Publish Date: Thu, 14 Jan 2016 (09:35 IST)
Updated Date: Thu, 14 Jan 2016 (09:40 IST)
கதகளி படம் நன்றாக வந்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் விஷால்.
நடிகர் சங்கத்தின் குருதட்சணை திட்டம் வெற்றி பெற்றது இன்னொரு மகிழ்ச்சியான விஷயம்.
நடிகர் சங்கம், நடிக்கிற படங்கள், திருமணம் என்று எதைக் கேட்டாலும் திருத்தமாக வருகிறது பதில்.
இதுவொரு த்ரில்லர் படம். ஒரு போன் அழைப்பு ஒரு மனிதனை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதுதான் கதை.
கொலைப்பழியில் மாட்டிக் கொள்ளும் ஒருவன் அதிலிருந்து தப்பிக்க உண்மையான கொலையாளி யார் என்று கண்டுபிடித்தாக வேண்டியிருக்கிறது. அதற்காக அவன் செய்கிற முயற்சிகள்தான் படம். ஒரே இரவில் நடக்கிற கதை.
கேதரின் தெரேசாவுடன் முதல்முறையாக இணைந்திருக்கிறீர்கள்...?
கேதரின் பார்க்கவே ரொம்ப அழகான நடிகை. இந்தக் கதைக்கு அவர்தான் பொருத்தமானவர். திரையில் ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான காதல் ஜோடிகளாக நாங்க தெரிவோம்.
ராதாரவியுடன் நடிக்கிறீர்களே?
நான் ஒருவிஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். சினிமா வேறு, நடிகர் சங்கம் வேறு. சங்க தேர்தலின் போது அவர் என்னை கடுமையாக விமர்சித்திருக்கலாம்.
அதற்காக ஒரு நடிகராக அவரை நான் விட்டுக் கொடுக்க முடியாது. கதையும் சந்தர்ப்பமும் அமைந்தால் சரத்குமாருடன் நடிக்கவும் நான் தயார்.
சொன்னபடி நடிகர் சங்கப் பொறுப்புக்கு வந்துவிட்டீர்கள், அடுத்து திருமணம்தானே?
கல்யாணத்துக்கு நான் இன்னும் தயாராகலை. என் வாழ்க்கையை மாற்றுகிற அளவுக்கு திருமணம் முக்கியமான விஷயம்.
கணவன் என்கிற பொறுப்பு சாதாரணமானதில்லை. அதனால், இப்போதைக்கு திருமணம் செய்யும் திட்டம் இல்லை.
உங்களுக்குப் பிறகுதான் எனக்கு திருமணம் என்கிறாரே ஆர்யா?
எழுதி வச்சுக்குங்க, ஆர்யாவோட திருமணம்தான் முதலில் நடக்கும். இதுக்கு மேல அவனை வச்சிருந்தா சமூகம் தாங்காது.
சீக்கிரம் திருமணம் செய்து வைக்கிறது நல்லது. எனக்கு தெரிந்து இந்த வருஷமே ஒரு முடிவுக்கு வந்திடுவான்.
நடிகர் சங்க பொறுப்பு உங்களை மாற்றியிருக்கிறதா?
பார்ட்டி, சொகுசு வாழ்க்கை எல்லாத்தையும் மூட்டைகட்டிட்டேன். ஆர்யாவுடனும், மற்ற நண்பர்களுடனும் வாரம் ஒருமுறை மட்டும் சந்திக்கிறேன்.
நல்ல டீம் அமைஞ்சிருக்கு. செய்ய வேண்டியது நிறைய இருக்கு.