Publish Date: Wed, 19 Aug 2015 (09:08 IST)
Updated Date: Wed, 19 Aug 2015 (09:13 IST)
மூன்றாண்டுகளுக்குப் பிறகு சிம்புவின் வாலு வெளியாகியிருக்கிறது. காலதாமதம் ஏற்பட்டாலும், வாலு பாக்ஸ் ஆபிஸில் மோசமில்லாத வசூலை பெற்றிருக்கிறது. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தைவிட இதற்கே அதிக வரவேற்பும் வசூலும். அந்த மகிழ்ச்சியில் சிம்பு, டி.ஆர்., தாணு ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சிம்பு பதிலளித்தார்.
வாலு எப்படி போகிறது?வாலு பல பிரச்சனைகளைத் தாண்டி வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறது.
வாலு படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பிலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள்?
இப்படத்தின் மூலம் சினிமாவில் நான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்று புரிந்துக் கொண்டேன். என்னதான் நல்ல நடிகராக இருந்தாலும், ஒரு படம் வெளிவருவதும், அது வெற்றி பெறுவதும் கடவுள் கையில்தான் இருக்கிறது.
இந்த நேரத்தில் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?
இப்படம் வெளிவருவதற்கு காரணமாக இருந்த டி.ராஜேந்தர், விஜய், தாணு, ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரஜினி என்ன கூறினார்?
படம் வெளியான அன்று ரஜினி படத்தை பார்த்து என்னை அழைத்து, படம் நன்றாக இருக்கிறது. மூன்று வருடம் கழித்து படம் வந்தாலும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். இதை நீ தக்க வைத்துக்கொள் என்றார். மேலும், இனிமேல் வரவிருக்கும் படங்களில் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள் என்றார். ரஜினி இவ்வாறு கூறியது மிகவும் சந்தோஷமளித்தது.
அஜித், விஜய் இருவரில் நீங்கள் இப்போது யாருக்கு ரசிகர்?
சினிமா என்பது குடும்பம். அஜித், விஜய் இருவருக்கும் நான் ரசிகன். நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் போல் செயல்பட்டு வருகிறோம்.
நடிகர் சங்க தேர்தலில் உஙகள் ஆதரவு யாருக்கு?
நான் விஜய்காந்த் தலைவராக இருந்ததிலிருந்து உறுப்பினராக இருக்கிறேன். தற்போது சரத்குமார் தலைவராக இருக்கிறார். விஷால் அணி அவரை எதிர்த்து போட்டியிடுகிறார்கள். என்னை பொறுத்தவரை அணிகள் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும்.
எப்போது திருமணம்?
என்னுடைய திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார். நான் தற்போது சிவன், சாய்பாபாவை வணங்கி வருகிறேன்.