Publish Date: Wed, 25 Nov 2015 (11:26 IST)
Updated Date: Wed, 25 Nov 2015 (11:31 IST)
ஸாரியில் நடிக்க வேண்டுமா? இல்லை சேரியில் நடிக்க வேண்டுமா? எதற்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தயார். அவரது இந்த டெடிகேஷன் பட வாய்ப்புகளை அவருக்கு பெற்றுத் தருகிறது. நடிப்பைப் போலவே ஐஸ்வர்யா ராஜேஷின் பேச்சும் ரொம்பவே ஓபன். ஹலோ நான் பேய் பேசுகிறேன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஐஸ்வர்யா ராஜேஷின் பேட்டிதான் ஹைலைட்.
ஹலோ நான் பேய் பேசுகிறேன் படத்தில் உங்களுக்கு என்ன வேடம்?
இந்த படத்தில் நான் அழகான பேயாக நடித்து இருக்கிறேன்.
காக்கா முட்டையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, சேரிப் பெண்ணாக நடித்தீர்கள். இதில் பேய். மற்ற நடிகைகள் போல் நாயகியாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லையா?
கதாநாயகியாகத்தான் நடிக்கவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்களால் பாராட்டப்படுகிற கதாபாத்திரங்களில் நடித்தால் போதும். அது ஒரு காட்சி அல்லது இரண்டு காட்சியாக இருந்தாலும் பரவாயில்லை.
இந்தப் படத்தில் ஓவியாவும் நடித்திருக்கிறாரே?
ஓவியா பொறாமை இல்லாத நடிகை. அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
படப்பிடிப்பில் உங்களுக்குள் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டதா?
இரண்டு கதாநாயகிகள் இணைந்து நடித்தால் பிரச்சினை வரும் என்று சொல்வார்கள். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
சினிமாவில் உள்ள உங்களின் தோழிகள் யார்?
ஓவியாவைப் போல் நந்திதா, காயத்ரி ஆகியோரும் எனக்கு தோழிகள் தான்.
காக்கா முட்டை உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் அல்லவா?
ஆமாம். காக்கா முட்டை படத்துக்குப்பின் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறேன்.
உங்களுக்கு நடிகர்கள் சிபாரிசு செய்வதாக கூறப்படுகிறதே?
அது உண்மை தான். நடிகர்கள் எனக்கு சிபாரிசு செய்கிறார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. வைபவ்கூட புதிய படம் ஒன்றில் நடிக்க எனக்கு சிபாரிசு செய்தார்.
சினிமாவில் உங்கள் ஆசை, லட்சியம் என்ன?
நான் நிறைய படங்களில் நடிக்கவேண்டும். சினிமாவில் நீடித்து இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
சம்பளத்தை உயர்த்திவிட்டீர்களாமே?
காக்கா முட்டை படத்துக்குப்பின் நான் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக பேசுகிறார்கள். அதுபற்றி கவலையில்லை. ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை ரூ.20 லட்சம் சம்பளம் வாங்கக்கூடாதா என்ன.
கிசுகிசுக்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
கிசுகிசுக்கள் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஒரு நடிகையின் மார்க்கெட் அந்தஸ்தை உயர்த்துவதற்கு அவை உதவி செய்வதாக கருதுகிறேன். அதனால் யாருடன் என்னை இணைத்து பேசினாலும் கவலைப்படப்போவதில்லை.