதிவிரைவில் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியானவர் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் ஒருவரே. இத்தனைக்கும் கிசுகிசு எதிலும் அவர் மாட்டிக் கொண்டதில்லை. எப்படி வதந்திகளுக்கு சிக்காமல் இவரால் திரையுலகில் வளர முடிந்தது? கீர்த்தி சுரேஷே அதற்கான விளக்கத்தை சொல்கிறார்.
எப்படி கிசுகிசுக்களிலிருந்து தப்பிக்கிறீர்கள்?
வளர்ந்து வரும் நடிகைகள் கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்வது சகஜம் ஆகிவிட்டது. இதுபோன்று ஆகிவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.
எப்படி? விளக்க முடியுமா?
என்னுடன் நடிக்கும் அனைவரிடமும் உண்மையான நட்பு வளர்க்கிறேன். சகஜமாக பழகி வருகிறேன். அதனால் அவர்களும் என்னிடம் நல்ல நட்புடன் பழகுகிறார்கள். அனைவரிடமும் ஒரே மாதிரி பழகுவதால் என்னைப்பற்றி தவறான செய்திகள் வருவதில்லை.
இது மட்டும்தானா?
எல்லாவற்றுக்கும் மேலாக நான் யாரிடமும் வெட்டியாக அரட்டை அடிப்பதில்லை. என் வேலையில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். மறுநாள் நடிக்க வேண்டிய காட்சிகளை முதல் நாளே கேட்டறிந்து ஒத்திகை பார்த்து விட்டு வருகிறேன். எனவே, படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நடிப்பை தவிர வேறு சிந்தனை எதுவும் கிடையாது. நடிப்பை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பேன். இது படப்பிடிப்பு தளத்துக்கு வரும் அனைவருக்கும் தெரியும். எனவே என்னைப்பற்றி கிசுகிசுக்கள் வருவதில்லை. இனியும் வராமல் பார்த்துக்கொள்வேன்.
விஜய்யுடன் நடித்துவிட்டீர்கள். அடுத்து...?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கயிருக்கிறேன். பாம்புசட்டை படம் முடிந்துவிட்டது. விரைவில் திரைக்கு வரும் என்று நினைக்கிறேன்.
தெலுங்கில் நடிக்கிறீர்களா?
ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன்.
மகேஷ்பாபு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறதே...?
அப்படி ஒரு வதந்தி நிலவுவதை நானும் கேள்விப்பட்டேன். ஆனால், அதுபற்றி இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை.
ரெமோ படம்...?
தமிழகத்தில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படம் நன்றாகப் போவதாக சொல்கிறார்கள். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.