தேசியத் தலைவர் என்று கூறுகின்ற ஒரேயொரு தலைவர் தான் இருந்திருக்கிறார், அது வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டும் தான் என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ள சீ.வீ.கே. சிவஞானம், “தமிழ் தேசிய இனத்தினை பொறுத்தவரையில் தமிழ் தேசிய இனத்தின் தலைவராக ஆரம்பத்திலிருந்து தந்தை செல்வா இருந்து வந்திருக்கிறார்.
அதற்கு பின்னால் இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் இலங்கை தமிழரசு கட்சியின் உயர் தலைவராகவும் இருக்கின்ற சம்பந்தன் அவர்களே தமிழ் தேசிய இனத்தின் தலைவராக இருக்கிறார்.
தமிழ் தேசியம் என்று பேசுகின்ற நாங்கள் எல்லோரும் தேசியத்தலைவர் என்று கூறுகின்ற ஒரேயொரு தலைவர்தான் இருந்திருக்கிறார்.
அது, வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டும்தான். அதற்கு முன்பும் அப்படி ஒரு தேசியத் தலைவர் இருந்ததில்லை; அதற்கு பின்னும் இன்னுமொரு தேசியத்தலைவர் உருவாக போவதில்லை என்பது எங்களுடைய தெளிவான நிலைப்பாடு. பிரபாகரனுக்கு பின்னும் முன்னும் பிரபாகரன் மட்டும் தான் தேசியத்தலைவர்” என்றார்.