இதுவரை யாரையும் காதலித்தது இல்லை - ஹன்சிகா பேட்டி
இதுவரை யாரையும் காதலித்தது இல்லை - ஹன்சிகா பேட்டி
Publish Date: Thu, 31 Mar 2016 (10:51 IST)
Updated Date: Thu, 31 Mar 2016 (11:04 IST)
முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் ஹன்சிகா அறிமுக நடிகருடன் நடித்துள்ள படம், உயிரே உயிரே. இந்தப் படம் திரைக்கு வருவதையொட்டி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
புதுமுகத்துடன் நடித்திருக்கிறீர்களே...?
என்னுடன் நடிப்பது பெரிய ஹீரோவா, சிறிய ஹீரோவா, வளரும் ஹீரோவா இல்லை புதுமுகமாக என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. கதை எப்படி இருக்கிறது என்றுதான் பார்ப்பேன். உயிரே உயிரே படத்தின் கதை பிடித்திருந்ததால் நடித்தேன்.
படங்களின் வெற்றி தோல்விகளை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
நடிக்கிற அனைத்துப் படங்களும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். அதற்குத்தான் கடினமாக உழைக்கிறேன்.
படங்கள் வெற்றி பெறும் போது மகிழ்ச்சியடைவேன். தோல்வியடைந்தால் வருத்தப்படுவேன். தோல்வியடைந்தால் மனம் கடுமையாக பாதிக்கப்படும். நானும் பெண்தானே.
வெற்றி படத்தில் நடிப்பதற்காக என்ன செய்கிறீர்கள்...?
நான் படத்தின் கதை கேட்டு ஒப்புக் கொள்வதே, அது வெற்றி பெறுமா என்ற நோக்கத்தில்தான். வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்தான் கதைகள் கேட்கிறேன். சில நேரங்களில் நமது நம்பிக்கைக்கு மாறாக அமைந்து விடுகிறது.
சிம்பு படத்தில் ஒரு பாடலுக்கு ஆட கேட்டு நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்கிறார்களே...?
எப்படி இந்த மாதிரி செய்திகள் எல்லாம் வருகிறதோ? சிம்பு படத்தில் நடிக்கக் கேட்டு என்னை யாரும் அணுகவில்லை.
அப்படியிருக்கையில் எப்படி மறுக்க முடியும்? எல்லாமே பொய்யான தகவல்.
காதல்...?
என்னுடைய முழுக்கவனமும் சினிமாவில்தான் உள்ளது. அதில்தான் கவனம் செலுத்துகிறேன். காதல் குறித்து யோசிக்க நேரமில்லை. இதுவரை யாரையும் நான் காதலிக்கவும் இல்லை.
அனாதை குழந்தைகளை தொடர்ச்சியாக தத்தெடுத்து வருகிறீர்களே...?
அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். அதைப்பற்றி மீடியாவில் அதிகம் பேச நான் விரும்பவில்லை. நான் செய்யும் சமூக சேவைகளுக்கு என்னுடைய அம்மாதான் காரணம். நான் தத்தெடுத்த குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட வீடு ஒன்றை கட்டும் முயற்சியில் இருக்கிறேன்.
தமிழ், தெலுங்கு என்ன வித்தியாசம்...?
மொழிதான். மற்றபடி இரண்டும் ஒன்றுதான்.