Publish Date: Wed, 18 Feb 2015 (10:11 IST)
Updated Date: Wed, 18 Feb 2015 (10:17 IST)
தெலுங்கு, இந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் குறுகிய காலத்தில் நடித்தவர் அதிதி செங்கப்பா. தமிழில் மூணே மூணு வார்த்தை படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கும் அவர் தனது படம் குறித்தும், தன்னை குறித்தும் கூறியவை உங்களுக்காக.
நான் பிறந்தது பெங்களூரு. டெல்லி ஸ்ரீ ராம் காலேஜில் படித்தேன். என்னுடைய அப்பா ராஜ் செங்கப்பா கன்னடர். அம்மா உஷா ஒரு தமிழர். நான் பாதி கன்னடம், பாதி தமிழ்.
மூணே மூணு வார்த்தை படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
எனக்கு இந்தப் படம் புது அனுபவம். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படம் ஒன்றில் நான் இப்போதுதான் முதல்முறையாக நடிக்கிறேன்.
அப்படி நடித்ததால் என்ன மாதிரி அனுபவங்கள் கிடைத்தன?
இரண்டு மொழி படம் என்பது எனக்கு சவாலாக இருந்தது. பெரும்பாலான இடங்களில் தமிழுக்குப் பதில் தெலுங்கில் பேசி சொதப்பினேன். அது பரவாயில்லை. தமிழில் ஒரு நாயகன், தெலுங்கில் வேறு ஒருவர். ஒருவரிடம் காதல் பேசி நடித்துவிட்டு சில நிமிடங்களில் வேறெnருவரிடமும் அதே முகபாவத்துடன் காதல் செய்வது உண்மையிலேயே கஷ்டமாக இருந்தது.
இரண்டு பேரையும் ஒரே மாதிரி காதல் செய்தீர்களா?
அப்படியில்லை. ஒருவரிடம் நன்றாக காதல் செய்தேன். இன்னொருவரிடம் சண்டைக் காட்சிகளில் நன்றாக சண்டையிட்டேன்.
ஈடுபாட்டுடன் காதல் செய்த அந்த அதிர்ஷ்டசாலி ஹீரோ யார்?
ஐயோ சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். எல்லாம் நடிப்புதான், தப்பா எடுத்துக்காதீங்க.
நடிக்க வரும்முன் இசையில் அதிக ஆர்வம் காட்டியதாக கேள்விப்பட்டோம்?
இசைதான் என்னுடைய முதல் காதல். முறையாக பியானோ கற்றிருக்கிறேன். ஹிந்துஸ்தான் கிளாசிகல், வெஸ்டர்ன் எல்லாம் தெரியும்.
மூணே மூணு வார்த்தையில் உங்க கதாபாத்திரம் என்ன?
படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் அஞ்சலி. தைரியமான, தெளிவான பெண். அஞ்சலியை ஹீரோ அர்ஜுன் எப்படி குழப்புகிறான் என்பதுதான் படத்தின் மையக்கதை. இயக்குனர் மதுமிதா அதை ரொம்ப நன்றாக எடுத்திருக்கிறார்.
தமிழில் என்னென்ன வார்த்தைகள் தெரியும்?
மூணே மூணு வார்த்தைகள்தான். எனக்கு ரொம்பப் பசிக்குது. ஷுட்டிங் ஸ்பாட்டில் நான் அதிகம் பயன்படுத்தியது இந்த வார்த்தைகள்தான்.
இந்தியிலும் நடித்திருக்கிறீர்கள்...?
எக்ஸ் என்ற படத்தில் நடித்தேன். பத்து இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கிய பத்து படங்களின் தொகுப்பு எக்ஸ்.
தற்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
மூணே மூணு வார்த்தை முடிந்துவிட்டது. அப்புறம் தமிழில், கொஞ்சம் காபி கொஞ்சம் காதல். தெலுங்கில் ருத்ரம்மாதேவி.
ருத்ரம்மாதேவியில் உங்களுக்கு என்ன வேடம்?
அதில் ருத்ரம்மாதேவியாக வரும் அனுஷ்காவின் சகோதரியாக நடித்திருக்கிறேன்.
Mahalakshmi
Publish Date: Wed, 18 Feb 2015 (10:11 IST)
Updated Date: Wed, 18 Feb 2015 (10:17 IST)