Publish Date: Wed, 06 Jan 2016 (20:30 IST)
Updated Date: Thu, 07 Jan 2016 (13:14 IST)
த்ரிஷா சினிமாவுக்கு வந்து 13 வருடங்கள் ஆகிறது. இவ்வளவு வருடங்கள் நாயகியாக ஒருவர் தாக்குப் பிடிப்பது அபூர்வம்.
13 வருடங்கள் கழிந்த நிலையில் த்ரிஷாவுக்கென்றே தனித்துவமான கதாபாத்திரங்களை உருவாக்குகிறார்கள். இது குறித்து தனது வியப்பை த்ரிஷா வெளிப்படையாக பதிவு செய்தார்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே, எப்படி?
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றால் வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது எனது சித்தாந்தம். இன்பத்தையும் துன்பத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டால் ஆனந்தம் நம்மை விட்டு அகலாது.
இந்த பிஸி ஷெட்யூல்டிலும் உங்களை எப்படி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கிறீர்கள்?
மாதத்தில் 3 வாரங்கள் மட்டுமே நடிக்கிறேன். மற்ற நாட்களை ஓய்வுக்கு ஒதுக்குகிறேன். மே, டிசம்பர் மாதங்களில் தோழிகளுடன் வெளிநாடுகளை சுற்றிப் பார்க்க போவதை வழக்கமாக வைத்து இருக்கிறேன்.
இரவு பகலாக படப்பிடிப்புகளில் பங்கேற்பதால் உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்திக்கொள்ள இதுபோன்ற ஓய்வுகள் தேவைப்படுகிறது.
உங்கள் தோற்றம் 13 வருடத்துக்கு முன் பார்த்தது போலவே உள்ளது. உடம்பை எப்படி மெயின்டெய்ன் செய்கிறீர்கள்? உங்கள் டயட்...?
சாப்பாடு விஷயங்களில் எனக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. நான் ஒரு சாப்பாட்டு பிரியை. சாக்லேட் என்றால் ரொம்ப இஷ்டம். சமைக்க தெரியாது. நூடுல்ஸ் மட்டும் பண்ணுவேன்.
காய்கறி கூட்டு, பருப்பு குழம்பும் சமைக்க தெரியும். எவ்வளவு சாப்பிட்டாலும் எடை கூடாமல் ஒல்லியாக இருப்பதற்கு எனது ‘ஜீன்’ காரணம். யோகா, தியானம் போன்றவைகளை தவறாமல் பண்ணுகிறேன்.
13 வருடங்களாக திரைத்துறையில் இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இது என்னுடைய அதிர்ஷ்டம். தினமும் புதுமுக நடிகைகள் நிறையபேர் வருகிறார்கள். ரசிகர்களும் புதிய நடிகைகளை ரசிக்கிறார்கள். இவர்கள் மத்தியில் இத்தனை காலம் நீடித்து இருப்பது சாதாரணமானது அல்ல. என்னை மனதில் வைத்து கதை, கதாபாத்திரங்களை உருவாக்குகிறார்கள். இது பெருமையாக இருக்கிறது.
இப்போதும் நாயகியாக நடிப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
ரசிகர்கள் விரும்புவதால்தான் வாய்ப்புகள் வருகின்றன.
நடிக்க வந்த புதிதில் இருந்த பயம் இப்போது போய்விட்டதா?
எனக்கு இப்போதும் பயமாக இருப்பது நடனம். பாடல் காட்சிகளில் நடனம் ஆட வேண்டும் என்று அழைக்கும் போதெல்லாம் மனதில் உதறல் எடுக்கும். பாடலுக்கு நடனம் ஆடுவது என்பது மற்ற நடிப்பு போல எளிதானது அல்ல.
பாடல் காட்சிகளில் உதடு அசைய வேண்டும். கை கால்கள் ஆடவேண்டும். முகபாவங்களும் நடனத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும். இத்தனையும் ஒரே நேரத்தில் சரியாக இருந்தால்தான் காட்சி நன்றாக வரும். எனவே நடனம் ஆட அழைக்கும் போதெல்லாம் முதல் படத்தில் ஆடும்போது எப்படி பயந்தேனோ அதே பயம் இப்போதும் வருகிறது.
உங்களின் எதிர்கால திட்டம்?
நான் சாப்பாட்டு பிரியை என்பதால் எதிர்காலத்தில் ஓட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது லட்சியமாக இருக்கிறது. அதற்கான நேரம் வரும்போது ஓட்டல் தொடங்குவேன்.