Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடமாகாண சபை செயல்பாடு குறித்து உறுப்பினர் எதிர்ப்பு

வடமாகாண சபை செயல்பாடு குறித்து உறுப்பினர் எதிர்ப்பு
, புதன், 26 ஆகஸ்ட் 2015 (06:29 IST)
இலங்கையின் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள எந்தவொரு பிரேரணையும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜி.டி. லிங்கநாதன் குறைகூறியுள்ளார்.

வடமாகாண சபையில் கடந்த காலங்களில் சுமார் 200 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதை நினைவுபடுத்திய லிங்கநாதன், அந்தப் பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவதில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என எழுத்து மூலம் கேள்வி செவ்வாய்க் கிழமையன்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு முன்னரும், இது குறித்து சபையின் கவனத்தை ஈர்த்துள்ளதாகக் கூறும் லிங்கநாதன், அதனைக் கவனத்திற் கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

12 கேள்விகள் கொண்ட பிரசுரங்களைத் தனது ஆடையில் ஒட்டியபடி செவ்வாய்க்கிழமையன்று சபைக்கு வந்த லிங்கநாதன், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு அந்தக் கேள்விகள் அடங்கிய கடிதத்தையும் அளித்திருக்கிறார்.

இந்த விஷயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவைத் தலைவர் சபையில் தெரிவித்திருப்பதாக லிங்கநாதன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

இந்த விவகாரம் அவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, முதலமைச்சர் வெளியில் சென்றிருந்ததாகவும் லிங்கநாதன் தெரிவித்தார்.

இதற்கிடையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இலங்கை அரசுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்க முன்வருமாறு இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், கனடா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொண்டு வந்த தீர்மானம் வடமாகாண சபையில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

அந்தத் தீர்மானம் சபையில் முன்மொழியப்பட்டபோது, ஆளும் கட்சி உறுப்பினர்களோ அல்லது ஏனைய உறுப்பினர்களோ வழிமொழியாததன் காரணமாக தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கூறினார்.

சபை ஒழுங்கு விதிகளின்படி 6 மாதங்களுக்குப் பின்பே மீண்டும் இதே தீர்மானத்தை சபையில் கொண்டுவர முடியுமென தனக்குக் கூறப்பட்டிருப்பதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil