Publish Date: Fri, 27 Jun 2014 (11:42 IST)
Updated Date: Fri, 27 Jun 2014 (11:58 IST)
நந்தா நடித்த அதிதி இன்று வெளியாகியுள்ளது. தனது கரியர் லிப்டாக அதிதி இருக்கும் என்று நந்தா மட்டுமில்லை படத்தை இயக்கிய பரதனும் நம்புகிறார். இந்த நேரத்தில் படம் குறித்தும், பரதன் குறித்தும் நந்தா என்ன சொல்கிறார், பார்ப்போம்.
முதல்ல இயக்குனர் பரதன் சார் பற்றி சொல்லுங்க...?
பரதன் சாரைப் பற்றி பேசியாகணும். என்னுடைய படம் வெற்றியடைஞ்சிருக்கலாம், தோல்வியடைஞ்சிருக்கலாம். ஆனால் எல்லா இயக்குனர்களுமே எனக்கொரு பரிமாணத்தை தந்திருக்காங்க, வேலூர் மாவட்டம் படம் முதற்கொண்டு. அதேமாதிரி நான் வொர்க் பண்ணுன டைரக்டர்ஸ் எல்லாருமே எனக்கு கம்பர்ட்டபிளா இருந்திருக்காங்க. மோஸ்ட் கம்பர்டபிளா பரதன் சார் இருந்தார்னு சொல்லலாம். எனக்கு எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்து என்னை செட்ல நல்லா பார்த்துகிட்டார்.
நல்லா பார்த்துகிட்டார் என்றால்...?
ஆக்டர்ஸ் எப்போதுமே ஸ்கிரிப்ட்ல ரைட் சைடுல இருக்கிற டயலாக்கைவிட லெப்ட் சைடுல இருக்கிற டிஸ்கிரிப்ஷன்தான் முதல்ல படிச்சு தெரிஞ்சுக்குவாங்க. என்ன நடக்குது மத்த கேரக்டர்ஸ் என்ன பண்ணுது நாம என்ன பண்ணணும் மூவ்மெண்ட்ஸ் எப்படி இருக்கணும்னு அதைப் படிச்சுதான் தெரிஞ்சுப்பாங்க. எந்தப் படத்தோட ஸ்கிரிப்ட்லயும் நான் அப்படிதான் படிப்பேன்.
ஆனா இந்த ஸ்கிரிப்ட்ல அப்படி படிக்க வேண்டிய அவசியம் இருக்கலை. அந்த அளவுக்கு கேரக்டரையும் சிச்சுவேஷனையும் விளக்கி என்னை முழுமையா ட்ரெய்ன் பண்ணி ஒரு பவர்ஃபுல்லான கேரக்டரை எனக்கு தந்தார். அதே மாதிரி படத்துல வொர்க் பண்ணுன அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் பற்றி நான் கண்டிப்பாக சொல்லியாகணும். மோகன், முத்துக்கிருஷ்ணன், சிவப்பிரகாஷ், காமேஷ், ஆறுமுகம் அப்புறம் பாரதி. இவங்க எல்லாருக்கும் நான் நன்றியை சொல்லிக்கிறேன்.
கேமராமேன் ஜெய் பற்றி...?
ஈரம் படத்துல மனோஜ் பரமஹம்சா கூட வொர்க் பண்ணுனேன். இப்போ அவர் பெரிய கேமராமேன். அவரோட முதல் படம் ஈரம் பண்ணும்போது அவ்வளவு சின்சியரா 130 நாள் பார்த்துப் பார்த்து ஷுட் பண்ணுனார்.
இந்தப் படத்துல ஜெய்கூட வொர்க் பண்ணும்போது ஈரத்தில் மனோஜ் பரமஹம்சாகூட வொர்க் பண்ணுன மாதிரியே இருந்திச்சி. அந்தளவுக்கு முதல் படத்துல குவாலிட்டி கொடுத்திருக்கார். இந்தப் படத்தை பார்க்கும் போது எனக்கே புதுசா இருந்தது.
இசை...?
பரத்வாஜ் சார் அழகான ஒரு ஆல்பம் தந்திருக்கார். எப்பவுமே ஒரு ஆக்டர்க்கு சாங்ஸ்ல பெர்பார்ம் பண்ணும் போது அந்த சாங் பிடிச்சிருக்கணும், அதுல வர்ற லிரிக்ஸ் பிடிச்சிருக்கணும். அப்போதான் அந்த சாங்குக்குள்ளால போக முடியும்.
என்னோட கரியர்லயே மிகப்பெரிய ஹிட்டான பாடல், ரகசியமானது காதல். அந்தப் பாடலை முதல்முறை கேட்டப்போ என்னுடைய கரியர்ல இந்தப் பாட்டு மிகப்பெரிய ஹிட்டாகும்னு நினைச்சேன். அதிதி சாங் கேட்டபோது இது ரகசியமானது காதலைவிட பெரிய ஹிட்டாகும்னு தோன்றியது.
உடன் நடித்திருக்கும் தம்பி ராமையா பற்றி...?
தம்பி ராமையாகூட கோடம்பாக்கம் படத்தில் நடிச்சிருக்கேன். அவர் எனக்கு ஒரு அண்ணன் மாதிரி.
கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் கழிச்சு இந்த செட்ல அவரை சந்திச்சேன். என்னை ஒவ்வொரு நாளும் என்கரேஜ் பண்ற ஒரு அண்ணன்னு அவரை சொல்லலாம்.
இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரம் வில்லன். அதில் நடித்திருக்கிற புதுமுகம் பற்றி சொல்லுங்க...?
நிகேஷ்ராம் இந்தப் படத்துல அறிமுகமாகியிருக்கார். ரொம்ப சிறப்பா செய்திருக்கிறார். உண்மைச் சொல்லணும்னா என்னைவிட பவர்ஃபுல் கேரக்டர் அவருக்கு. என்ன கதை என்ன கேரக்டர்னு தெரியறதுக்கு முன்னாடி டைரக்ஷன் பரதன் சார்னு சொன்னதும் நடிக்க ஒத்துகிட்டேன்.
அப்புறம் மலையாளம் காக்டெய்ல் ரீமேக்குன்னு சொன்னதும் நான் எந்தக் கேரக்டர் பண்றேன்னு கேட்டேன். ஹஸ்பண்ட் கேரக்டர்னு சொன்னார். சரி, அந்த வில்லன் கேரக்டர் யார் பண்றாங்கன்னு கேட்டேன். ஒரு புதுமுகம்னு சொன்னார். ஏன் சார் புதுமுகம்னு கேட்டதுக்கு, வேண்டாம், தெரிஞ்ச நடிகர்கள் யாரும் அதை பண்ண முடியாது. பண்ணுனா அந்த கேரக்டரோட சஸ்பென்ஸ் போய்டும்னார். அவர் சொன்ன மாதிரி ரொம்ப அற்புதமா நடிச்சிருக்கார்.
அவர் இந்தப் படத்தோட தயாரிப்பாளர் இல்லையா...?
அவர் இந்தப் படத்தோட ஒன் ஆஃப் த புரொடியூசர். ஒரு நடிகருக்கு மினிமம் இவ்வளவு பிசினஸ் இருக்கும்.
இவ்வளவுதான் நாம் செலவு பண்ண முடியும் அப்படீன்னு எல்லாம் இல்லாம இந்தப் படத்தை தயாரிச்சிருக்கார். ஷெட்யூல்ட் எல்லாமே பிளான் பண்ணுனதைவிட டபுள் மடங்காச்சு. கதைக்காக அதை பெரிசுப்படுத்தாம எல்லாமே செய்து தந்தார்.