இலங்கையின் சிறைகளில் விசாரணையின்றி நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
தேசிய சிறைக்கைதிகள் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்திலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது அமைப்புக்களும், அரசியல் கைதிகளின் குடும்பங்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன.
யாழ்ப்பாண பேருந்து நிலையத்துக்கு அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோரும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சிறைக் கைதிகளின் உறவினர்களுடன் கலந்து கொண்டிருந்தனர்.
'போரில் ஈடுபட்டிருந்தவர்களை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய முடியுமானால், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரு பொறிமுறையை ஏற்படுத்த முடியாதா?', 'அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமல் இன நல்லிணக்கம்- தேசிய ஒற்றுமை சாத்தியப்படுமா?' போன்ற கேள்விகளை அவர்கள் எழுப்பியிருந்தனர்.
'பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பலிக்கடாக்களாக அப்பாவி அரசியல் கைதிகள் ஆண்டுகள் பல கடந்தும் சிறைகளில் வாடலாமா?' என்ற கோஷத்தையும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பியிருந்தனர்.
சிறப்பு நீதிமன்றங்கள் இன்னும் இல்லை
200க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் இலங்கையின் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆனாலும், சிறைச்சாலைகள் தவிர்ந்த பூஸா போன்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதிகளை தடுத்து வைக்கும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் உண்மையான எண்ணிக்கை என்ன என்பது அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்படவில்லை என்று மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்திருக்கின்றன.
இதேவேளை சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சிலர் பல ஆண்டுகளாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிலருக்கு எதிராக ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள கைதிகளின் வழக்குகள் 6 மாதங்கள் அல்லது அதற்கு அதிகமான காலத்திற்குத் தவணையிடப்பட்டு இழுத்தடிக்கப்படுவதாகவும் மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருக்கின்றன.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வழக்குகள் விரைவுபடுத்தப்படும் என்று அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவ்வாறான நடவடிக்கைகள் ஏடுக்கப்படவில்லை என்று உறவினர்களும், சிறைக் கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து வரும் அமைப்புக்களும் கூறுகின்றன.