தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 44 தமிழ் அகதிகள் ஒரு வார காத்திருப்புக்கு பின்னர் இந்தோனேசியாவில் தரையிறக்கப்பட்டனர். ஏசெஹ் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று அவர்களை சந்திப்பதற்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின்(UNHCR) அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 13,000 த்திற்கும் மேற்பட்ட அகதிகள் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் வேறு நாட்டில் குடியமர்த்தப்பட காத்திருப்பதால், இவர்களை இந்தோனேசிய அரசு ஏற்குமா என்ற அச்சம் உள்ளது. இவர்களை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க அனுமதித்தால் அது அவர்களின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்கிறது மனித உரிமை அமைப்புகள்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் எங்களுக்கு நல்ல வாழ்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர் அகதிகள். தாங்கள் அதற்காகவே ஆஸ்திரேலியாவுக்கு கடல் பயணம் மேற்கொண்டதாக கூறுகின்றனர். அதற்காக ஒரு நபருக்கு ஒன்றரை லட்சம் இந்திய ரூபாயை ஏஜெண்ட்டுக்கு கொடுத்து வந்ததாக குறிப்பிட்டுள்ளனர். தங்களை கூட்டி வந்த நபர் இடையில் தப்பி விட்டதாகவும் சொல்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் அதிகமான முகாம்களில் 60,000 த்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் இருக்கின்றனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு தொடர்ந்து இந்தியாவில் குடியுரிமை மறுக்கப்படுவதால் இப்படியான முடிவை அகதிகள் எடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இலங்கையில் போர் சூழல் இல்லை என்றாலும் அங்கு நடக்கும் தொடர்ச்சியான கைதுகளும் விசாரணைகளும் தமிழகத்திலுள்ள அகதிகளுக்கு அச்சத்தினை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் நல்ல வாழ்விற்கான தேர்வு ‘ஆஸ்திரேலியா பயணம்’ என்ற கருத்து அகதிகளிடம் நிலவுகிறது.
ஆனால் ஆஸ்திரேலியாவின் நிலைக்குறித்து அண்மையில் குறிப்பிட்டுள்ள ஆஸ்திரேலிய எல்லைகள் இறைமை நடவடிக்கைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொற்றெல்,’படகுகளை திருப்பி அனுப்பும் கொள்கைகளில் எதிர்வரும் ஆஸ்திரேலிய அரசாங்க தேர்தல் தாக்கம் எதனையும் தராது. ஆஸ்திரேலியா தன்னுடைய கரையோர பாதுகாப்பு கொள்கையை மாற்றுகிறதாக ஆட்கடத்தல்காரர்கள் சொல்வார்கள். ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணிக்க முயற்சிக்கும் எந்தவொரு ஆட்கடத்தல் படகும் திருப்பி அனுப்பப்படும்’ என்கிறார்.
இந்த சூழலில் இந்தோனேசியாவில் உள்ள 44 தமிழ் அகதிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
Video Courtesy: Fairfax Media